இன்று தமிழகத்திற்கு மீண்டும் பெரியார் தேவை! ஏன்? பெரியார் தலை முறைக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த நிலைமைக்கு மீண்டும் விரைந்து சென்று கொண் டிருக்கின்றனர். ஆம்! தமிழினம் பல்குழு வழிப்பட்டு இன்று சிதறுண்டு வருகிறது. பெரியார் வார்த்தையில் சொன்னால் ‘நெல்லிக்காய்’ போலத் தமிழர் நம்முள் உட்பகைக் கொண்டு ஒருவரை ஒருவர் தொலைக்கச் சூளுரை கொள்கின்றனர். அரசியல் பொது வாழ்க்கையில் நாணயம் கடைச் சரக்காக மாறி வருகிறது. தன் பெண்டு, தன் மக்கள் என்று சுற்றித் திரிந்தும் சுருட்டியும் வாழும் ‘கடுகு மனத்’தவர்களாகத் தமிழர்கள் உருமாறி வருகின்றனர். புதுப்புதுக் கடவுள்கள் இறக்குமதி ஆகின்றன. புதுப்புதுக் கோயில்கள் நாள் தோறும் கட்டப்படுகின்றன. நடுவண் அரசின் பணித் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை அருகி வருகிறது. ஏன்? ஆரம்பப் பாடசாலையிலிருந்து ‘தர்ம மார்க்’கில் மாணவர்கள் வளர்ந்து வரு கின்றனர். ஏன் இந்த அவலம்? பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஏன்? பெண் குழந்தைகள் கொல்லப் படுகின்றனர். இங்கும் அங்கும் ஆதி திராவிடர்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள். கட்டுப்பாடு குலை கிறது! ஒழுக்கம் உருக்குலைகிறது. இந்த நிலை சீராக பெரியார் வேண்டுமல்லவா?

தமிழினம் காலத்தால் மூத்தது. நாகரிகத்திலும் வளர்ந்த இனம். ஆயினும், அடிக்கடி செழுந்தமிழ் வழக்கினைச் சார்ந்த மரபுகளைக் கடைப்பிடித்து ஒழுகாமல், அயல் வழக்குகளை எடுத்துக் கொண்டமை யால் தன் நிலை தடுமாறிற்று. அயல் வழக்கின் வழி வந்த தீமைகளுள் தலையாயவை தீண்டாமை, சாதிகள் முதலியவை. தீண்டாமைக் காரணமாகப் பலகோடி மக்கள் செயலற்றவர் ஆயினர்; வாழ்வை இழந்தனர். இந்தப் பொல்லாத தீமையைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடி வந்திருந்தாலும் இன்னமும் தீண்டாமை அகலவில்லை. தீண்டாமை அகலாதது மட்டுமல்ல; ஆதி திராவிடர்கள், தங்களை ஒரு தனிச் சாதியமைப்பில் தனிமைப்பட்டுப் போகவே விரும்புகின்றனர். அவர்கள் பரந்த தமிழினத்துக்குள் சங்கமமாதற்குரிய விருப்பு குறைவாகவே இருக்கிறது. முன்பெல்லாம் சாதி வேற்றமைகள் நெகிழ்ந்து கொடுத்தன. இன்று சாதி முறைகள் கடினத் தன்மை அடைந்து வருகின்றன. சாதி வேற்றுமைகளும் தீண்டாமையும் அறவே ஒழிக்கப்பட்டால் ஒழிய தமிழருக்கு எதிர்காலம் இல்லை. இது சத்தியம் - உண்மை! இந்தப் புத்தியை உரக்கத் தருவதற்கு இன்று பெரியார் வேண்டாமா?

அதிர்ஷ்டத்தை நம்பும் தமிழன்

தமிழன் - கடைக்கோடித் தமிழன் மீண்டும் மீண்டும் ஏழையாகி வருகின்றான்; ஏன், தமிழ்நாட்டில் வளம் இல்லையா? எல்லாம் இருந்தும் இவன் ‘அதிர்ஷ்ட’த்தைத் தான் நம்புகிறான். இன்று தமிழ்நாட்டில் 675 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. வாங்குபவர் யார்? அப்பாவித் தமிழர்கள்! ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்பதை மறந்தவர்கள், இன்று தமிழ்நாட்டையும் வறியதாக்குகின்றனர்; அவர்களும் ஏழையாகின்றனர். அதிர்ஷ்டத்தை - பரிசுச் சீட்டை நம்பும் வரையில் தமிழன் வாழ மாட்டான்! இதைச் சொல்லித்தர பெரியார் வேண்டாமா?

இன்று உலகில் சிறந்து விளங்கும் நாடு ஜப்பான் நாடு. ஏன் உழைக்கிறான்? அவனுக்கு உழைத்து வாழ்வதே பெருமை! உழைக்கும் நேரத்தில் திரைப்படக் கொட்டகை களில் இருக்க மாட்டான்! கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று பேச்சுக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்க மாட்டான்; தமிழ்நாட்டின் நிலை என்ன? இங்கு இரவும் பகலும் படம் பார்க்கலாம்! நாளெல்லாம் நகரங்களின் மூலைமுடுக்குகளில் நின்று வம்புபேசும் கூட்டம்! அதுவும் இளைஞர்கள் கூட்டம்! ஏன் வேலை இல்லை? கிடைக்கும் வேலையைப் பார்க்க விருப்பமில்லை! பொறுப்புகளையும் ஆபத்துகளையும் ஏற்றுக் கொண்டு வேலை செய்ய முன் வருவோர் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. இதனால், ஏராளமான மனித சக்தி வீணாகிறது; பாழடிக்கப்படுகிறது. இதைப் பற்றிக் கவலைப்பட ஒரு பெரியார் வேண்டாமா?

பகுத்தறிவு இன்று வேலை செய்ய மறுக்கிறது. பணம்தான் எல்லாம். “மனிதனை நினை” என்று பெரியார் பாடம் கற்றுக் கொடுத்தார். இன்று நமக்கு மனிதர்களை மதிக்கத் தெரிகிறதா? இல்லை, இல்லை! இன்று எங்கு நோக்கினும் ‘இந்திய’னையும் காணோம்; ‘தமிழ’னையும் காணோம்! சாதி மதங்களின் பாற்பட்ட குழுக்கள்தாம் எங்கெங்கும்! எவரும் தலைவராகவோ, தீர்க்கதரிசியாகவோ, மகானாகவோ பிறந்ததில்லை! பிறக்கப் போவதும் இல்லை! குழந்தைகள் தாம் பிறக்கும். குழந்தைகள் மனிதர்களாக வளர்க்கப் பெறுதல் வேண்டும்; உருவாதல் வேண்டும். இன்று இராமனுக்குத் திடீர் யோகம். இராம ஜன்ம பூமியைத் தேடிக் கண்டுபிடித்துக் கோயில் கட்ட விரும்புகிறார்கள்! இராமனுக்குக் கோயில் கட்டலாம். அது அவர்கள் விருப்பம். ஆனால் பாபர் மசூதிக்கு ஆபத்துச் செய்வானேன்! கல்லாகக் கிடந்த அகல்யையைச் சாப விமோசனம் செய்த இடத்தில் கோயில் கட்டலாமே! நெஞ்சமெல்லாம் கல்லாகிக் கிடக்கும் மனிதனின் நெஞ்சு அப்போதாவது நெகிழ்ந்து கொடுக்காதா? எங்குப் பார்த்தாலும் மதச் சண்டைகள்! சாதிக் கொடுமைகள்! இன்று இந்தியாவை, தமிழகத்தை வருத்துபவை அறியாமை! வறுமை! ஏழ்மை! சமூகக் கொடுமைகள்! இன்று இந்தியாவில், தமிழகத்தில் பக்திக்குப் பஞ்சமில்லை! பக்தி வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இன்று தேவை பகுத்தறிவு; கடினமான உழைப்பு! நாட்டுப் பற்று; இந்த வழிகளில் நடத்த ஒரு பெரியார் வேண்டாமா?

பெரியார் இல்லையே!

எந்த ஒரு அமைப்பும் தங்களுக்குத் தாங்களே அமைத்துக் கொண்ட வட்டத்திற்குள் நிற்கவே விரும்பு கின்றன. அந்த வட்டத்திற்கு வெளியில் நிற்பவர்களை விரும்பு வதும் இல்லை! நேசிப்பதும் இல்லை! மாறாக வெறுத்து ஒதுக்குகின்றன. இது வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு நல்லதல்ல. பெரியாருக்கும் இராசா சிக்கும் முரண்பாடுகள் நிறைய இருந்தன. ஆயினும் ஒருவரை யொருவர் நேசிக்க, மதிக்க மறுத்த தில்லை. அது மட்டுமல்ல. பரஸ்பரம் நம்பிக்கைக்குரியவர்களாகவும் விளங்கினர். அதுபோலவே காம ராசரைப் பெரியார் விரும்பினார்; பாராட்டினார். நமக்கும் பெரி யாருக்கும் இருந்த நட்பு-உறவு நாடறிந்தது. இன்று சமுதாயம் கடுமையான பாதிப்புகளுக்கு இரை யாகும்போது பெரியார் இல்லையே என்ற கவலை தோன்றுகிறது! கண்கள் குளமாகின்றன!

(நன்றி : 1992 ‘விடுதலை’ பெரியார் 114ஆவது பிறந்த நாள் மலர்)

Pin It