அறிவித்தபடி 13.8.2021 அன்று, தமிழ்நாடு அரசின் 2021-22 நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாய நிதிநிலை அறிக்கை 14.8.2021 அன்று தாக்கல் செய்யப்படும். நிதிநிலை அறிக்கை குறித்தான விவாதங்கள் அதன் பின்னர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் முதல் மின்னனு நிதிநிலை அறிக்கை இது. இந்த நிதி ஆண்டில் வருவாய் ரூ.2,60,409 கோடியாகவும் செலவினம் ரூ.2,61,188 கோடியாகவும், வருவாய்ப் பற்றாக்குறை ரூ.58,692 கோடி இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு இந்த அறிவிக்கை பொருந்தும்.
வெள்ளை அறிக்கை
கடந்த 21.6.2021 அன்று கவர்னர் உரையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் படி, தமிழ்நாட்டின் நிதிநிலைமையை விவரிக்கும் வெள்ளை அறிக்கை, பட்ஜெட் தொடருக்கு ஒரு வாரம் முன்னதாக, 09.09.2021 அன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டது. நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 126 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையிலேயே மாநிலத்தின் தற்போதைய நிதிநிலையைப் பொதுவெளியில் தெளிவுபடுத்திவிட்டதால் இந்த நிதிநிலை அறிக்கை குறித்து அனைத்து தரப்பிலும் அச்சம் கலந்த ஒரு எதிர்ப்பார்ப்பே இருந்தது.
நம்பகத்தன்மை
வெள்ளை அறிக்கையை, எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்டதை ஒளிவு மறைவின்றி வெளியிடுவது, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதை நிறைவேற்றுவது, வெளிப்படைத் தன்மையுடைய அரசாக இருப்பது, நமது கடன் நிலை, செலவீனம் மற்றும் முக்கியப் பொது நிறுவனங்களின் நிலையை மக்களிடம் தெரிவிப்பது என்ற 4 காரணங்களுக்காக வெளியிடுவதாகச் சொன்ன நிதி அமைச்சர் ஏறக்குறைய 1.30 மணி நேரம் செய்தியாளர்களைச் சந்தித்து அறிக்கையை விளக்கினார். அதில் இருக்கும் தவறுகளுக்குத் தான் மட்டுமே பொறுப்பு என்றும் அதன் சிறப்புகளுக்கு நிறைய பேரின் உழைப்பு காரணம் என்றும் அவர் கூறியதே இந்த அரசின் மீதான நம்பிக்கையையும் மதிப்பையும் உயர்த்திவிட்டது.
வருவாய்க் குறைப்பு
2006-11 தி.மு.க ஆட்சியில் உபரியில் இருந்த மாநில வருவாய் அடுத்த இரண்டு ஐந்து ஆண்டுகளில் ரூ.1,55,246 கோடி வருவாய்ப் பற்றாக்குறையாகத் தேய்ந்து போனதைப் பட்டியல் உதவியுடன் அறிக்கை தெளிவுபடுத்தியது. அதுவே நிதிப் பற்றாக்குறை ரூ.2,95,830 கோடிகளாக உள்ளது என்றும் அறிக்கை சொன்னது. வரிகள், கட்டணங்கள் மூலம் அரசுக்கு வருவது வருவாய். நிதி என்பது செலவினங்கள் போக இருக்கும் நிகர வருவாயுடன் கடன் தவணைகள், முதலீட்டு இலாபங்கள், வரவேண்டிய தொகைகள், இன்னும் பிற இழப்புகள் ஆகியவற்றையும் கூட்டிக் கழித்தால் மிஞ்சும் தொகை.
கடன் தொகை
தமிழ்நாட்டின் மொத்தக் கடன் தொகை ரூ. 5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2011ல் ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்த கடன் 5 மடங்காக அதிகரித்துள்ளது. இன்று ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.64 லட்சம் கடன் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டி இருப்பது பொதுமக்களிடத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கடன் தொகையானது மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவோ, உள்கட்டுமானங்களுக்காகவோ வாங்கப்படவில்லை என்பதுதான் இந்த அறிக்கையின் மிக முக்கிய விவரம். இந்தக் கடன்கள் யாவும் மாநில வருவாய்க்குள் எட்டப்படவேண்டிய செலவுகளான ஊதியங்கள், வட்டிகள் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது, அரசின் நிர்வாகக் கோளாறுகளை, திறமின்மையைப் பறைசாற்றுவதாக உள்ளன என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார். 2013 முதல் 2020 வரை ஏற்பட்டுள்ள இந்தச் சரிவுகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போதைய அரசு சரி செய்யும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
நிதிநிலை திட்ட அறிக்கை
இன்றைய அறிக்கை அனைத்துத் தரப்பினரின் அச்சத்தைப் போக்கும் வகையிலும் சில எதிர்பார்ப்புகளை நிலுவையிலும் வைத்திருந்ததையே நிபுணர்கள் பல்வேறு ஊடகங்களில் குறிப்பிட்டனர். முக்கிய அறிவிப்புகள்:
எதற்கு |
எவ்வளவு (ரூ.கோடிகளில்) |
பள்ளிக் கல்வி |
32599.54 |
உயர்கல்வி |
5369.09 |
மருத்துவம், குடும்ப நலம் |
18933.20 |
வீடு தேடி மருத்துவம் |
257.16 |
மின்சாரம் |
19872.22 |
நெடுஞ்சாலைகள் |
17899.17 |
ஆதிதிராவிடர் பழங்குடியினர் |
4142.33 |
சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி |
2756 |
மாற்றுப் பாலின ஓய்வூதியம் |
1.50 |
நீர் நிலை சீரமைப்பு |
610 |
நகர்ப்புற சீரமைப்பு |
1450 |
1000 புதிய பேருந்துகள் |
623.59 |
பாசனம் |
6607.17 |
காவல் துறை |
8930.20 |
பெட்ரோல் விலை குறைப்பு |
1160 |
தமிழ் வளர்ச்சி |
80 |
இது மட்டுமல்லாமல் பன்னிரண்டு மாதப் பேறுகால விடுப்பு, கூடுதல் சிப்காட் வளாகங்கள், டைடல் பூங்காக்கள், 8 லட்சம் கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு வீடு, நூறு நாள் வேலைக்கு ரூ.300/- நாள் ஊதியம் ஆகிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
நகைக் கடன் தள்ளுபடி, மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உரிமைத் தொகை ஆகியவற்றுக்கு விவரங்கள் திரட்டும் பணி நடப்பதாக அறிவித்திருப்பதும் வெள்ளை அறிக்கையைக் காரணமாக்கி இந்த அரசு வாக்குறுதிகளைத் தள்ளிப்போடுமோ என்ற அச்சத்தை நீக்கி உள்ளது.
எதிர்மறைக் கருத்துகள்
வழக்கமாக எதிர்க் கட்சிகள் சொல்லும் “வெற்று பட்ஜெட்”, “ எதிர்பார்த்தவை இல்லை” போன்ற அண்ணாமலைத்தனமான விமர்சனங்களைக் கடந்து இது விலையேற்றத்திற்கான முன்னறிவிப்பு என்று வெள்ளை அறிக்கையையும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சாடி உள்ளார்.
எனினும் சிறு குறு தொழில் முனைவோருக்கான கடனுதவிகளோ, மான்யங்களோ, கடன் தவணை விடுப்போ இல்லை என்று சில வல்லுனர்களின் விமர்சனங்களும், கல்விக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ஒளிமயமான எதிர்காலம்
அடுத்த ஒரு மாத காலம் நடைபெறும் கூட்டத் தொடரில் சில நியாயமான எதிர்பார்ப்புகளுக்குப் பதில்கள் இருக்கலாம். மொத்தத்தில் இந்த நிதித் திட்ட அறிக்கை தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிநபர் மீதும் உள்ள ரூ.1,10,000/- கடனை ஒழித்து, ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு செலுத்த வேண்டிய ரூ.87.31 கோடி வட்டியிலிருந்தும் அதற்காக மேலும் கடன் வாங்குவது என்று இருக்கும் தற்போதைய நிலையிலிருந்து மாநிலத்தைப் பாதுகாப்பது என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். அதை ஏழை எளிய மக்களைப் பாதிக்காத வண்ணமும், தமிழ்நாட்டின் மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை இழக்காமலும் அடைவதே ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிப் படுத்தும்
- சாரதாதேவி