இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் ஜூலை 19 அன்று கூடி நிறைவடைந்திருக்கிறது.
இக்கூட்டத் தொடரில் “அனைத்துப் பிரச்சனைகளையும்’’ அவையில் பேசிக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடியும், சபாநாயகர் ஓம்பிர்லாவும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் உறுதியளித்தார்கள்.
அதன்படி நாட்டின் மிக முக்கியப் பிரச்சனைகளான பெகாசஸ் ஒட்டுக் கேட்பு, வேளாண் சட்டம் உள்ளிட்டவைகள் குறித்துப் பேச வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வேண்டுகோள் அவை தொடக்கக்திலேயே மறுக்கப்பட்டது.
அன்று அவையில் மோடி பேசும் போது, தங்கள் கோரிக்கைகளை விவாதிக்க எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கினர். இந்தக் குரல்கள் ஓங்கி ஒலித்ததால் அதை “கூச்சல், குழப்பம்” என்று எதிர்கட்சிகளை ஊடகங்கள் சொல்லின. முக்கியத்துவமான அந்த பிரச்சனைகளைப் பேச எதிர்க்கட்சிகளை அனுமதித்து இருந்தால் இத்தகைய குழப்பமான விளைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
ஒன்றியத்தின் பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அப்போது அவையில் வாய்மூடி அமைதியாக இருந்தனர் என்பதே ஐயத்தை ஏற்படுத்துகிறது. மடியில் கனமிருந்தால் பயம் இருக்கத்தானே செய்யும் !
அவை கூச்சல், குழப்பங்களால் தடுமாறிக் கொண்டிருக்கும் போது கூட, எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்காமல், விவாதங்கள் நடத்தாமல் பா.ஜ.க அரசுக்குச் சாதகமானப் பல சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியதாக அறிவித்து இருக்கிறார்கள்.
எடுத்துக் காட்டாக அத்தியாவசியப் பாதுகாப்புச் சேவை சட்ட மசோதாவைச் சொல்லலாம்.
இச்சட்ட முன்வடிவின்படிப் பல தொழிற்சாலைகளைத் தனியாரிடம் விற்பனை செய்ய முடியும். தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், சிறைத் தண்டனை கொடுக்கவும் முடியும். இது போன்ற மசோதாக்கள் அவையில் விவாதிக்காமல் நிறைவேறியதாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
அவையில் இரண்டு பெண் உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறியிருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது. திட்டமிடப்பட்ட நாள்களுக்கு இரண்டு நாள்கள் முன்பே அவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்ததனால், அவைக்கு வெளியே மக்கள் மத்தியில் போராட்டம் செல்கிறது.
அமைதியாக நடைபெற வேண்டிய மக்களவை, மாநிலங்களைவைகளின் அமைதி குலையக் காரணமான பா.ஜ.க அரசின் நாடாளுமன்ற நடவடிக்கை, ஜனநாயகத்திற்குத் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
- கருஞ்சட்டைத் தமிழர்