திராவிடப் பள்ளியின் அடுத்த ஆண்டிற்கான கதவுகள் திறக்கின்றன!
சென்ற ஆண்டு, தந்தை பெரியார் பிறந்த நாளில், நம் திராவிடப் பள்ளியை, அன்பிற்குரிய திமு கழகத் தலைவர், இன்றைய தமிழ் நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் இணைய வழியில் தொடக்கி வைத்தார். அன்றும், இன்றும் கொரோனாப் பெருந்தொற்று உலகைச் சூழ்ந்தே நிற்கிறது. அத்தொற்றுக் கிடையில்தான், பள்ளியைத் தொடங்கி, ஓராண்டையும் நிறைவு செய்திருக்கிறோம்!
ஆண்டுக்கு 300 மாணவர்கள் என்று திட்டமிட்டோம். ஆனால், அதனினும் கூடுதலாய் நம்மை நோக்கி ஆர்வத்துடன் வந்தவர்களைத் தடுக்க முடியவில்லை. முதலாண்டில் 516 நண்பர்கள் பள்ளியில் இணைந்தனர்.
தொடக்க நிலை, இடை நிலை, முதுநிலை என மூன்று நிலைகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தொடக்க நிலையில்தான் மிகுதியானவர்கள் இணைந்தனர். அவ்வாறு தொடக்க நிலையில் இணைந்த முன்னூறுக்கும் மேற்பட்டவர்களில், பெரும்பான்மையானவர்கள் அரசியல் தளத்திற்கு வெளியில் நின்றவர்களாகவும், இளைஞர்களாகவும் இருந்தமை கண்டு மகிழ்ந்தோம். நம் நோக்கம் அதுதான்.
அடுத்தடுத்த தலைமுறையினரைத் திராவிட இயக்கம் நோக்கி அழைத்து வருவதே திராவிடப் பள்ளியின் தலையாய எண்ணம் என்பதால், புதுப்புனலின் வருகை, நமக்குத் பேருவகை ஆயிற்று. சற்றொப்ப 40 பேர் வெளிநாட்டினர். அதுவும் மகிழ்ச்சியே!
திராவிட இயக்கத்தின் வரலாறு, கோட்பாடுகள், தாக்கம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு பாட நூல்கள் தயாராயின. எங்களின் வேண்டுகோளை ஏற்று, பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், திராவிட இயக்க ஆய்வாளர்கள், திராவிட இயக்க முன்னோடிகள் எனப் பலரும் உரிய பாட நூல்களை எழுதித் தந்தார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இணைய வகுப்புகளும் நடந்தன.
ஓராண்டு நிறைவு பெற்ற வேளையில், கடந்த 8 ஆம் நாள் (08.08.2021) மூன்று நிலையினருக்கும் தேர்வுகள் நடத்தப் பெற்றன. ஆர்வத்துடன் பள்ளியில் இணைந்தனர் என்றாலும், அவர்களுள் எத்தனை பேர் தேர்வுகளை எழுதுவார்களோ என்ற ஐயம் எங்களுக்கு இருந்தது, இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெறுவதனால் என்ன பயன் என்று கருதி எழுதாமல் விட்டுவிடுவார்களோ என்ற கவலை இருக்கவே செய்தது. ஆனால் எங்கள் கவலையைப் பொய்யாக்கி, ஏறத்தாழ 300 பேர், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு எழுதியுள்ளனர் என்பது பள்ளிக்குப் பெருமை சேர்க்கிறது.
முறையாகப் பாடத்திட்டங்களை வகுத்து, உரியவர்களிடம் எழுதி வாங்கி, அச்சிட்டு, அனைவருக்கும் அஞ்சல் வழியிலும், இணைய வழியிலும் அனுப்பி வைத்து, சென்று சேர்ந்து விட்டதா என்று சரி பார்த்து, இறுதியாக வினாத்தாள்களைத் தயாரித்து, தேர்வையும் நடத்தியுள்ள திராவிடப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்களின் பணி மிகப் பெரியது.
ஓரிருவர் செய்துவிடக் கூடிய பணியன்று இது! தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் மா. உமாபதி வழிகாட்டலில், முப்பதுக்கும் மேற்பட்டப் பேரவைத் தோழர்கள் குழுக்களாகப் பிரிந்து இப்பணியைச் சிறப்புற ஆற்றி முடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறேன்.
இப்போது தேர்வுத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. தேர்வு எழுதிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறப்பாக எழுதிக் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ள சிலருக்கு, வரும் செப்டம்பர் மாதம், பெரியார் பிறந்த நாளையொட்டி நடைபெறவிருக்கும் விழாவில், மேடையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இப்போது இரண்டாம் ஆண்டிற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. இந்த ஆண்டு, திராவிடப் பள்ளியில் சேர விரும்புவோர் ஆகஸ்ட் 15 ஆம் நாள் முதல் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். www.dravidapalli.com என்னும் இணையத்தளத்தில் உள்ள படிவங்களைப் பதிவிறக்கம் செய்து, முழுமையாக நிரப்பி, அஞ்சல் மூலமாகத் திராவிடப்பள்ளி முகவரிக்கு அனுப்பிவைத்திட வேண்டும்.
இவ்வாண்டு, தொடக்க நிலை, முதுநிலை என இரண்டு நிலைகள் மட்டுமே உள்ளன. தொடக்க நிலைப் பாடங்கள், வினா-விடை வடிவத்தில் எளிமையான அறிமுகமாக இருக்கும். முதுநிலைப் பாடங்கள், சற்று விரிவாகவும், விவாதங்களாகவும், ஆய்வு நோக்கோடும் அமைந்திருக்கும்.
ஓராண்டுக் கட்டணம் ரூ.1200/. விண்ணப்பிக்க இறுதி நாள் - ஆகஸ்ட் 31.
வாருங்கள் நண்பர்களே, திராவிடப் பள்ளியில் இணைந்து படியுங்கள், திராவிட இயக்கத்தைப் பரப்புங்கள்!
- சுப.வீரபாண்டியன்