‘மதம்’ பிடித்த பாஜகவைத் தூக்கி எறிவோம்!
ஹரியானாவின் நூ மாவட்டத்தில் மதக் கலவரம் ஏற்பட்டு இதுவரை பத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர் என்று தெரிய வருகிறது.. பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து நிலவும் பதற்றத்தாலும், ஊரடங்கு உத்தரவாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒரு சிலரின் சுயநலத்திற்காக இத்தனை மக்கள் வதைக்கப் படுகின்றனர். மக்களை ஒருவருக்கொருவர் மோதச் செய்யும் கொடூரச்செயல் ஒருசமூக அமைப்பில் வாடிக்கையான ஒன்றாக பழக்கப்படுத்தப்பட்டு வருவது மனிதநேயத்திற்கு எதிரானது. இதனைத் தொடர் செயல்பாடாகவே மேற்கொண்டு வருகின்றன பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் பிற சங்க் பரிவார அமைப்புகள்.
மதங்கள் இருக்கிற வரைக்கும் மதக் கலவரங்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் நவீன வாழ்க்கை முறையில் மதங்களின் தாக்கம் குறையத் தொடங்கினாலும், மக்கள் மதங்களைக் கடந்து ஒற்றுமையாக வாழ நினைத்தாலும் மதவெறியர்கள் விடுவதில்லை. அரசியல் கொள்கை மதத்தத்துவங்களின் அடிப்படையில் வகுக்கப்படுமானால் அங்கு மதம் மக்களின் நம்பிக்கையாக இல்லாமல் அடையாளமாகவும், அடிப்படைவாதமாகவும், தீவிரவாதமாகவும் மாறிவிடும். மதங்கள் இருக்கிற வரைக்கும் மதத்தின் ஆதிக்கம் அரசியலில் இருந்து கொண்டேதான் இருக்கும். எத்தனைச் சீர்திருத்தவாதிகள் வந்து மதத்தையும், அரசியலையும் பிரிக்க நினைத்தாலும் இரண்டையும் இணைக்க பிற்போக்குவாதிகள் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். இந்தியா என்னும் நாட்டின் தோற்றுவாயிலிருந்து இன்று வரையிலும் இந்தப் போக்கைக் காண முடியும். இங்கு மதமே அரசியலின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. மதத்தின் பேரால் மாய்க்கப்பட்ட மனித உயிர்களின் புள்ளிவிவரத்தை வரலாறு பதிவு செய்து கொண்டே வருகிறது. மதக்கலவரத்தின் மூலமே இந்தியாவில் அரசியல் சக்தியாக வளர்ந்த வரலாறு உடையது இன்றைய ஒன்றிய அரசை ஆளும் பாஜக. அப்படி ஒரு கலவரத்தைத்தான் இப்போது ஹரியானாவிலும் நிகழ்ந்தியிருக்கிறது பா.ஜ.க.
“மேவாட்” என்று சொல்லப்படும் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களை ஒட்டிய பகுதிகள் மிகவும் பதற்றமானவை. அங்கு ஒரு பதற்றம் ஏற்படுமாயின் அது பெரிய அளவில் மற்ற மாநிலங்களிலும், இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும்கூடப் பரவக்கூடும். ஆகவே அந்தப் பகுதி கலவரத்திற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தின் அதிகாரம் பாஜகவிடம் இருப்பதால் சட்டம் ஒழுங்கைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் கலவரத்தை நடத்தி இருக்கிறார்கள் சங்பரிவார அமைப்புகள்.
ஹரியானாவின் நூ மாவட்டத்தில் நடைபெற்ற மதக் கலவரம் திட்டமிட்டே நடைபெற்ற ஒன்று என்பது அனைத்து ஊடகங்களிலும் சொல்லப்படும் கருத்தாக இருக்கிறது. இது யூகத்தின் அடிப்படையிலோ, அல்லது சில நிகழ்வுகளின் மையப் புள்ளிகளை இணைத்தோ அல்லது ஒப்பிட்டோ சொல்லப்படும் கூற்று அன்று. தரவுகளின் அடிப்படையில் உறுதியாகச் சொல்லப்படும் உண்மையாகும்.
விஷ்வ இந்து பரிஷத் நடத்திய பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா ஊர்வலத்திற்கு 2022 ஆம் ஆண்டு பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 2500. ஆனால் இந்த ஆண்டு 800 காவல் துறையினர் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் தொடர்ந்து வந்த வன்முறையைத் தூண்டும் பதிவுகள் ஒரு புறமும், வன்முறைக்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிந்த சூழல் இன்னொரு புறமும் இருக்க பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப் பட்டிருக்கிறது. இன்னும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு குளறுபடிகள் நடந்திருக்கின்றன. சட்டம் ஒழுங்கைக் காப்பதே ஒரு அரசின் தலையாய கடமை. ஆனால் வேலியே பயிரை மேய்வதைப் போல, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய வன்முறை ஹரியானாவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. மனிதஉயிர்கள் மதவாதிகளின் இச்சைக்குப் பலியாகியிருக்கின்றன.
பாஜக ஆட்சியில் வறுமை நிலை, வேலைவாய்ப்பின்மை பற்றிய புள்ளி விவரங்களை ஒன்றிய அரசின் நிறுவனங்களே வெளியிட்டு வரும் வேளையில், அவை பற்றிப் பேசவிடாமல் மதக்கலவரங்களைத் தூண்டித் திசை மாற்றி, அச்சமூட்டி தேர்தலுக்கான உத்திகளைத் தொடங்கி இருக்கிறது பாஜக.
ஏழை எளிய மக்கள், தினக் கூலிகள் இன்று ஹரியானாவை விட்டு அச்சத்தின் காரணமாகவும், வாழ்வாதாரத்தின் பாதிப்பு காரணமாகவும் அகதிகளாக வெளியேறி வருகிறார்கள். சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்களோ உயிர்ப்பயத்தில் ஒவ்வொரு நொடியையும் கழித்து வருகின்றனர்.
மதங்களை மறந்து மனித நேயம் கொண்ட கொள்கைகளைப் பின்பற்றும் கட்சிகளுக்கே மக்கள் அதிகாரம் அளிக்க வேண்டும். அந்த விழிப்புணர்வை தமிழ்நாட்டைப் போல வட மாநிலங்களிலும் ஏற்படுத்திட இன்று அமைக்கப்பட்டிருக்கும் இந்தியா(I.N.D.I.A) கூட்டணி தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பது மிகமிக அவசியமாகும்.
- மா.உதயக்குமார்