நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், 20-04-2023 அன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கூறினார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு ‘காணாமல் ‘ போய்விட்டது என்று எடப்பாடியின் கூற்றை மறுத்தார் சில சான்றுகளுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் எப்படி வேண்டுமானாலும் குறை சொல்லலாம் என்பது மரபுக்கு மாறானது. எடப்பாடி முதலில் தன் முதுகில் என்ன இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு பேச வேண்டும்.

பொள்ளாச்சியில் நிதழ்ந்த கொடுமையான பாலியல் சம்பவத்தின் போது முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் அன்றைய ஆளும் கட்சியினருக்கும் தொடர்பு இருந்ததை ஊடகங்கள் வெளிப்படுத்தின. அப்போது எங்கே போனது சட்டம் ஒழுங்கு ?

கொடநாடு பங்களா கொள்ளையில், நிகழ்ந்த தொடர் கொலைகளின் போது முதல்வராக இருந்தவர் எடப்பாடி. அன்று எங்கே போனது சட்டம் ஒழுங்கு? அப்போது அவரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காவல் உதவி ஆணையரிடம் இப்போது சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தியிருக்கிறது.

அன்று அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கை நேர்மையாகப் பராமரிக்காத எடப்பாடி இன்று சொல்கிறார் சட்டம் ஒழுங்கு சரியில்லையாம்.

இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், புலம் பெயர்ந்த வடநாட்டு பீகார் மக்கள் அடிபட்டு, கொல்லப்படுவதாகச் சில சமூக விரோதிகளால் பரப்பப்பட்ட வதந்தி ‘வீடியோ’ வால் நிகழவிருந்த பெரும் கொந்தளிப்பை மிகச் சாதுர்யமாகக் கையாண்டு சட்டம் ஒழுங்கைக் காத்து, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக நிலைநிறுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஜல்லிக்கட்டு, திருவாரூர் தேரோட்டம் என்று பல்வேறு நிகழ்ச்சியின் போதும், பல்வேறு கட்டங்களில் சட்டம் ஒழுங்கைச் சரியாகக் கையாண்டது தி.மு.க வின் இன்றைய அரசு என்பதை எடப்பாடி மறந்தது போல நடிக்கலாம், மக்கள் மறக்க மாட்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ். நடத்திய அணிவகுப்புப் பேரணிகளால் அமைதி குலைந்த வரலாறு வடக்கே உண்டு.

தமிழ்நாட்டில் வந்ததும் தெரியாது, நடந்ததும் தெரியாது, போனதும் தெரியாது என்ற அளவில் பேரணியை நடக்க வைத்துச் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்திய அரசு தி.மு. கழக அரசு என்பதை மறுக்க முடியுமா?

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாமல், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இருந்து, ஆட்சியைப் பார்த்து எடப்பாடி பாடம் கற்றுக் கொள்வது நல்லது.

“தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது” என்று நம் முதல்வர் சொல்வது, முற்றிலும் உண்மை!

Pin It