வணக்கம். அண்மையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடிய அறுவர் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற வழிவகுத்துள்ளது. அத்தீர்ப்பினை வரவேற்று அவர்களுடைய விடுதலையில் அக்கறையுடைய பல்வேறு இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் பேசியும், எழுதியும் வருகின்றன. நீங்களும் ஓர் அறிக்கையை விடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சி!

அந்த அறிக்கையில் அய்யா பழ. நெடுமாறன் தொடங்கி 30-க்கும் மேற்பட்ட பல்வேறு தலைவர்களுக்கும், உணர்வாளர்களுக்கும், அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளீர்கள். ஆனால் அதில் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ள பெயர்கள் இரண்டு. ஒருவர் முத்தமிழறிஞர் கலைஞர், மற்றொருவர் பேராசிரியர் சுபவீ. இவர்கள் இருவரும் ஈழம் தொடர்பாகவும், எழுவர் விடுதலை தொடர்பாகவும் ஆற்றிய பங்களிப்பினை நாடறியும். ஏன், ஒரு காலத்தில் திராவிட இயக்க மேடைகளில், பயிற்சி பெற்ற நீங்களும் அறிவீர்கள். அப்படி இருந்தபோதிலும், இவ்விருவர் பெயரைச் சொல்வதிலிருந்து உங்களைத் தடுத்தது எது என்று தெரியவில்லை.

கடந்த 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் நாள் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்பு மாநாடு சென்னை தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. நீங்களும் அதில் கலந்து கொண்டீர்கள். தோழர் தியாகு, தோழர் தொல். திருமாவளவன், கவிஞர் கனிமொழி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டீர்கள். பேராசியர் சுபவீ அம்மாநாட்டில் நிறைவுரை ஆற்றினார். இராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று அம்மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில் நீங்கள் என்ன பேசினீர்கள் என்பது உங்களுக்கு இப்போது மறந்து போயிருக்கலாம். எனவே நீங்கள் பேசியவற்றை அப்படியே கீழே தருகிறேன்.

“இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் எவராவது பார்ப்பனர் இருந்திருந்தால் தூக்குத்தண்டனையை ரத்து செய்திருப்பார்கள். தூக்கு தண்டனையானாலும், ஆயுள் தண்டனையானாலும் சிறையை நிரப்பிக் கொண்டிருப்பவர்களானாலும் அதில் தொடர்புடையவர்கள் எல்லோரும் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதால், இங்கே மனித உரிமைச் சட்டங்கள் திரும்பிப் பார்க்க மறுக்கின்றன.

மரணம் என்பது ஒரு முடிவு. அது எப்படி தண்டனை ஆகும்? உண்மையில் தூக்குத் தண்டனையில் தண்டிக்கப்படுபவர், தூக்கிலிடப்படுபவர் அல்ல. அவரது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஆனால், அதில் தண்டிக்கப்படுவோர் தூக்கிலிடப்பட்டோரின் குடும்பத்தார்தான். இங்கே பேசிய தோழர் தியாகு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டவர்தான், அவர் தூக்கிலிடப் பட்டிருப்பாரேயானால், மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ என்ற பெரும் தொகுதி நமக்கு தமிழில் கிடைத்திருக்குமா? தூக்குத் தண்டனை என்பதே கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது. ஒருவன் கொலை செய்யப்படுவான் என்று ஆண்டவன் அவன் தலைவிதியை நிர்ணயித்து விட்டால், பிறகு கொலை செய்தவனை ஏன் தண்டிக்க வேண்டும். எல்லாம் ஆண்டவன் விதிப்படி நடக்கும் என்று நம்புகிறவன் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கூறுவதே ஆண்டவனுக்கு எதிரானது அல்லவா? நல்லவன் சொர்க்கம் போவான், கெட்டவன் நரகம் போவான் என்று நம்பிவிட்டால், பிறகு கடவுள் தண்டனையை மீறி இங்கே சிறைத்தண்டனை கொடு என்று உண்மையான பக்தர்கள் ஏன் கேட்கிறார்கள்.

ஒருவன் கொலை செய்யப்பட்டுச் சாவான் என்று தலையில் எழுதி வைத்த ஆண்டவனைத் தண்டிக்காமல், ஆண்டவன் விதித்த விதிப்படி செயல்பட்டவனை ஏன் தண்டிக்க வேண்டும்? தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற போராட்டத்துக்காக, தமிழ்நாட்டில் படையை உருவாக்கியவர் புலவர் கலியபெருமாள். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்தவர் நம் முதல்வர் கலைஞர். நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்து சாதிவெறி நிலப்பிரவுவை அழித்தொழிப்பு செய்த குற்றத்தின் கீழ் தூக்குத் தண்டனைக்கு உள்ளானவர் தோழர் தியாகு. அவரது தூக்குத் தண்டனையை ரத்து செய்தவரும் நம் தமிழ்நாடு முதல்வர் கலைஞர்தான். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பேரறிவாளன் உள்பட தூக்குத் தண்டனைக்கு உள்ளான எனது தமிழின சொந்தங்களை விடுதலை செய்யுமாறு நாங்கள் கலைஞரிடம் கோரிக்கை வைக்காமல் வேறு யாரிடம் கோரிக்கை வைக்க முடியும்?”

ஆம்! இது நீங்கள் பேசிய உரைதான். கண்களைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் வாசித்துப் பாருங்கள். உங்களுக்கே வியப்பாக இருக்கலாம். அன்று இப்படி எல்லாம் பகுத்தறிவு பேசிய நீங்கள்தான் இன்று முப்பாட்டன் முருகனுக்குக் காவடி தூக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது காலம் செய்த கோலமா இல்லை நீங்கள் போடும் வேடமா தெரியவில்லை.

அன்று திராவிட இயக்க மேடைகளில் கலைஞரின் புகழ் பாடியதும் நீங்கள்தான். என்ன செய்வது? அன்று திராவிடம் என்றால் இனித்தது. இன்று எட்டிக் காயாகக் கசக்கிறது. முருகனுக்குக் காவடி தூக்கியதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் திராவிடத்தை அழித்து விடலாம் என்று கனவு காணும் சில முட்டாள்களுக்குக் காவடி தூக்குவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

உங்கள் அறிக்கையில் கலைஞர் அவர்களின் பெயரையும், சுபவீ அவர்களின் பெயரையும் தவிர்த்திருப்பதை உங்கள் எஜமானர்கள் ரசிக்கலாம். என்ன செய்வது; அவர்கள் கோபித்துக் கொண்டால் உங்கள் நிலைமை என்னவாகும்? ஆனால் இங்கு மக்கள்தான் எஜமானர்கள். வரலாறு தேவையான பெயர்களை நிச்சயம் நினைவில் கொள்ளும். இவ்விருவரின் பெயர்களும் உங்கள் அறிக்கையில் இடம்பெறாமலிருக்கலாம். ஆனால் எழுவர் விடுதலைக்கான நெடிய போராட்டத்தின் வரலாற்றில் இவர்கள் இருவர் பெயர்களையும் தவிர்க்கவே முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

- வெற்றிச்செல்வன்

Pin It