உலகத்திற்கே நாகரீகத்தையும், பண்பாட்டையும் கற்றுக் கொடுத்த சமூகம் என பெருமையோடு நாம் பிதற்றிக் கொண்டிருந்தாலும், அப்படி சொல்வதற்கு எந்த வகையான தார்மீக தகுதியும் அற்ற சமூகமாகத்தான் தமிழ்ச் சமூகம் உள்ளது.
நம்மைப் பற்றி அடுத்தவர்களோ வரலாறோ பெருமையாக சொல்லவில்லை என்றால்கூட பரவாயில்லை. உலகில் மனிதன் வாழ்வதற்கே தகுதியற்ற கொடிய சாதிவெறி பிடித்த மனநோயளிகள் வாழும் பகுதிதான் தமிழ்நாடு எனச் சொல்லும் அளவிற்கு, அருவருப்பான இழிந்த பிறவிகள்கூட செய்யத் தயங்கும் ஈனத்தனத்தை தமிழக மண்ணில் அரங்கேற்றி இருக்கின்றார்கள் சாதிய மலத்தில் தோய்ந்த மிருகங்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டிந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்தான் சாதிவெறி பிடித்த அயோக்கியர்களால் மலம் கலக்கப்பட்டிருக்கின்றது.இதனால் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 30 பேர் வரை உடல்நிலை மோசமாக பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள்.பாதிக்கப்பட்ட மக்கள் இன்றுவரை மலம் கலந்த தண்ணீரைக் குடித்த அருவருப்பு உணர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியாமலும், ஆதிக்க சாதியின் மலம் கலந்த தண்ணீரைக் குடித்த கிராமம் என்ற இழி சொல் ஆண்டாண்டு காலத்திற்கும் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்துமே என்றும் கூனிக் குறுகிப் போய் கிடக்கின்றார்கள்.
தண்ணீரில் மலம் கலந்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 11 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக திருச்சி டிஐஜி சரவணசுந்தர் கூறினாலும், இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என்பது அரசு இயந்திரம் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
இறையூர் கிராமத்தில் உள்ள ஐயனார் கோயிலில் தலித் மக்கள் நுழைய அனுமதியும் மறுக்கப்பட்டிருக்கின்றது. ஆதிக்க சாதியைச் சேர்ந்த மூக்கையா என்பவர் நடத்தும் தேனீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்பட்டிருக்கின்றது. இதன் மீது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிங்கம்மாள் என்பவர் சாமியாடி, கோவிலுக்கு தலித் மக்கள் வரக்கூடாது என்று இழிவாகப் பேசி இருக்கின்றார். அவரும் தேனீர் கடை உரிமையாளர் மூக்கையா, அவர் மனைவி மீனாட்சி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாதி ஒழிப்பைப் பற்றி மிகக் காத்திரமாக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாடு பேசி வந்தாலும், அதனால் ஒரு சிறு தாக்கத்தையும் சாதிக் கட்டுமானத்தின் மீது ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.
சாதி ஒழிப்பு பேசாத மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் சாதிமறுப்புத் திருமணங்கள் மிகக் குறைவாகவே நடைபெறுகின்றன என்பதே இதற்கு சான்று.
இறையூர் கிராமத்தில் நடந்த சாதியப் பாகுபாடு மட்டுமே வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. ஆனால், தமிழகத்தில் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பதுதான் உண்மை. இவை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அரசே கொடுத்த உறுதியான தகவலாகும்.
தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை 2009 முதல் 2018 வரையிலான 10 ஆண்டுகளில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 27.3 சதவீதம் அதிகரித்து உள்ளதாக சொல்கிறது.
வெளிப்படையாகவே தீண்டாமை கடைபிடிக்கப்படுகின்றது, சமத்துவம் மறுக்கப்படுகின்றது என்பது அரசுக்குத் தெரிந்திருந்தும் கடும் நடவடிக்கை மூலம் அதை ஒடுக்கத் துப்பில்லாத அரசு, தீண்டாமையைக் கடைபிடிக்காத கிராமங்களுக்கு அந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கொடுக்கின்றோம் என்கின்றது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறிப்போன சாதிவெறியையும் தீண்டாமையையும் 10 லட்சம் கொடுத்து அழித்துவிட முடியுமா? ஜட்டி வாங்கக் காசில்லை என்றாலும் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லி அருவாளைத் தூக்கும் சாதிவெறியன்கள் காசுக்கு மயங்கி சமத்துவ சிந்தனைக்கு வந்து விடுவார்களா?
உண்மையில் தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளுக்குமே எப்போதுமே சாதி ஒழிப்பில் உண்மையான அக்கறை இருந்தது கிடையாது. அவர்கள் அப்படியான போலியான தோற்றத்தை ஏற்படுத்தி, அதை சிறப்பாக காத்தும் வந்திருக்கின்றார்கள்.
ஊரையும் சேரியையும் ஒன்றாக்க நடவடிக்கை எடுக்க முடியாத கலைஞர் அவர்கள் சமத்துபுரத்தை ஏற்படுத்தி, அங்கு அனைத்து சாதி மக்களையும் ஒன்றாக இருக்க வைத்தார்.அவருக்கு நன்றாகவே தெரியும், இதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்று. ஆனால் சாதி ஒழிப்பு என்ற சிந்தனை தனக்கும் இருந்தது என்பதை வரலாற்றில் பதிவு செய்ய மட்டுமே அவருக்கு அது பயன்பட்டது.
இன்று ஸ்டாலின் அவர்கள் தீண்டாமையைக் கடைபிடிக்காத கிராமத்திற்கு 10 லட்சம் என்கின்றார். இதுவும் ஒருவகை ஏமாற்றுத் திட்டம்தான். உண்மையில் மனப்பூர்வமாக சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றில் அக்கறை இருந்தால் தீண்டாமையைக் கடைபிடிக்கும் கிராமத்திற்கு எந்தவகையான அடிப்படை வசதிகளும் செய்துதர முடியாது என்றோ, அவர்களுக்கு ரேசன் வழங்க முடியாது என்றோ, எந்த வகையான அரசு நலத் திட்டங்களையும் பெற முடியாது என்றோதான் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்தால் சாதிவெறியர்களின் ஓட்டு கிடைக்காது என்பதால் அப்படியான தீவிரமான நடவடிக்கையை எடுக்க விரும்பவில்லை.
தனிச் சுடுகாடு, சுடுகாட்டிற்குப் போகும் பாதையை மறித்தல், சேரியைத் தனிமைப்படுத்த தீண்டாமைச் சுவர் கட்டுதல், பள்ளிகளில் தலித் சமையலர் சமைத்த உணவை உண்ண மறுத்தல், தலித் குழந்தைகளை கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துதல், அவர்களை பள்ளி வகுப்பறையில் தனியாக உட்கார வைத்தல், பொதுக்கோயிலில் நுழைய விடாமல் தடுப்பது, பறை அடிக்க கட்டாயப்படுத்துவது, இழவு செய்தி சொல்ல கட்டாயப்படுத்துவது, தலித் முதியவர்களைக் கூட மரியாதை இல்லாமல் வாடா போடா என்ற அழைப்பது, தலித் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுவது, தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை என நூற்றுக்கணக்கான வடிவங்களில் தீண்டாமை தமிழக கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றது.
ஆனால், இதற்கு எதிராக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. நேற்றுவரை சாதிவெறியை பேசிக் கொண்டும் அதை பரப்பிக் கொண்டும் இருந்த ஒருவன் இன்று திமுக, அதிமுகவோடு மிக இயல்பாக கூட்டணி வைக்க முடியும், சில சீட்டுகளையும் பெற முடியும்.
ஓட்டுக்காக சாதிவெறியர்களை அனுசரித்துப் போவதும், அரவணைத்துப் போவதும் இருக்கும்வரை சாதியையும் ஒழிக்க முடியாது, தீண்டாமையையும் ஒழிக்க முடியாது.
தலித்துகள் அதிகாரம் பெற்றால் மட்டுமே தங்களை சாதியத் தளைகளில் இருந்து விடுதலை செய்து கொள்ள முடியும். அதற்கு தேர்தல் பாதை மட்டுமே ஒரே வழி என்று சொல்லி அவர்களை எல்லாம் தேர்தல் அரசியலுக்கு பின்னால் அணிதிரட்டி வெற்றி பெற்றவர்கள், இதுவரை சாதி ஒழிப்புக்காகவோ தீண்டாமை ஒழிப்புக்காகவோ பெரியதாக எதுவுமே செய்துவிடவில்லை, தங்களை வளப்படுத்திக் கொண்டதைத் தவிர.
குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததானது இத்தனை ஆண்டுகால திராவிட ஆட்சியின் இழிதனத்தையும், சாதி ஒழிப்பில் அவர்கள் காட்டியதாக சொல்லும் அக்கறையின் மீதும் காறி உமிழும் நிகழ்வாக அமைந்திருக்கின்றது.
உலகமே காறித் துப்பும் அளவுக்கு இவ்வளவு மோசமான சாதிய வன்முறை அரங்கேற்றப்பட்ட பின்னரும் கூட ஸ்டாலின் அவர்கள் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது அவர் இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது.
ஏன் மாவட்ட ஆட்சியர் போகவில்லையா? காவல்துறை உயரதிகாரிகள் போகவில்லையா? என்று கேட்டால் போனார்கள், நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றோம். ஆனால் ஸ்டாலின் அவர்கள் அங்கு போவதன் மூலம் இந்த அரசு ஒருபோதும் சாதிவெறியர்களை ஆதரிக்காது என்பதையும், தமிழகம் முழுக்க உள்ள அனைத்து கிராமங்களிலும் தீண்டாமையைக் கடைபிடிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு ஒடுக்கும் என்பதையும் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.
நரிக்குறவர் வீட்டுக்குப் போய் சாப்பிடும் ஸ்டாலின் அவர்களால் மலம் கலந்த தண்ணீர் குடிக்க வைக்கப்பட்ட தலித்துகளின் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை என்பது முரண்பாடாக உள்ளது. விடியல் அரசிலும் தலித்துகளுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது.
- செ.கார்கி