கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

vijay ajith election‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்று நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. அது வடநாட்டுக் கட்சியான பாஜக வுக்குத் தெரிந்திருக்காது போலிருக்கிறது. அதனால் பொதுவாக இருந்த பலரை - புகழ் பெற்ற பலரை - எதிரிகளாக அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள்!

தேர்தல் நாளன்று நடிகர் விஜய் மிதிவண்டியில் வந்ததும், நடிகர் அஜித் கருப்பு சிவப்பு முகக்கவசம் அணிந்து வந்ததும், நடிகர் விஜய் சேதுபதி அளித்த பேட்டியும், அழுத்தமான செய்திகளை மக்களுக்குச் சொல்லின. அவை எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் என்று கூறிவிட முடியாது. தங்கள் நிலைப்பாட்டை குறிப்பாக அவர்கள் சொல்லியுள்ளனர் என்றே தோன்றுகிறது.

நடிகர் விஜய் ஒரு கோடீஸ்வரர், அவரால் பெட்ரோல் போட முடியாதா என்று கேட்கின்றனர். தாராளமாக முடியும். அன்று அவர் மிதிவண்டியில் வரும்போதே, அவரைச் சுற்றி நிறைய கார்கள் வரவே செய்தன.

அவற்றுக்கெல்லாம் எரிபொருள் போடாமலா வந்திருப்பார்கள். எனினும், பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போவதைத் தன் மிதிவண்டிப் பயணத்தால் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது மறைமுகமாகத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார் என்றே கருத வேண்டும்.

அவருடைய கோபத்திற்கு பெட்ரோல் விலை ஏற்றம் மட்டுமே காரணமாக இருந்திருக்கும் என்று முடிவு செய்துவிட முடியாது. அவரைப் பாஜகவும், மத்திய அரசும் தொடர்ந்து கோபப்படுத்திக் கொண்டே இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். அவர் நடித்த திரைப்படம் ஒன்றில் அரசை விமர்சனம் செய்து சில உரையாடல்கள் வந்தன என்பதற்காக அவரைக் கடுமையாக எதிர்த்தனர். பிறகு அவர் ஜோசப் விஜய் என்று கண்டு பிடித்தனர்.

அது மட்டுமல்லாமல், ஒருமுறை அவர் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தபோது, வருமானவரித் துறையினர் அங்கு சென்று, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, அவரை சென்னை வரைக்கும் அழைத்து வந்து சோதனை நடத்துகிறோம் என்று தொல்லை செய்தனர். இறுதியில் ஒரு புதைபொருளையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.

இத்தனை கோபமும் அவருள் இருக்கத்தானே செய்யும். தன் கோபத்தைத் தேர்தல் நாளில், ஒரு சிறு செயல் மூலம் இப்போது உலகிற்குத் தெரிவித்து விட்டார்.

நடிகர் அஜித் அணிந்துவந்த முகக் கவசமும், ஒருவிதமான குறியீடு என்றுதான் தோன்றுகிறது. கருப்பும் சிவப்பும் எந்தக் கட்சியின் குறியீடு என்று தமிழ்நாட்டில் உள்ள சின்னப் பிள்ளைக்கும் தெரியும்.

நடிகர் விஜய் சேதுபதி, மிக வெளிப்படையாகவே நேர்காணல் ஒன்றில், சாதி, மதச் சார்பில்லாத கட்சிக்குத்தான் நான் எப்போதும் வாக்களிப்பேன் என்றார். இதனை விடத் தெளிவாக எப்படிக் கூற முடியும்?

நடிகர் ராஜ்கிரண், எழுத்தாளர் பவா செல்லத்துரை போன்ற பொதுவானவர்கள் பலரும் கூட இம்முறை தங்களின் கருத்தை மறைக்காமல் வெளியிட்டனர்.

இன்றுவரையில் அறியாமல் இருந்தாலும், ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்பதை மே 2 ஆம் தேதி பாஜகவினர் தெரிந்து கொள்வார்கள். ‘சேராத இடந்தனிலே சேர வேண்டாம்' என்னும் பழமொழியை அதிமுகவினரும் அன்று புரிந்து கொள்வார்கள்.

- சுப.வீரபாண்டியன்