சென்ற வாரம் தானே புயலின் தாக்குதலுக்கு உள்ளான கடலூர் மாவட்டம், இன்றுவரை இருளிலும், துயரத்திலும் மூழ்கிக் கிடக்கிறது. ஊருக்கெல்லாம் ஒளி வழங்கிய நெய்வேலியின் சுற்றுப்புறக் கிராமங்கள், இன்று இருண்டு கிடக்கின்றன. முந்திரி உள்ளிட்ட பயிர்கள் எல்லாம் கடும்புயலில் சிக்கிச் சேதமடைந்துவிட்டதால், அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அரசின் நிவாரண நடவடிக்கைகளோ ஆமை வேகத்தில் நகர்கின்றன. போர்க்காலச் செயல்பாடு போல, மக்கள் நலிவு நீக்கும் பணிகளில் அரசு உடனடியாக ஈடுபட வேண்டும். போதுமான நிதி உதவியை மத்திய அரசு வழங்கிட வேண்டும். நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமத்துப் பிள்ளைகளின் எதிர்காலப் படிப்புக்கான செலவுகளை, மனித நேயத்துடன் ஏற்றுக்கொள்ள என்.எல்.சி. நிர்வாகம் முன்வரவேண்டும். கடலூர் மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவித்திட வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கின்றது.

*******

பெரியார்தாசனா, அப்துல்லாவா?


நண்பர் பெரியார்தாசன், மதம் மாறியபின், தன் பெயரை அப்துல்லா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இனியும் அவரைப் பெரியார்தாசன் என்றே அழைப்பது, அவர் மாறியிருக்கும் இசுலாம் மார்க்கத்திற்கு நாம் தரும் மரியாதை ஆகாது. அது மட்டுமல்லாமல், கடவுள் நம்பிக்கை வந்துவிட்டதாகச் சொல்லும் அவரைப் பழைய பெயரால் அழைப்பது, நாம் பேசும் பெரியாரின் கொள்கைகளுக்கும் மரியாதை சேர்க்காது. எனவே இனிமேல் அவர் அப்துல்லாதான், பெரியார்தாசன் இல்லை!

- சுப. வீரபாண்டியன்

(30.12.2011 அன்று குவைத்தில் நடைபெற்ற, குவைத் தமிழ் இதழின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவில், பெரியார்தாசன் முன்னிலையில்...)

Pin It