sadashivam 350நீதிபதிகளுக்கு உள்ளார்ந்த ஆசை காட்டி, அவர்களைத் தங்களின் தந்திர அரசியல் பொறியில் சிக்கவைக்கும் சூழ்ச்சி நாடகம் இந்தியாவில் அரங்கேறி உள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதியை ஆளுநராக நியமிப்பதில் தவறு என்ன இருக்கிறது-?. சட்டம் அறிந்தவர் ஆளுநராக இருப்பது நல்லது தானே? கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையோடு ஆளுநர் செம்மையாய்ப் பணி யாற்ற இது உதவும் தானே என்று சிலர் கேட்கிறார்கள். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது!

இப்படிக் கேட்பவர்கள் பெரும்பாலும் அப்பாவிகள்! அப்பாவிகள் ‘பாவிகளை’ அறியமாட்டார்கள். பாவிகளுக்கு முகமூடி உண்டு!.

நாட்டில் எத்தனையோ அரசியல் வாதிகள் நீதிபதிகளாகி இருக்கிறார்கள். அரசியல்வாதி நீதிபதியாகிக் கட்சி அரசியலைக் கடந்து நீதி பரிபாலனம் செய்ய முடியும் என்றால், நீதிபதி ஆளுநராகி அரசியல் சட்டக் கடமையை ஆற்ற முடியாதா என்றும் சிலர் கேட்கிறார்கள். இவர்கள் அப்பாவிகளை விட மேலானவர்கள். அவ்வளவுதான்!

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரசியல்வாதிதான். கேரளாவில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமைச்சராகவே இருந்தவர் அவர். பின்னர் நேரடி அரசி யலிலிருந்து விலகியபின், உச்சநீதிமன்ற நீதிபதி என்ற நிலைக்கு உயர்ந்தார். தி.மு.க. வின் மாவட்டச் செயலாளராக இருந்த இரத்தினவேல் பாண்டியன் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி யாகப் பணியாற்றிவிட்டு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார். அரசியல்வாதிகளாக இருந்து நீதிபதியானவர்களின் பட்டியல் இந்தியா முழுவதும் நீளமானது.

அரசியல்வாதியாக இருந்து நீதிபதியாவது வேறு ; நீதிபதியாக இருந்து அரசியல்வாதியின் கைப்பாவை யாவது வேறு! நீதிபதி நியமனம், ஆளுநர் நியமனம் இரண்டின் அடிப்படையும் வழிமுறையும் வெவ்வேறானவை!

உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டுமென்றால் அதற்குச் சில நடை முறைகள் இருக்கின்றன. மாநிலத்தில் உள்ள உயர்நீதி மன்றம், நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்யும். அதை ஒரு நீதிபதிகள் குழு செய்யும்.

அந்தக் குழுவை கொலிஜியம் என்று அழைப்பார்கள். இக்குழுவில் தலைமை நீதிபதியும், இரண்டு மூத்த நீதிபதிகளும் இருப்பார்கள். இந்த மூவர் குழுதான் பட்டியலை இறுதி செய்யும். மற்ற நீதிபதிகள் யாரை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். ஆனாலும் இறுதிப்பட்டியல் மூவர் குழுவால்தான் முடிவு செய்யப்படும். அந்தப் பட்டியல் உச்ச நீதி மன்றத்திற்கு அனுப்பப்படும்.

உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்றால், அங்கு மூவர் குழுவிற்குப் பதில் ஐவர் குழு இருக்கும். அக்குழுதான் முடிவு செய்யும். உயர் நீதிமன்றம் அனுப்பும் பட்டியல் உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்பட்டு, மத்திய சட்ட அமைச்சகத்துக்குக் கோப்புகள் அனுப்பப்பட்டு, அதன் பின்னர் பிரதமர் அலுவலகம் கோப்பு களைப் பார்த்து, குடியரசுத் தலைவருக்குக் கோப்புகள் வந்து சேரும். பின்னர் குடியரசுத் தலைவர் உச்ச நீதி மன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பார். நீதிபதி நியமனத்தின்பேரில் பல்வேறு செல்வாக் குகளும், சக்திகளும் விளையாடும் என்றாலும், நியமனத்திற்கு ஒரு நெறிமுறை இருக்கிறது. மாநில அரசு, மத்திய அரசு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய நான்கு அங்கங்களுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் பங்கு இருக்கிறது. தற்போது மத்திய அரசு இந்த நடை முறையை மாற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. நடைமுறை மாற்றப் பட்டாலும் அப்போதும் ஒரு குழு உண்டு. அதுதான் முடிவு செய்யும்!

அரசியல்வாதிகள் அல்லது அரசியல் சார்புடையவர்கள் நீதிபதிகளேயானாலும், சட்டவரம்பிற்கு உட்பட்டுத்தான் தீர்ப்பு அளிக்க முடியும். நீதி மன்றத்திற்குரிய ‘விருப்ப அதிகாரத்தை’ப் பயன்படுத்தி ஒரு நீதிபதி தடை உத்தரவு தரலாம். குற்றவாளிகளுக்குப் பிணை தரலாம். என்றாலும் எல்லை தாண்டுவது அரிது! நீதிபதியின் தீர்ப்பு சரியில்லை என்றால் மேல் முறையீடு உண்டு. ஆனால் நீதிபதி நியமனம் போல் அன்று ஆளுநர் நியமனம். இதற்குத் தேர்வுக் குழு எதுவும் கிடையாது. தகுதி பற்றிய பரிசீலனையும் கிடையாது. ஆளும் கட்சி அல்லது பிரதமர்தான் ஆளுநர் நியமனத்தைத் தீர்மானிக்கும் சக்தி. தங்களுடன் ஒத்துப் போகாதவர்களை ஆளுநர்களாக நியமிக்க மத்திய அரசு என்ன புத்தியற்ற அரசா? மோடி என்ன பைத்தியக்காரரா? ஆளுநர் நியமனம் அரசியல் பின்னணி உடையது. ஆளுநர் என்பவர் மத்திய அரசின் முகவர்! ஒற்றர்! இதற்கு எதற்கு நீதிபதி?

ஒரு நீதிபதி மாநில ஆளுநராகிப் புதிதாக எதையும் சாதித்து விட முடியாது. ஓய்வு பெற்ற பின்னும் ‘சுகமாக வாழ்வதற்கு’ ஒரு உத்திரவாதம் மட்டுமே அது. ஆனால் அதே சமயம் ஓய்வு பெற்றால் மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஓர் அலங்காரப் பதவியில் அமரலாம், அதற்கு வாய்ப்பு உண்டு என்ற எண்ணம் நீதிபதியாக இருக்கும்போதே ஒரு நீதிபதிக்குத் தோன்றிவிட்டால், அந்த நீதிபதி அரசுக்கு அனுசரணையாக நடக்க வாய்ப்பு உண்டு.

இது நீதி பரிபால னத்தில் சுயசார்பை நிலைகுலையச் செய்யும். நீதிபதிகள் பணி ஓய்வு பெற்ற பின் பல்வேறு தீர்ப்பாயங்களுக்கும், ஆணையத்திற்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் போக்கே தவறானது என்ற எண்ணம் நாட்டில் வளர்ந்து வருகின் றது. இந்த நியமனங்களும் நீதிபதிக ளைத் தங்களுக்கு இணங்க வைக்கும் அரசியல் தந்திரம் என்று மக்களாட் சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் கூறிவருகிறார்கள். பணியிலிருக்கும் நீதிபதிகளை மாற்றி ஆணையங்களுக்கும் தீர்ப்பாயங்களுக்கும் நியமிப்பதுதான் உகந்த செயல் என்று சொல்லப் படுகின்றது. அவசியமானால் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்திக் கொள்ளலாம்.

ஆனால் ஓய்வு பெற்ற உடன் இன்னொரு பதவி என்பது மத்திய அரசு, பதவியிலிருக்கும் நீதிபதிக்குப் போடும் தூண்டிலாகும். தூண்டிலில் ஏதாவது ஒரு மீன் சிக்கும்.

நீதிபதி சதாசிவம் என்ற தனி மனிதன் ஆளுநரானது அன்று பிரச்சனை! மோடி அரசின் கொள்கை முடிவுதான் பிரச்சினை.

மோடி அரசு இந்துத்வாவை நடைமுறைப்படுத்த உதித்த அரசு. நிர்வாக இயந்திரம் எப்போதுமே ஆளும் சக்திக்கு அதன் இசைக்கு ஏற்ப ஆடும். ஆனால் நீதித் துறை அப்படி இருக்காது. நீதித் துறையையும் வளைத்தால்தான் மோடி அரசு தன் திட்டத்தைச் சுலபமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்!

அதற்கான முன்னோட்டம்தான் நீதிபதி ஆளுநரானது! நிர்வாகத் துறையை அடக்குவதுபோல் நீதித்துறையை அடக்க முடியாது. அதை அடக்கத் தனி உத்தி வேண்டும். பா .ஜ. க வுக்கு அந்த உத்தி தெரியும்! ‘ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்.’

அந்த வேலையின் ‘விளக்கம்’தான் நீதிபதி சதாசிவம். நீதி தேவனையும் மயக்க இதுவொரு நல்ல வழிமுறை. இதைத் தொடர விடுவது மக்களாட்சிக் கோட்பாட்டை மண்ணுக்குள் புதைப்பதாகும். நீதிபதி சதாசிவம் இதையெல்லாம் எண்ணிப்பார்த்தாரா இல்லையா? நீதிபதிகள் ஆளுநராவது வேறு, தலைமை நீதிபதி ஆளுநராவது வேறு!

ஒரு மோசமான உள்நோக்கம் கொண்ட முன் உதாரணத்திற்குத் தலைவராகி விட்டார் நீதிபதி சதாசிவம்!

Pin It