கீற்றில் தேட...

india mapஇந்திய அரசமைப்பின் பகுதி 1, ஒன்றியமும் அதன் ஆட்சிநிலவரையும் என்னும் தலைப்பில் தொடங்குகிறது. அதில் முதல் வரி ஒன்றியத்தின் பெயரைச் சொல்கிறது.

  1. Name and territory of the Union.—(1) India, that is Bharat, shall be a Union of States.

ஒன்றியத்தின் பெயரும் ஆட்சி நிலவரையும் : இந்தியா எனும் பாரதம் மாநிலங்களைக் கொண்டதோர் ஒன்றியமாக இருக்கும்.

முதல் வரியிலேயே இவ்வளவுத் தெளிவாக ஒன்றியம் என்று அரசமைப்பில் சொல்லப்பட்ட பிறகும், காலம் காலமாகக் குறிக்கப்பெற்றும் வரும் நிலையிலும் அண்மையில் “இந்திய ஒன்றியம்” என்னும் சொல்லாடல் விவாதப் பொருள் ஆகியிருப்பதோடு, அச்சொல்லாடலை எதிர்ப்பவர்கள் நீதிமன்றம் வரையிலும் சென்று திரும்பியிருக்கிறார்கள்.

ஏன் ஒன்றியம் என்கிற சொல்லைக்கேட்டவுடன் பா.ஜ.கவினரும் அவர்களை பின்னின்று இயக்கும் பார்ப்பனிய சங் பரிவார் கும்பலும் பதறுகிறார்கள்? அரசமைப்பின்படி ஒன்றிய (Union) அரசாக இருக்கும் இந்தியாவை, ஒற்றைத் தன்மை (Uniformity) கொண்ட ஓர் உறுப்பு அரசாக மாற்றும் பாசிச போக்கில் நாட்டை பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது.

இன்று பல்வேறு மாநிலங்களிலும் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களைத் தொடர்ந்து பரித்து வருகிறது. இதை எதிர்த்து எந்த ஒரு மாநிலமும் பெரிய அளவில் குரல் எழுப்பவில்லை.

கேரளா மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள்கூட பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கின்றனவேயன்றி மாநில சுயாட்சிக்கான குரலாகத் தீர்க்கமானக் கொள்கை அடிப்படையில் எதிர்ப்பை முன்வைப்பதில்லை. இந்தியாவிலேயே தமிழநாடுதான் அதற்கான முன்னோடியாகத் திகழ்கிறது.

“மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்னும் முழக்கம், இரு மொழிக் கொள்கை, இராஜமன்னார் குழு அறிக்கை, மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைக் கலைஞர் பெற்றுத் தந்தது என பெருமைமிகு வரலாறு கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியல்லவா அமைந்திருக்கிறது.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அடிமை அரசு அகன்று, இன்று பெரியார் அண்ணா கலைஞர்  வழியில் ஆட்சியமைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் “Belongs to the Dravidian Stalk” என்னும் கருத்தியலைப் பேசு பொருளாக மாற்றியிருக்கிறார்.

ஆட்சியமைத்தது முதல் முதன்மையான பணியாக கொரோனாவை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருக்கும் இக்கட்டான வேளையில் கூட திமுக அரசானது தொடர்ந்து மாநிலத்திற்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் இன்னொரு புறம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

நீட் பாதிப்புகளைப் பற்றி ஆராய நீதியரசர் ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு அமைத்தது, புதிய கல்விக் கொள்கையை நுழைய விடமாட்டோம் என்னும் நிலைப்பாட்டை அறிவித்தது எனத் தொடர்ந்து உரிமைகளைக் காக்கப் போராடிவருகிறது.

திமுகழகத்தின் பெருமைமிகு வரலாறும், இன்றைய முழுவீச்சான செயல்பாடும் பாசிசவாதிகளைப் பதறச் செய்கின்றன. அதனால்தான் அரசமைப்பில் இருக்கிறபடி ‘ஒன்றியம்’ என்று சொன்னால்கூட அவர்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆனால் இது போன்ற நிலை ஒருநாள் வரும் என்று அரசியல் நிர்ணய சபையில் அன்றே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“நமது அரசு ஒரு கூட்டாட்சி அரசாகத்தான் இருக்க வேண்டும் என்றும், ஓர் உறுப்பு அரசு அன்று என்றும் நீங்கள் கருதினால், வருங்காலத்தில் எந்தவொரு பதவி மோகக் கட்சியும் இதை ஓர் உறுப்பு அரசாகவும், பாசிச - சர்வாதிகார அரசாகவும் மாற்றுவதை நீங்கள் தடுக்க விரும்பினால், அந்தச் சொல்லை மாற்றிக் கூட்டாட்சி என்கிற சரியான சொல்லைப் பயன்படுத்துவது இப்போது நம் கையிலே இருக்கிறது. அதனால் ‘யூனியன்’ என்கிற வார்த்தைக்குப் பதில் ‘கூட்டாட்சி’ என்கிற வார்த்தையைச் சேர்க்குமாறு நான் முன்மொழிகிறேன்.”

மெஹபூப் அலி பெய்க் சாகிப் பகதூர் (15.11.1948இல் அரசியல் நிர்ணய சபையில்)

ஆனால் இது போன்ற வாதங்கள் அன்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த 1935ஆம் ஆண்டு இந்தியச் சட்டத்திலிருந்துதான் பெரும்பகுதி இந்திய அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.  ஆனால் 1935ஆம் ஆண்டுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ‘கூட்டாட்சி’ என்ற சொல் இடம்பெறாமல், இந்திய அரசியலமைப்பில் ‘ஒன்றியம்’ என்ற சொல்லே இடம்பெற்றது.

இதுவரை ‘கூட்டாட்சி’, ‘மாநில சுயாட்சி’ என்கிற சொற்களைக் கேட்டுத்தான் பதறினார்கள். தங்களிடம் அதிகாரத்தை வைத்துக்கொண்டு பார்ப்பனியத்தை நிலைநாட்ட, மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்த திராவிட இயக்கத் தவர்களைப் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்று பொய் பரப்புரை செய்து வந்தார்கள்.

ஆனால் இன்று ஒன்றியம் என்று சொல்லும்போதே பதறுகிறார்கள். பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள். அவர்கள் ஒன்றிய (Union) அரசை முழுதும் ஒற்றை (Unitary) அரசாக மாற்றப் பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நாம் இங்கு ஒன்றிய அரசு என்று சொல்வது அவர்களுக்குச் சம்மட்டி அடியாக இருக்கிறது.

வலுவான கூட்டாட்சி கொண்ட அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் பெருவளர்ச்சி பெற்றிருக்கின்றன. அதிகாரப் பரவலாக்களை (Decentralization) உலக நாடுகள் நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கும் சூழலில் நாம் தொடர்ந்து மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுப்போம். உண்மையான கூட்டாட்சி மலரும் வரை, ஒன்றிய அரசு ஒற்றை அரசாகப் பின்னோக்கிச் சென்றுவிடாமல் பாதுகாப்போம்.

- மா.உதயகுமார்