mohan-bhavat 350“சமத்துவமின்மை இருக்கும் வரை தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

இது, பூனை சைவமாகிவிட்டேன் என்று சொல்வதைப் போல இருந்தாலும், மனுநீதி பேசிய வாயால், சமூகநீதி பேச வேண்டிய சூழல் உருவாகி யிருப்பதையே இது உணர்த்துகிறது.

திராவிடர் கழகத் தலைவர் சொன்னதுபோல, ‘இது பெரியார், அம்பேத்கர் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி’.

பத்து ஆண்டுகள் வனவாசத் திற்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் படிகளுக்கு முன் விழுந்து வணங்கி, ஆளும் கட்சியாக நுழைந்ததில் இருந்தே, பா.ஜ.க.வின் ‘அகண்ட பாரத’ நடவடிக்கை தொடங்கிவிட்டது.

சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்துப் புதுமை செய்கிறேன் என்ற பெயரில், ஈழத்தில் தமிழினப் படுகொலை புரிந்த ராஜபக்சேவைப் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்தது, காஷ்மீர் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்ய முயல்வது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று முழங்குவது, இந்தி ஆட்சி மொழி - சமற்கிருதம் ஆதிக்க மொழி என்று நிறுவ ‘சமற்கிருத வாரம்’ கொண்டாடச் சொல்வது என்பன உள்ளிட்ட பா-.ஜ.க.வின் தொடர் இந்துத்துவச் செயல் பாடுகள் பல ஐயப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில், ‘வருணாசிரம தர்மத் தை’யும், ‘மனுநீதி’யின் சட்டங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் ., இடஒதுக்கீடு வேண்டும் என்று பேசி யிருப்பது ஐயத்தோடு கூடிய வியப்பைத் தருகிறது. இதற்கு சில நாள்களுக்கு முன்புதான், ‘இந்தியா இந்துக்கள் நாடு’ என்று கூறினார் மோகன் பகவத். இதற்கு பா.ஜ.க., உள்பட இந்துத்துவ சக்திகள் அனைத்தும் ஆதரவுக் குரல் கொடுத்தன.

இன்று நிலவும் சமூக சமத்துவ மின்மைக்குக் காரணம், இந்து மதத்தின் வருணாசிரமமும், அது வலியுறுத்தும் சாதி ஏற்றத் தாழ்வுகளும்தான். அந்த வருணா சிரமத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர், ‘சமத்துவமின்மை இருக்கும் வரை தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு தேவை’ என்கிறார். அப்படியானால் ஆர்.எஸ்.எஸ். சமூக சமத்துவத்தை ஏற்றுக் கொள்கிறதா?

மோகன் பகவத் கூறிய சமத்துவ மின்மையில், பால் சமத்துவமின்மையும் அடங்குமா? ஆம் என்றால், ஆர்.எஸ்.எஸ். சின் பினாமியாக நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க-. அரசு, நாடாளுமன்றத்தில், பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டைச் சட்ட மாக்க, ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கலாமா? அப்படியே மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் பாராதி ஜனதா அரசு நிறைவேற்றுமா?

கேரளாவில் சீர்திருத்தப் பெரியார் அய்யன்காளி நினைவுநாள் நிகழ்ச்சியில் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, “ஒரு பிராமணருக்குக் கிடைக்கும் அதே வேலை, தற்போது தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கும் கிடைக்கிறது. ஆனால், இதன் மூலம் சமத்துவம் கிடைத்து விட்டதாகக் கருத முடியுமா? சமூகத்தின் இறுதி இலக்கு நல்லிணக்கம்தான்.

இதற்காக நிலையான விழிப்புணர்வு கொண்ட சமூகம் நமக்குத் தேவை” என்று பேசியிருக்கிறார். பிராமணருக்குக் கிடைக்கும் அதே வேலை, தலித்துக்கும் கிடைக்கிறது என்றால், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்? இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான, தொடர்வண்டித் துறையும், மாநில அரசுகளின் உள்ளாட்சி நிர்வாகமும் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்புவது ஏன்-?

இதைப் பேசிய பிரதமர் மோடியின் சிந்தனை எப்படிப்பட்டது தெரியுமா? ‘தலித்துகள் தூய்மைப் பணி செய்வதை, இந்தச் சமூகத்தின் மற்றும் கடவுளின் மகிழ்ச்சிக்காக செய்யும் கடமையாகக் கருதவேண்டும். இதைக் கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதி ஆனந்தத் துடன் செய்ய வேண்டும்’ என்று ‘கர்மயோக்’ என்னும் தன்னுடைய புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். இது வருணாசிரமம் தந்த சனாதனத் திமிர் அல்லவா? இதற்கும் கேரளாவில் அவர் பேசிய பேச்சுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

தன் பிம்பத்தை ஊதிப் பெருக்கிக் காட்ட ஊடகங்கள் இருக்கிற துணிச்சலில் மோடி இப்படிப் பேசித்திரி கின்றார். நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடி பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதைக் கூடுதல் தகுதிகளில் ஒன்றாக அக்கட்சியினர் முன்வைத்துப் பிரச்சாரம் செய்தனர். கலயம் மண்ணால் ஆனதா, பொன்னால் ஆனதா என்பதில் சிக்கலில்லை. அதன் உள்ளே இருப்பது தண்ணீரா, நஞ்சா என்பதுதான் இங்கே முக்கியம். மோடியின் உள்ளடக்கம் பார்ப்பனீயச் சிந்தனைதான் என்பதற்கு ‘கர்மயோக்’ சான்று. அதன்படி, ‘பேசும் நா இரண்டு’டையவர்தான் மோடி என்பதற் குக் கேரளாவில் பேசிய பேச்சு சான்று.

மோகன் பகவத் இடஒதுக்கீடு வேண்டும் என்பதையும், பார்ப்பனர்களுக்குக் கிடைக்கும் அதே வேலை தலித்துகளுக்கும் கிடைக்கிறது என்னும் மோடியின் பேச்சையும் பார்க்கும் போது, தந்தை பெரியார் விடுத்த எச்சரிக்கைதான் நினைவுக்கு வருகிறது. ‘வைதீகப் பார்ப்பானைக் கூட நம்பிவிடலாம், லௌகீகப் பார்ப்பானை நம்பக்கூடாது’.

Pin It