அன்புத் தோழர் உமா, தான் இதுவரை "ஜனசக்தி' மற்றும் "கருஞ்சட்டைத் தமிழர்' ஆகிய இதழ்களில் சொல்லியதெல்லாம் தொகுத்து "சொல்வதெல்லாம்...' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நூலாக வெளியிட்டிருக்கிறார். இந்நூல் மிகப் பொருத்தமாகத் தோழர் அருள்மொழி அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் புதிய மாதவி, தன் முன்னுரைக்கு "எம் அன்னையர் பெருவெளியின் மின்னல்' என்று தலைப்பிட்டிருக்கிறார். பெரியார் காலத்தில் சுயமரியாதைச் சுடரொளிகளாக ஒளிர்ந்த பெண்களின் பாதையில் இருள் எப்படிப் படர்ந்தது? அந்தப் பெண்மணிகளின் பெயரும் தொடர்ச்சியும் எங்கே சென்று ஒளிந்தது என்ற கேள்விகளின் தொடுப்பாக, "அதிலிருந்து இதோ ஒரு மின்னல்' என்று அவர் உமாவை அடையாளப் படுத்தியிருக்கிறார். இந்தத் தலைப்பு சரியானதுதான் என்று உமாவின் கட்டுரைகளைப் படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றியது. ஜனசக்தியின் கட்டுரைப் பிரிவு ஆசிரியர் கவிஞர் ஜீவபாரதி அவர்களும் தனது மதிப்புரையை வழங்கிச் சிறப்பித் திருக்கிறார். பெரியாரின் கருத்துகளை உள்வாங்கியே தான் உருவாகி யிருப்பதாக, உமா தன் முன்னுரையில் பதிவு செய்திருக்கிறார். அதே போல் அவரின் பெரியாரிய சிந்தனைகளின் முத்திரை அவருடைய ஒவ்வொரு கட்டுரையிலும் பதிவாகியிருப்பதைக் காண முடிகிறது.

ஒருவர் தனது எழுது பொருளாக எவற்றையயல்லாம் தேர்ந்தெடுத் திருக்கிறார் என்பதை வைத்தே அவரை அடையாளப்படுத்திவிட முடியும். அதற்கு முன்னால் அவருடைய எழுத்து நடை பற்றிக் குறிப்பிட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறேன். மிக எளிமையானதும், அழகியலும், நகை உணர்வோடு கூடிய தர்க்கவியலும் பொருந்திய மொழி நடை அவருக்கு வாய்த்திருக்கிறது. எனவே இந்த நூல், வாசிப்புத் தன்மைக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. மொத்தம் 23 கட்டுரைகள் இதில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. "கருஞ்சட்டைத் தமிழர்' மற்றும் "ஜனசக்தி' ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. அனைத்தும் சமகாலத்திய நிகழ்வுகள் அல்லது சிந்தனைகள் சார்ந்தவை. சமகாலத்து நிகழ்வுகள் மீது கருத்து சொல்லுகின்ற தெளிவும், சிந்தனையும் நிரம்பிய பெண்கள் இன்னும் குறைவாகவே இருக்கிறார்கள். அந்த வகையிலேயே இந்நூலின் ஆசிரியர் பாராட்டுக்குரியவராகிறார்.

பகுத்தறிவு, மனிதநேயம், சாதிஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு ஆகியவையே இவரது எழுத்தின் உந்து சக்தியாகத் திகழ்கின்றன. அதே நேரத்தில் வெறும் கருத்தியலை மட்டும் திணித்து, கட்டுரையை வாசகரின் தலைக்குச் சுமையாக்காமல், ஒவ்வொரு கட்டுரையிலும் தான் எழுதும் பொருள் பற்றிய நல்லதொரு தெளிவான வரையறையை வகுத்துக் கொண்டு, அதற்கான நடப்பு சார்ந்த புள்ளிவிவரங்கள் மற்றும் வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு அவர் தருகின்ற விதம் மிக நேர்த்தியாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டு:

"சாதித்திருக்கிறார் மாநகராட்சி மாணவி' என்று அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில் படித்து சாதித்த மாணவியைப் பாராட்ட வருகின்ற ஆசிரியர், தமிழ் நாட்டிலே மட்டும் பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களது போட்டித் தேர்வுகளை மாநில மொழியான தமிழில் நடத்தாமல் ஆங்கிலத்தில் நடத்துகின்றன என்று குறிப்பிடுகிறார். அதிக மதிப்பெண் வாங்கியதற்காக அந்த மாணவியை ஆயிரமாயிரம் பேர் பாராட்டியிருப்பார்கள். ஆனால் அந்தப் பாராட்டுரையே, ஒரு சரியான சமூக சிந்தனை உள்ளவரிடமிருந்து வருகின்ற போது, பாராட்டைக் கடந்து கட்டுரையின் பயணம் விரிந்து செல்வதைக் காண முடிகிறது. சுயமரியாதைத் திருமணங்களின் பெருமையையும், வரலாற்றையும் நிதானமாகக் கூறிக் கொண்டு வந்து, அந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தங்கள் சமூகத்தில் கிழிந்து திருமணமாகி விடுகின்றனவே வாழ்க்கை நடைமுறையில் என்று கேட்கும்போது, புதிய மாதவி சொன்ன அந்தப் பெருவெளியின் மின்னல் வெட்டிச் செல்கிறது.

இந்தியாவிலேயே நல்லாட்சி தருபவர் மோடி என்ற ஊடகங்களின் பிரச்சாரக் கூச்சல் நாலாபக்கமும் ஒலிக்கும் தருணத்தில் "கொஞ்சம் நிறுத்துகிறீர்களா' என்று, புள்ளிவிபரங்களைத் திரட்டிக் கொண்டு களத்திற்கு வருகிறார். திறமையானவன் என்றால், என்ன செய்தாலும் சரிதானா என்ற கேள்வி சமூகத்தின் மனச்சாட்சியை நோக்கி ஊடகவியலாளர்கள் எழுப்ப வேண்டிய கேள்வியாகும்.

"சாமியே மரணம் அய்யப்பா' என்ற கட்டுரை, மூடநம்பிக்கைகள் எப்படி ஒரு பொருளாதாரக் காரணியோடும், அரசியல் நோக்கோடும் உருவாக்கப்படுகின்றன என்பதை எடுத்தியம்புகிறது. கடவுள் நம்பிக்கையை, அதன் தோற்றுவாயாக உள்ள புராணக் கதைகளை அம்பலப்படுத்தித் தோலுரித்தது திராவிடர் கழகம். ஆனால் இன்றைய நடைமுறையில் மதம் புதுப்புது அர்த்தங்களைப் புனைந்து கொண்டு வரும் வேளையில், அந்தப் புனைவுகளுக்குப் பின் உள்ள அரசியலைக் கொண்டு வந்து அவிழ்த்துப் போடுவதே இன்றைய படித்த இளைஞர்களைக் கவரக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் அந்தக் கட்டுரை ஒரு சரியான சமூகத் தேவையை நிறைவு செய்கிறது. பள்ளிச் சிறார்களுக்கும் மாலை போட்டு, ஆசிரியர்களை அவர்களை சாமி என்று சொல்ல வைத்து, கடவுள் பேரால் ஏமாற்றித் திரிய பிஞ்சிலேயே பழக்குகிறீர் களே என்று கேட்கும்போது, இவர், தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளராக இருந்தவரும் கூட என்பது நினைவுக்கு வருகிறது.

"மானிடம் போற்ற மறுக்கும் ஒரு
மானிடம் தன்னைத் தன் உயிரும் வெறுக்கும்''

இது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை. இந்தக் கவிதையை மிக மிகப் பொருத்தமாக மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளி அகற்றும் கொடுமை குறித்துக் குமுறி  எழுதிய கட்டுரையில் எடுத்தாண்டிருக்கிறார். தீண்டாமைக் கொடுமையும், நீடிக்கும் நிகழ்வுகளையும் இடங்களையும் பட்டியலிட்டுக் காட்டுகின்ற நேரத்தில் இந்தக் கவிதையைத் தவிர வேறெந்தக் கவிதையாவது இவ்வளவு பொருத்தமாக இருக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது. "சமூகத்தின் இரட்டைப் பார்வை' என்ற கட்டுரையும் தீண்டாமைக் கொடுமை குறித்து சமகால நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறது. "பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை' என்ற கட்டுரையில், கிராமத்துப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சமூகக் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகளை மிகச் சரியாகச் சுட்டிக் காட்டிச் சாடியுள்ளார்.

"உங்களுக்கு லோககுரு எங்களுக்குப் பெரியார்' என்ற கட்டுரை பெரியார் பாசறையிலிருந்து வெளிப்பட்டிருக்கும் தாளம் தப்பாத இசை என்று சொல்லலாம். அதில், பார் கவுன்சிலில் திராவிடர் கழகத் தோழர் அருள்மொழி கூறியதையும் சேர்த்துப் பதிவு செய்திருப்பது சிறப்பு. தமிழ் மற்றும் தமிழீழப் போராட்டம் குறித்தும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இப்படி ஒவ்வொரு கட்டுரையும் நல்ல தகுதியினைப் பெற்றே திகழ்கிறது. ஒரு நல்ல எழுத்தாளராக உமாவின் பெயரை இந்நூல் பதிவு செய்கிறது என்பதில் அய்யமில்லை.

பெண் விடுதலை பேசும் இவருடைய எழுத்துகள் இன்னும், திருமணம், காதல், காமம் மற்றும் குடும்பம் இவற்றுக்குள் இருக்கும் ஆணாதிக்க அரசியலை நோக்கித் திரும்பவில்லை. அவர் எழுதியிருப்பவை சரிதான். இன்னும் எழுத வேண்டியவையும் நிறைய இருக்கின்றன. எனவே இறுதியாக உமாவிடம் நான் தேடுவது, இன்னும் வளர வேண்டிய பெண்ணிய ஒளியைத்தான். அதற்கான கருவும், வேரும் அவருக்கிருக்கின்றன. அவர் இன்னும் வளர்வார் என்ற நம்பிக்கையும் நமக்கிருக்கிறது.

சொல்வதெல்லாம்...
இரா. உமா, இலக்கியா பதிப்பகம்
169, வி.வி. கிரி தெரு, இராமகிருஷ்ணா நகர்,
ஆழ்வார்த்திருநகர், சென்னை - 87
விலை: ரூ.70/-, தொலைபேசி:9444582089

Pin It