ஒசாமா பின்லேடன் 2011 மே முதல் நாள் நள்ளிரவில் பாக்கிஸ்தானில் அபோதாபாத்தில் அவர் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்காவின் அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒசாமா பின்லேடனின் ஆணையின்படி, அவரு டைய அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள், 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின் இரட் டைக் கோபுரங்களை இரண்டு வானூர்திகளைக் கொண்டு தாக்கித் தகர்த்தனர். இதற்கான தண்டனை யாக பின்லேடன் கொல்லப்பட்டார். இதை, “நீதி வழங்கப்பட்டுவிட்டது” என்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா கூறியிருக்கிறார்.

பின்லேடன் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் அமெரிக்க மக்கள் வீதிகளில் திரண்டு விண்ணதிர மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ‘சுதந்தரச் சிந்தனை’ அமெரிக்காவில் தழைத்தோங்கியிருப்பதாகக் கூறப்படு கிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள், ஏகாதிபத்திய அமெரிக்க அரசும், அதன் தூணாக விளங்கும் ஊடகங்களும் பரப்புகின்ற கருத்துகளை அப்படியே நம்புகின்ற அடிமுட்டாள்களாகவே இருக்கின்றனர் என்று அமெரிக்காவின் தலைசிறந்த மொழியியல் அறிஞரும், மனித உரிமைச் செயல்பாட்டாளருமான நோம் சோம்ஸ்கி கூறுகிறார். கண்மூடித்தனமான ‘தேசபக்தி’ புஷ் காலத்தில் மக்கள் மனதில் திணிக்கப் பட்டது.

அமெரிக்காவுக்குப் போட்டி வல்லரசாக விளங்கிய சோவியத் நாட்டில் 1990இல் சோசலிச அரசமைப்பு வீழ்ந்தது.

சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகப் பிரிந்தது. எனவே உலகில் தனக்கு இனி எதிரியே இல்லை யென்று அமெரிக்கா இறுமாந்திருந்தது. அச்சமயத்தில் அல்கொய்தாவினர் அமெரிக்காவின் இரட்டை கோபுரங் களைத் தகர்த்தனர். அமெரிக்காவின் இறுமாப்பு பொடிப் பொடியானது. எனவே அமெரிக்க ஏகாதிபத்தியம் மதம் கொண்ட வேழமானது.

“உலகில் எந்தவொரு தனிமனிதரையும், நாட்டையும் பயங்கரவாதி என அறிவித்து, அமெரிக்கா அவர்கள் மீது தாக்குதல் நடத்தும்” என்று ஆணவத்துடன் அறிவித்தார் புஷ். அமெரிக்காவில் ‘தேசபக்தி சட்டம்’ என்பதைக் கொண்டுவந்து, மக்களின் உரிமைகளை முடக்கினார். 2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பiடெயடுத்தது. ஏனெனில் பின்லேடன் 1996 முதல் ஆப்கனில் தங்கியிருந்து, அங்கு ஆட்சி யில் இருந்த தாலிபான்கள் உதவியுடன், அமெரிக்கா வுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுத்து வந்தார்.

1993ஆம் ஆண்டிலேயே, நியூயார்க்கில் உள்ள உலக வணிகக் கட்டடத்தின் மீது அல்கொய்தாவினர் குண்டு வீசினர். அதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 1998 ஆகசுட்டு 7 அன்று - ஒரே நாளில், கென்யா விலும் தான்சானியாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது அல்கொய்தாவினர் குண்டுகள் எறிந்து தாக்கினர். இதில் 231 பேர் கொல்லப்பட்டனர். 2000 அக்டோபர் 12 அன்று யேமனில் அமெரிக்கப் போர்க் கப்பலை அல்கொய்தாவினர் தாக்கினர். இதில் 17 கடற்படை வீரர்கள் மாண்டனர்.

அல்கொய்தாவும் அதன் தலைவர் பின்லேடனும் அமெரிக்காவை மட்டும் ஏன் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினார்கள்?

பின்லேடனை உருவாக்கி வளர்த்ததே அமெரிக்காவின் உளவுத்துறையான சி.அய்.ஏ.தான். எதற்காக? 1970களில் ஆப்கானிஸ்தான் படைத்தளபதி தராக்கி புரட்சி செய்து, மன்னராட்சியை ஒழித்துவிட்டு, குடியரசு ஆட்சி முறையை உருவாக்கினார். இவர் இடதுசாரிச் சிந்தனையாளர். சோவியத் நாட்டின் ஆதரவாளர். ஆப்கனில் உள்நாட்டுக் கலகம் வெடித்தது. அதை அடக்க தராக்கி சோவியத் படைகளை 1979இல் வரவழைத்தார்.

சோவியத் படைகள் ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேற வேண்டும் என்ற போராட்டமும் தாக்குதல் களும் வலுத்தன. இவர்கள் முஜாகிதீன்கள் எனப் பட்டனர். ‘கடவுள் நம்பிக்கை இல்லாத சோவியத் நாட்டுப் படைகளை இசுலாமிய நாட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டும்’ என்ற இசுலாமிய அடிப்படை வாத வெறி உணர்ச்சி ஊட்டப்பட்டது. மற்ற இசுலாமிய நாடுகளி லிருந்து இளைஞர்கள் ஆப்கனுக்குச் சென்று போரில் ஈடுபட்டனர். இவர்களுக்கு அமெரிக்கா நிதி உதவி, போர்ப் பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை வாரி வழங் கியது. சவூதி அரேபியாவிலிருந்து ஆப்கன் சென்ற ஒசாமா பின்லேடன் அமெரிக்காவால் பயிற்றுவிக் கப்பட்டவர்களில் முதன்மையானவர்.

1989ஆம் ஆண்டு சோவியத் படைகள் அவமானப் பட்டு ஆப்கனிலிருந்து வெளியேறின. பத்தாண்டு களாக ஆப்கனில் படைப்பயிற்சி பெற்ற - சோவியத் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய இசுலாமிய இளைஞர்கள் தத்தம் தாய்நாடுகளுக்குத் திரும்பினர். அதுபோல் பின்லேடன் சவூதி அரேபியாவுக்குத் திரும் பினர்.

1990இல் குவைத் மீது சதாம் உசேனின் ஈராக்கியப் படைகள் படையெடுத்தன. அரபு நாடுகளின் கூட்டுப்படையைக் குவைத்துக்கு அனுப்பி, ஈராக் ஆக்கிர மிப்புப் படைகளை விரட்டியடிக்க வேண்டும் என்று பின்லேடன் சவூதியின் மன்னரிடம் கூறினார். குவைத் நாட்டின் எண்ணெய் வளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா, சவூதி அரேபியாவில் படைத் தளங் களை அமைத்து, அங்கிருந்து குவைத்தில் ஈராக் படை கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தது. மேலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அய்க்கிய நாடுகள் அவை மூலம் ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன், ஈரான் மீது படையெடுத்துத் தாக்குதல் நடத்த சதாம் உசேனுக்கு அமெரிக்கா பலவகையிலும் உதவி செய்தது. அமெரிக் காவின் தலையாட்டி பொம்மையாக இருக்க சதாம் உசேன் மறுத்ததால், உடனே அவரை அமெரிக்கா எதிரியாகக் கருதியது. அமெரிக்கா ஈராக் மீது 1991 முதல் 2003 வரை விதித்திருந்த பொருளாதாரத் தடை யால், போதிய உணவும், உயிர் காக்கும் மருந்துகளும் கிடைக்காமல் பத்து இலட்சம் ஈராக்கியர் மாண்டனர். இதில் அய்ந்து இலட்சம் பேர் குழந்தைகளும் சிறுவர் களுமாவர். இவ்வாறு பல இலட்சம் மனித உயிர்களைக் குடித்துத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னை நிலைநாட்டிக் கொண்டு வருகிறது.

இசுலாமிய நாடுகளில் - குறிப்பாக அரபு நாடுகளில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதை பின்லேடன் குறிக்கோளாகக் கொண்டார். 1990இல் பின்லேடன் சூடான் நாட்டுக்குச் சென்றார். கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டார். 1988இல் ஆப்கனில் இருந்த போது பின்லேடன் அல்கொய்தா அமைப்பை ஏற்படுத்தினார். ‘அல்கொய்தா’ என்றால் அடித்தளம் என்று பொருள். அல்கொய்தா என்ற அடித்தளத்திலிருந்து இசுலாமியப் புனிதப் போர் நடத்துவது இதன் நோக்கம். ஒசாமா பின்லேடன் அல்கொய்தாவின் தலைவராக மட்டுமின்றி அதன் ஆன்மீக குருவாகவும் மதிக்கப்பட்டார்.

ஆறு ஆண்டுகள் பின்லேடன் சூடானில் இருந்தார். ஆயினும் பல நாடுகளிலும் இருந்த அல்கொய்தாவி னருடன் தொடர்பு கொண்டிருந்தார். பின்லேடனைச் சூடானிலிருந்து வெளியேற்றுமாறு சூடான் அரசுக்கு அமெரிக்கா நெருக்குதல் கொடுத்தது. சூடான் அரசு பின்லேடனை அமெரிக்காவிடமோ, சவூதி அரேபியா விடமோ ஒப்படைக்க அணியமாக இருந்தது. உள் நாட்டுக் கலகம் மூண்டிருந்த சோமாலியா தவிர வேறு எந்த நாட்டுக்கும் பின்லேடன் செல்லலாம் என்று அமெரிக்கா கூறியது. பின்லேடன் ஆப்கன் செல்ல விரும்பினார். இதற்கும் அமெரிக்காவின் கிளிண்டன் அரசின் ஒப்புதலைப் பெற்றபின், சூடான் அரசு, பின்லேடனை ஆப்கனிஸ்தானுக்கு வானூர்தியில் அனுப்பியது. சூடான் அரசு பின்லேடனின் சொத்துக் களைக் கைப்பற்றியது. இதில் பெரும் பகுதி பின்லேடன் தன் பணக்காரத் தந்தையிடமிருந்து பெற்றதாகும்.

ஆப்கனில் இசுலாமிய அடிப்படைவாத தாலிபான் அரசு பின்லேடனை வெற்றி வீரனைப் போல் வரவேற்றது. பின்லேடன் சுதந்தரமாகச் செயல்பட அனுமதித்தது. முன்பு சோவியத் படைக்கு எதிராகப் புனிதப் போரில் ஈடுபட்ட பலரும் பின்லேடனும் சேர்ந்து கொண்டனர். இவர்களுள் ஒருவர் காலித் ஷேக் முகமத் என்பவர். இவர்தான் 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குத் திட்டமிட்டவர். இத்தாக்குதலுக்கும் பின்லேடனுக்கும் நேரடியாகத் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவில் எந்தவொரு ஆதாரத்தையும் இது வரை காட்ட முடியவில்லை. ஆனால் பின்லேடன் தான் மூலகாரணம் எனக்கருதி அவரைச் சுட்டுக் கொன்று விட்டது.

அல்கொய்தா அமைப்பு பல நாடுகளில் உள்ளது. தொடக்கம் முதலே, அந்தந்த நாடுகளில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவு எடுத்துச் செயல்படும் அதிகாரம் அந்தந்த நாட்டு அமைப்புகளுக்கு பின்லேட னால் வழங்கப்பட்டது. அல்கொய்தா அமைப்பில் அதிகாரப் பகிர்வு பரவலாக்கப்பட்டிருந்தது. ஆப்கனி லிருந்து செயல்பட்டுவந்த பின்லேடன், அரபு நாடுகள் மீது அமெரிக்கா செலுத்தி வரும் ஆதிக்கத்தையும், அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு அடிபணிவதையும் கண்டித்து வந்தார். பாலஸ்தீன விடுதலையை ஆதரித் தார்.

2001 செப்டம்பர் 11 அன்று இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே, அமெரிக்காவும் ஆப்கனின் தாலிபான் அரசும் பின்லேடனை ஒப்படைப்பது குறித்துப் பேசின. தாலிபான் அரசு, பின்லேடன் மீதான குற்றச் சாட்டுகளை அளிக்குமாறு அமெரிக்காவிடம் கேட்டது. அதன்பின் பன்னாட்டு நீதிமன்றத்தின்முன் விசாரிப் பதற்காக, பின்லேடனை வேறோர் நாட்டிடம் ஒப்ப டைப்போம் என்று ஆப்கன் அரசு கூறியது. 2001 அக்டோபரில் ஆப்கன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கிய பிறகுகூட, ஆப்கன் அரசு, அதன் வெளியுறவு அமைச்சரை இசுலாமாபாத்துக்கு அனுப்பி, பின்லேடன் மீதான குற்றச்சாட்டு அறிக்கை இல்லா மலே, மூன்றாவது நாட்டிடம் பின்லேடனை ஒப்ப டைக்க விரும்புகிறோம் என்று அமெரிக்காவுக்குத் தெரிவித்தது. ஆனால் ஆதிக்க வெறி கொண்ட புஷ், பின்லேடனை அமெரிக்கப் படைகள் உயிருடனோ அல்லது பிணமாகவோ கைப்பற்றும்; இதுதவிர வேறு மாற்றுக்கு இடமில்லை என்று கூறிவிட்டார்.

2001 அக்டோபர் முதல் இன்றுவரை ஆப்கனிஸ் தானில் அமெரிக்கப் படைகளும் அதன் கூட்டணிப் படைகளும் நிலை கொண்டுள்ளன. தாலிபன் ஆட்சி வீழ்த்தப்பட்டது. அதன் தலைவர் முல்லா உமர் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கிறார். அமெரிக்காவின் கைப்பாவையான கர்சாய், ஆப்கனின் ஆட்சித் தலைவராக இருக்கிறார். அமெரிக்கக் கூட்டுப் டைகள் நடத்திய தாக்குதலில் அங்கு 20,000 பொது மக்கள் மாண்டனர். கர்சாயின் ஆட்சி அதிகாரம் தலை நகர் காபூலைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. தாலிபான்களும் பழங்குடியினரும் எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

2001 திசம்பரில் பின்லேடன் ஆப்கன்-பாக்கிஸ்தான் எல்லையில் தோரா போரா மலைப்பகுதியில் குகைளில் ஒளிந்திருந்தார். அப்போது பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கப் படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தின. ஆயினும் பின்லேடன் தப்பிவிட்டார்.

2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படை யெடுத்தது. இதற்கு அமெரிக்கா கூறிய காரணங்கள் இரண்டு. முதலாவது சதாம் உசேன் பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்பதாகும். இரண் டாவது சதாம் உசேன் பின்லேடனும் தொடர்பு வைத் திருக்கிறார் என்பதாகும். ஈராக்கில் பேரழிவு விளை விக்கும் இரசாயன ஆயுதங்கள் இல்லை என்று அய்.நா. குழு அறிக்கை அளித்ததையும் பொருட்படுத் தாமல், அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது. சதாம் உசேனைத் தூக்கிலிட்டது. ஆனால் பேரழிவு ஆயுதம் ஒன்றைக்கூடக் கண்டெடுத்து உலகிற்குக் காட்டவில்லை. இதைப்போலவே, தீவிரமத வெறியரான பின்லேடன், மதச் சார்பற்ற கொள்கை கொண்ட சதாம் உசேனை வெறுத்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை யாகும்.

ஆப்கன், ஈராக் ஆகிய நாடுகளை அமெரிக்கா கைப்பற்றியிருப்பதன் நோக்கம் அமெரிக்காவினுடைய புவியியல்-அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும், உலக நாடுகளின் இயற்கை வளத்தை - குறிப்பாக எண்ணெய் வளத்தைச் சுரண்ட வேண்டும், அமெரிக்க முதலாளிகளின் நலன்களைப் பேண வேண்டும் என்பதுவேயாகும். இப்போது அமெரிக்க-பிரெஞ்சுப் படைகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி, கடாபியின் 29 அகவை மகனையும், மூன்று பேரக் குழந்தை களையும் கொன்றுள்ளன. யாரை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் எதிரி என அறிவித்து, தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்து வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

பயங்கர வாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கன், ஈராக் நாடுகள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈராக்கில் 1 இலட்சத்து 20 ஆயிரம் பொது மக்களும், ஆப்கனில் 20,000 பொது மக்களும் இறந்தனர். அமெரிக்கப் படையினர் 6000 பேர் மாண்டனர். இப்போர்களுக்காக அமெரிக்கா ஒரு இலட்சத்து 30 ஆயிரம் டாலர் (1.3 டிரில்லியன் டாலர்) செலவிட்டுள்ளது.

1.5.2011 நள்ளிரவுக்குப்பின் அமெரிக்காவின் ‘சீல்’ எனப்படும் அதிரடிப்படை நான்கு உலங்கு ஊர்திகளில் (ஹெலிகாப்டர்) பாக்கிஸ்தானின் ராடாரின் பார்வைக் குப்படாமல், அபோதாபாத்தில் பின்லேடன் தங்கி யிருந்த வீட்டில் இறங்கி, அவருடைய குடும்பத்தினர் கண்ணெதிரிலேயே, நிராயுதபாணியாக இருந்த பின்லேடனைச் சுட்டுக்கொன்று, அவரது உடலை எடுத்து வந்து அரபுக்கடலின் ஆழத்தில் அடக்கம் செய்து விட்டது. இந்நிகழ்ச்சியை அமெரிக்காவின் வீரதீரச் செயலாக ஊடகங்கள் பாராட்டின.

1997ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் சி.அய்.ஏ. பின்லேடனைப் பிடிக்கத் திட்டமிட்டது. ஆனால் 14 ஆண்டுகள் கழித்து, பல இலட்சம் மக்களைக் கொன்ற பின்தான் அவரைப் பிடித்தது. பாக்கிஸ்தானில் அபோ தாபாத்தில் பின்லேடன் அய்ந்து ஆண்டுகள் வாழ்ந் திருக்கிறார். பாக்கிஸ்தானில் சுதந்தரமாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கும் சி.அய்.ஏ.வால் நேற்றுவரை பின்லேடன் இருந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. எனவே இதில் அமெரிக்கா பெருமைபட்டுக் கொள்ள ஏதுமில்லை.

கையில் ஆயுதமில்லாமல் இருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப்படையினர் உயிரோடு பிடித்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தியிருக்க வேண்டும். நிராயுத பாணியாக இருந்த பின்லேடனைச் சுட்டுக்கொல்வதற்கு அமெரிக்காவின் சட்டத்திலோ, பன்னாட்டுச் சட்டத்திலோ இடமில்லை. கடந்த அய்ம்பது ஆண்டுகளாக அமெரிக்கா தானடித்த மூப்பாகச் செய்வதே அதனுடைய சட்டமாகவும், நீதியாகவும் இருந்து வருகிறது. அதனால்தான் அமெரிக்கா இன்றுவரை பன்னாட்டு நீதிமன்றத்தை ஏற்க மறுத்துவருகிறது.

அமெரிக்காவின் நீதிமன்றத்தில் பின்லேடன் விசாரிக் கப்பட்டிருந்தால், 1980களில் அமெரிக்காவின் இராணுவத்துடனும், சி.அய்.ஏ.வுடனும் பின்லேடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு வெளியாகியிருக் கும். அதைப்போலவே ஆப்கனில் முஜாகிதீன்களுக்கு அமெரிக்கா அளித்த படைப்பயிற்சி, செய்த நிதி உதவி ஆகியவை அம்பலமாகியிருக்கும். இதற்கெல்லாம் இடந்தரக்கூடாது என்பதற்காகவே பின்லேடன் கொல் லப்பட்டார்.

தமிழ்நாட்டில் ‘சந்தனக்காடு’ வீரப்பனுடன் கூட்டாளி களாக இருந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், சந்தனமர வணிகர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் பெயர் வெளிவரக் கூடாது என்பதற்காகவே, வீரப்பன் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தான் உருவாக்கிய தீவிரவாதி பிரந்தன்வாலேவை இந்திராகாந்தி படையை ஏவிச் சுட்டுக்கொன்றார். அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒசாமா பின்லேடனை பாரக் ஒபாமா சுட்டுக்கொல்ல ஆணையிட்டது. எப்படிப்பட்டது? பின்லேடன் கொலையில் ஒபாமாவே வழக்குரைஞராகவும், நீதிபதியாகவும், சாவுத் தண்டனையை நிறைவேற்றுபவராகவும் செயல்பட்டார்.

இசுலாமிய பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாக்கிஸ்தான் இருந்து வருகிறது என்று காங்கிரசும், பா.ச.க.வும் கூறிவந்தன. பின்லேடன் அய்ந்தாண்டு களாக தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு நூறு கிலோ மீட்டர் தொலைவில் வாழ்ந்துள்ளார் என்ற உண்மை இக்கட்சிகளின் கூற்றை மெய்யாக்கிவிட்டது என்று தலைகால் தெரியாமல் குதிக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளாகவே இந்திய ஆளும் வர்க்கத்தின் அமெரிக்க விசுவாசிகள், பாக்கிஸ்தான் மோகத்திலிருந்து அமெரிக்கா விடுபட்டு, தங்கள் கழுத்தில் மாலைபோட வேண்டும் என்று தவம் கிடக்கிறார்கள். அதனால்தான் 2005 முதல் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கப் போர்ப் படையுடன், இந்தியாவும் அடிமை ஒப்பந்தம் செய்து கொண்டு, எடுபிடி வேலை செய்யவும் காத்துக் கிடக்கிறது.

பின்லேடன் கொலையாலோ, வேறு காரணத்தாலோ, அமெரிக்கா ஒருபோதும் பாக்கிஸ்தானுடனான உறவைக் கைவிடாது. அமெரிக்காவுக்கு பாக்கிஸ்தான் மனைவி என்றால் இந்தியா வைப்பாட்டியாக மட்டுமே இருக்க முடியும். இதைமறந்து அமெரிக்கா பாக்கிஸ் தானுடன் உறவை முறித்துக் கொள்ளும் என்று இந்திய ஆளும் வர்க்கத்தினர் சிலர் மனப்பால் குடிக்கின்றனர்.

இந்தியாவின் படைத்தளபதிகள், பின்லேடனை அமெரிக்கா பிடித்தது போல், இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு, தற்போது பாக்கிஸ்தானில் பதுங்கியிருப்போரை, இந்தியப் படையால் பிடித்து வரமுடியும் என்று வீரவசனம் பேசியிருக்கிறார்கள். ஏகாதிபத்திய வெறி இசுலாமிய எதிர்ப்பு உணர்ச்சி இந்திய இராணுவத்தின் தலைமையிலும் எந்த அளவுக்கு ஏறியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

“ஈராக்கியப் படையினர் அமெரிக்காவில் புஷ் வீட்டின் வளாகத்தில் இறங்கி, புஷ்ஷைக் கொன்று, அவரது உடலை அட்லாண்டிக் கடலில் போட்டால், அமெரிக்கர்களாகிய நாம் எவ்வாறு எதிர்வினை புரிவோம் என்று எண்ணிப் பாருங்கள். அய்யத்திற்கிடமின்றி ஒசாமா பின்லேடனை விட, புஷ் தான் பெரிய குற்றவாளி. ஏனெனில் எல்லா முடிவுகளையும் புஷ்தான் எடுத்தார். அதனால் ஈராக்கில் பல்லாயிரம் பேர் மாண்டனர். பல இலட்சம் பேர் அகதிகளாயினர். நாடே சின்னாபின்னமாயிற்று” என்று அமெரிக்க அதிகாரவர்க்கத்தை நோக்கி நோம் சோம்ஸ்கி கேள்வி எழுப்பி உள்ளார். புஷ் செய்ததையே கறுப்பினத்தவரான பாரக் ஒபாமாவும் செய்கிறார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தாத வரையில் மனித குலத்துக்குப் பாதுகாப்போ, விடுதலையோ இல்லை.