தெரிந்தோ
தெரியாமலோ
ஒவ்வோர் வீட்டிலும்
உயிருடன் இருக்கிறார்
பெரியார்

ஒவ்வொரு சூழ்நிலையிலும்
இப்படி
பேசிக் கொள்கிறார்கள்
இந்த காலத்திலேயும்

சாதி மதம் பார்க்கிறாங்கப்பா
சொல்கிறார்கள்
சொல்ல வைத்தது
பெரியார்.

பொண்ணுங்களை
அதிகம் படிக்கவைங்க
வேலைக்கு போகட்டும்
சொல்கிறார்கள்
சொல்ல வைத்தது

பெரியார்.
மனசு புடிச்சிருந்தா
சேர்த்து வைங்க
சாதி சாதகமெல்லாம்
எதுக்கு?
சொல்கிறார்கள்
சொல்ல வைத்தது
பெரியார்

பிறமாநிலத்தார் ஆதிக்கம்
அதிகமாயுடுச்சி
தமிழ்நாடு
தனிநாடாகனும்
சொல்கிறார்கள்.
சொல்ல வைத்தது
பெரியார்.

சாமியார்கள் எல்லாம்
மோசடிக்காரர்கள்
பிள்ளைவரம் கேட்டால்
பிள்ளையை கொடுக்கிறார்கள்
சொல்கிறார்கள்
சொல்ல வைத்தது
பெரியார்.

ஆண்டவன்
கொடுக்கிறானேன்னு
அதிகமா பெத்துக்காதீங்க
சொல்கிறார்கள்
சொல்ல வைத்தது
பெரியார்.

சோதனை குழாயில்
ஆணும் பெண்ணும்
சேராமலே குழந்தை
பிறக்கிறது.
சொல்கிறார்கள்
சொன்னவர் பெரியார்

தமிழகத்தில்
இன்று இப்படி
ஒளிக்கும் குரலெல்லாம்
அன்று பெரியாரின்
குரலாய் இருந்தது.
இன்றும் பெரியார்
தேவைப்படுகிறார்

இவையெல்லாம் சிலருக்கு
பிடிக்காத பெரியாரின்
பெரும் பணிகள்
பெரியாரை பிடிக்காத
சிலருக்கு
பிடித்த
கடவுளர்கள் மக்களுக்கு
என்ன செய்து விட்டன?

ஒவ்வொரு துறைக்கும்
ஒவ்வொரு கடவுளாம்.
கல்விக்கு கடவுளாம்
சரஸ்வதி

நாட்டில்
படிக்காதவர்கள் அதிகம்
செல்வத்திற்கு கடவுளாம்
லெட்சுமி

உலக வங்கியிடம்
ஒழியாத கடன்
அகிலம் அழிக்க சிவனின்
நெற்றிக் கண்
நம்பிக்கை யில்லை
சிவன்மீது
அணுகுண்டு சோதனை
அவ்வப்போது நடக்கிறது.

படைக்கும் கடவுள்
பிரம்மனுக்கு எதிர்ப்பு
கருத்தடை.
ஊரின் எல்லையின்
ஊர்காவல் தெய்வம்

ஊருக்குள்
பத்தடிக்கொருமுறை பலமான
சோதனை
காக்கும்
கடவுள்களை
காக்க காவல்துறை.

ஆனாலும் நம்மவர்கள்
அனுதினமும் வேண்டுதல்
“ஆண்டவனே காப்பாற்று.”
புராணத்தில் கடவுள் எடுத்த
அவதாரமெல்லாம்
தேவர்களை காக்க

இந்த பூமிபந்தை
புரட்டிப் போட்ட
பெரியார் எடுத்த போராட்ட
வடிவமெல்லாம்
இந்த மக்களை காக்க
இங்கே
இந்த
மண்ணுக்காகவும்,
இந்த
மக்களுக்காகவும்
தள்ளாத வயதிலும்
தளராமல் உழைத்த
எங்கள்
பெரியாரைவிட
எதுவும்
எங்களுக்கு பெரியதல்ல.

Pin It