நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து விழுக்காட்டுப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிர்ச்சிகரமான இந்த அறிவிப்பைக் கண்டித்தும் எதிர்த்தும், நெய்வேலியில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

கருப்புப் பட்டை அணிவது,வாயிற் கூட்டங்களை நடத்துவது போன்று படிப்படியான எதிர்ப்புகளைக் காட்டியபின்,ஜுலை 3ஆம் தேதி முதல்,காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அண்ணா தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து முன்னணிச் சங்கங்களும் ஒருங்கிணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

ஏற்கனவே ஒருமுறை இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எடுத்தது. அப்போது எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக,பின்பு அது கைவிடப்பட்டது. மீண்டும் இன்று அதே நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது. சிறிது சிறிதாகப் பங்குகளை விற்றுக்கொண்டே வந்து, 70 விழுக்காடு அளவிற்கான பங்குகளைத் தனியாரிடம் விற்றுவிடுவது என்பதே அறிவிக்கப்படாத மத்திய அரசின் திட்டம் என்று கூறுகின்றனர்.இது மிகக் கொடுமையானது.அரசின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க,மத்திய அரசுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்?

நெய்வேலியில் தொடங்கி,அடுத்தடுத்த பொதுத்துறை நிறுவனங்களையும் அதே போக்கில் தனியார் மயமாக்க, அரசு முயலும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இத்தருணத்தில் 5 விழுக்காட்டுப் பங்குகளைத் தமிழக அரசுக்கே விற்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். ஏறத்தாழ 446 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தப் பங்குகளைத் தமிழக அரசு வாங்கிவிட முடியும். அந்த வகையில், முதலமைச்சரின் கூற்று வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

ஆனால், தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வதென்று மத்திய அரசு முடிவெடுக்குமானால், அத்தனை பங்குகளையும் பெற்றுக்கொள்வதற்குத் தமிழக அரசின் நிதிநிலை இடம் கொடுக்குமா என்று கூறமுடியாது. எனவே பங்குகள் விற்பனை கூடாது என்பதே நம் அடிப்படைக் கோரிக்கையாக இருக்க வேண்டும்.

வேறு வழியேயின்றி, பங்குகளை விற்றே தீர வேண்டிய சூழல் இருப்பதாக மத்திய அரசு கருதுமானால், கூட்டுறவு நிறுவனங்களின் மூலம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கே அப்பங்குகளை விற்பனை செய்ய முன்வரலாம்.

எவ்வாறாயினும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சிக்கு ஒருநாளும் நாம் இணங்க முடியாது. அந்த வகையில், இன்று போராட்டக் களத்தில் நிற்கும் நெய்வேலித் தொழிலாளர்களுக்கு எல்லா வகையிலும் நாம் துணைநிற்போம், தோள்கொடுப்போம்!

வெல்லட்டும் நெய்வேலித் தொழிலாளர் போராட்டம்!

Pin It