தமிழக தேர்தல் களத்தில் ஒரு பண்பு மாற்றத்தை உருவாக்கிக் காட்டியிருக்கிறார், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். தமிழகம் எத்தனையோ தேர்தல் களங்களைச் சந்தித்திருக்கிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் அரசியல் வருகைக்குப் பிறகு அக்கட்சியின் முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தேர்தல் களத்தை ‘கலைஞர் கருணாநிதி’ எதிர்ப்புக் களமாக மாற்றி அமைக்கும் பரப்புரை உத்திகளைத் தான் முதன்மையாகப் பின்பற்றி வந்தனர்.

வாதம் - எதிர் வாதம் - சவால் என்று மேடைகளை சூடேற்றுவதும், சில பல அறிவிப்புத் திட்டங்களோடு தேர்தல் அறிக்கை வெளியிடு வதும் நட்சத்திரத் தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய மய்யங்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து தேர்தல் பரப்புரை செய்வதுமான நடைமுறைகளோடு தேர்தல் களம் நிறைவடைந்துவிடும். இதற்கேற்ப தேர்தல் ஆணையமும் குறுகிய இடைவெளியில் தேர்தலை அறிவித்து பரப்புரைகளுக்கு கடும் கெடுபிடிகளை உருவாக்கிவிட்டது.

இவை எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது, இந்த தேர்தல் களம். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தி.மு.க. மக்களை அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று பிரச்சினைகளை அறியக்கூடிய பரப்புரைத் திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியது.

மக்கள் கிராம சபை வழியாக மக்களை சந்தித்து அவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் கண்டறியப்பட்டன. அடுத்தகட்டமாக தொகுதி வாரியாக மக்களைத் திரட்டி அவர்களின் பிரச்சினைகளை மனுக்களாகப் பெற்று அதை அடுத்து வரக்கூடிய தி.மு.க. ஆட்சி தனித் துறைகளை உருவாக்கி 100 நாட்களுக்குள் தீர்த்து வைக்கும் என்ற உறுதிமொழிகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

அடுத்த கட்டமாக திருச்சியில் கடந்த 2021, மார்ச் 7ஆம் தேதி மாபெரும் சிறப்புப் பொதுக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை துறைசார் நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, மக்கள் முன் வைத்திருக்கிறார்.

பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி, ஊரகக் கட்டமைப்பு, வேலை வாய்ப்பு, சமூக நீதி துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கான வளர்ச்சி இலக்குகளை அவர் அறிவித்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் இலட்சியங்களான மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளே தமிழ்நாட்டுக்கான இலட்சிய அடையாளங்கள் என்ற அறிவிப்பின் வழியாக ஒற்றை இந்தியாவாக மாற்ற முயலும் பா.ஜ.க.வின் இந்துத்துவா கோட்பாடுகளுக்கு நேர்முரணானது ‘திராவிடம்’ என்பதை தி.மு.க. உறுதி செய்திருக்கிறது.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிநிலைக்கு முடிவு கட்டுதல்; கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக மொத்த உள் நாட்டு உற்பத்தியிலிருந்து (ஜி.டி.பி.) செலவிடப்படும் தொகையை மூன்று மடங்காக உயர்த்துதல்; கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் (Index) முதல் 10 இடங்களுக்குள் தமிழ்நாட்டைக் கொண்டு வருதல் (தற்போது 17ஆவது இடம்); பள்ளிக் கல்வியை பாதியில் விட்டுவிடும் இடைநிற்றலை 4லிருந்து 5 விழுக்காடாகக் குறைத்தல்; பட்டியல் இனத்தினர், பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்துதல்; ‘ரேஷன்’ அட்டைகளைப் பயன்படுத்தும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகை வழங்குதல் போன்ற மிகச் சிறந்த செயல் திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. பெரியார் வழியில் சமூக நீதி கொள்கைகளைப் பின்பற்றும் உறுதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் திராவிட இயக்கத்தின் சாதனைகளால் தனித்துவமாக நிற்கும் தமிழகத்தை உருக்குலைக்கும் முயற்சிகளில் தீவிரமாக பார்ப்பனிய பா.ஜ.க.வும் அதற்கு பணிந்து நிற்கும் அ.இ.அ.தி.மு.க.வும் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய வரைபடத்துக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை வலிமையான கட்டமைப்புடன் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியிருக்கிறது.

‘நிர்வாகத் திறன் மற்றும் வளர்ச்சி’ என்ற எல்லைக்குள் மட்டும் இத்திட்டங்களை சுருக்கி விட முடியாது. நிர்வாகத் திறனும் வளர்ச்சியும் சமூகத்தில் எந்தப் பிரிவு மக்களை இலக்கு வைத்து செயல்படுகிறது என்ற கொள்கைப் பார்வையும் இதில் அடங்கியிருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பரபரப்பும் சூடும் தொற்றிக் கொள்ளும் தேர்தல் களங்களையே நாம் இதுவரை சந்தித்திருக்கிறோம். மாறாக ஆக்கபூர்வமான தொலைநோக்குத் திட்டங்களுக்கே முன்னுரிமை என்ற பார்வை - மிகச் சிறந்த வரவேற்கத்தக்க அரசியல் பண்பு மாற்றமாகும்.

‘தமிழ்நாடு’ - தமிழர்களின் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாகி உரிமைகளுக்குப் போராடத் தயாராகிவிட்டது என்ற நிலையை உருவாக்கி விட்டால் எதிர்ப்புகளை உறுதியாக எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.

சமூக நீதிப் போராட்டமானாலும் மொழித் திணிப்புக்கும் இன அடையாள ஒழிப்புகளுக்கும் எதிரான போராட்ட மானாலும் ஒன்றுபட்ட தமிழர்களின் சக்தி வெற்றி வாகை சூடியிருக்கிறது என்பதே தமிழ்நாட்டின் வரலாறு. அந்த வரலாற்றை மீட்டெடுக்கும் உள்ளடக்கமாக ஒளி வீசி நிற்கிறது, இந்தப் பிரகடனம்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It