அத்வைதம்,துவைதம்,வசிஸ்டாத் வைதம் இவை மூன்றும் பிற்கால இந்து சமயங்களின் தத்துவ சிந்தனைகளாக எழுந்தன.

கி.பி.8ஆம் நூற்றாண்டில்,அன்றைய சேர நாட்டில்,காலடி என்ற ஊரில் பிறந்த ஆதிசங்கரரால் பேசப்பட்டது அத்வைதம்.பிரம்மம் ஒன்றே நிலையானது, உண்மையானது. பிரம்மத்தைத் தவிர அனைத்தும் இருப்பதைப் போலத் தோற்றம் தரும் மாயை. அவை அழிந்துவிடும்.உலகின் அனைத்துமே பிரம்மம் ஒன்றில் அடக்கம் என்ற ஒருமை வாதமே அத்வைதம்.

கி.பி.11ஆம் நூற்றாண்டில்,கர்நாடகத் தின் உடுப்பிக்கு அருகில் இருந்த சிவரூப என்ற சிற்றூரில் பிறந்த மத்துவாச்சாரியார் துவைதத்தைப் பேசினார்.இவர் இருமை பற்றிப் பேசினார். பிரம்மாத்மா ஜீவாத்மா என்ற இருமை வாதமே துவைதம்.

கி.பி.11ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூரில் பிறந்த இராமானுஜர் வசிடாத்வைதத்தைப் பேசினார். உலகம் உண்மையானது, ஜீவன் உண்மையானது. ஆனால் அவற்றின் முழுமுதல் முதன்மையின் காரணம் பிரம்மம் என்கிறார் தன் விசேச அத்வைதமான வசிஸ் டாத்வைதத்தில்.

இவை மூன்றும் பிரம்மத்தை முதன்மைப் படுத்துவதில் சரியாக ஒன்றிணைகின்றன. இவற்றுள் காலத்தால் மிக முந்தியது அத்வைதம்.

ஆரியர்களின் நான்கு வேதங்கள்,ஆரண்யங்கள்,பிராமனங்கள் இவைகளை அடுத்துத் தோன்றியவை உபநிடதங்கள்.உபநிடதங்களின் எண்ணிக்கை 200ஐத் தொடுகின்றன.

அவற்றுள் 18 முக்கியமாகப் பேசப்படுகின்றன.

உபநிடதங்கள் தோன்றிய காலத்தைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாது. புத்தர் காலத்திற்கு முன்னர் கி.மு.800தொடங்கி,புத்தர் காலத்திற்குப் பின்னர் கி.மு.200க்கு முன்பு வரை இவை பல்வேறு காலகட்டங்களில் தோன்றியுள்ளன.வேள்விகள்,மாய மந்திர சக்திகள், வேத சடங்கு முறைகள் பற்றி பிரமானங் கள் பேசுகின்றன.

மாயாவத சிந்தனைகள்,தத்துவம் குறித்த முன்மாதிரி பற்றிய கேள்விகளை ஆரண்யங்களில் பார்க்கிறோம்.

பிராமனங்கள்,ஆரண்யங்களில் இருக்கும் ஆரிய வேத மரபுகள் உபநிடதத்தில் இருந்தாலும்,இந்திய தத்துவ உலகத்திற்கு முதன்முதலாக புதியதொரு தத்துவ சிந்தனையைக் கொண்டு வருகிறது உபநிடதம்.

உபநிடதத்தின் அந்தத் தத்துவம் & பிரம்மம். இந்திய தத்துவ இயலில் அத்வைதம் பிறந்த முதல் இடம் இதுதான்.

பிரம்மத்தைத் தோற்றுவித்த உபநிடதம், அது தோன்றி 600 ஆண்டுகள் வரை, எந்த ஓர் எழுச்சியையோ அல்லது மாற்றத்தையோ அதனால் கொண்டுவர முடியவில்லை. உபநிடதம் குறித்த விளக்கங்கள் கூட இக்கால கட்டங்களில் தெளிவாக இல்லை.

கி.மு.200இன் பிற்பகுதியில்தான் உபநிடதத்தின் பிரம்ம அத்வைதத்தை உயிர்ப்பித்து வெளியே கொண்டு வருகிறார் நாகார்ஜுனர்.

இவர் ஓர் ஆரியர்.ஆந்திர மாநில நாகார்ஜுன குண்டாவைச் சேர்ந்தவர்.வேத சாத்திரங்ககளையும், பவுத்தத்தையும் தெளிவுறக் கற்றுத் தேர்ந்து தெளிந்தவர்.

கடந்த 400 ஆண்டுகளில் ஆரியத்தின் இலட்சிய சமுதாயக் கோட்பாட்டிற்கான ஆரியக் கருத்தியலைப் பவுத்தம் பலவீனப் படுத்தி நிலைகுலைத்திருந்தது.அதனால் மீண்டும் ஆரியத்தைப் புனரமைக்கப் புறப்பட்டார் நாகார்ஜுனர்.

மக்களிடம் வலிமையாக வேறூன்றி யிருந்த பவுத்தத்தை நேரடியாக எதிர்ப்பதை விட, பவுத்தத்தில் நுழைந்து, அதில் ஆரியக் கருத்தியலைப் பவுத்தத்தின் பெயரால் நுழைத்து, மூல பவுத்தத்தையே சிதறடிக்கும் விதமாக நாகார்ஜுனர் பவுத்த துறவியாக பவுத்தத்தில் சேர்ந்தார்.

புத்தரைப்பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்ட இவர்,புத்தரால் சொல்லப்பட்ட (தேரவாத) மூலபவுத்தத்தைக் கேவலமான (ஈனம் ஆன & ஈனயான) பவுத்தம் என்று சொல்லி, புதியதொரு பவுத்தப் பிரிவை உருவாக்கினார் & அதன்பெயர் மகாயானம்.

தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா சொல்கிறார்,“புத்தருடைய கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுவதாகக் கூறிக் கொள்வதற்கு,மகாயான பவுத்தத்திற்கு இரண்டு அம்சங்கள் தேவை. மாயைக் கதைகளும், மத நூல்களின் புரட்டல்களும் அவையாகும். மகாயானர்கள்இரண்டையும் செய்தார்கள்.

மகாயானம், புத்தரின் உண்மையான கொள்கையே என்று  அவர்கள் கூறினார்கள். இதை நம்பமுடியாது. புத்தர் இவ்வாறு கூறவில்லை. பாலி மொழி உபதேசங்களில் “இது” காணப்படவில்லை”.

இதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. ஒன்று மாயை குறித்த கதை. மற்றொன்று மத நூல்களின் புரட்டல். இவகளால் உருவான “இது” என்ற மாய பிரம்மம் பற்றி மூலப் பாலிமொழி புத்தர் உரையில் காணப்படவில்லை என்பது கூடுதலான தகவல்.

இது என்பது பிரம்மம்.இதை மத நூலின் மாயை (சூன்யக் கதை)என்பது உபநிடதம் குறித்தது.

உபநிடதத்தின் மையச் சாரம் பிரம்மம்.அது மாயை,சூன்யம்.இதைப் புத்தர் ஏற்றுக்கொள்ளவில்லை, நிராகரித்தார்.

நாகார்ஜுனர் இதையே தன் கொள்கையாக்கிப்,பிரம்மத்தை மூலமாக்கிப் புத்த ருக்கு எதிரான ஓர் அத்வைத மகாயா னத்தை உருவாக்கினார்.

புத்தரின் மூலபவுத்தம் பொருள் முதல்வாதச் சிந்தனைகளை முன்வைத்தது.நாத்திகம் அதன் கொள்கையானது. ஆரியத்தை எதிர்த்தது. சமூக நீநிக்காகப் போராடியது.

நாகர்ஜுனரின் அத்வைத பவுத்தம் கருத்து முதல்வாதத்தை முதன்மைப்படுத் தியது. ஆத்திகத்தின் வடிவம் அது-.திராவிடத்திற்கு,பவுத்தத்தின் பெயரால் எழுந்த ஆரிய எதிர்ப்பு. சமநீதியைப் பின்தள்ளும் நவீன வேத பவுத்தம். இதற்கான கருவி பிரம்மம்.

சரி, பிரம்மம் என்றால் என்ன? சுருக்க மாகப் பார்ப்போம்.

பிரம்மம்,அது மூலப் பொருளான ஒன்றைக் குறிக்கும்.பிரம்மத்தைத் தவிர மற்றெவையும் உண்மையல்ல. அவை இருப் பதைப் போல இல்லாமையாகும் மாயை. பிரம்மமே இறுதியான உண்மை. உலகம் என்பதும் உண்மையில்லை. அது பிரம்மத் துள் அடங்கும் மாயத் தோற்றம் & இது பிரம்மம் குறித்து உபநிடதத்தின் சாரம்.

பிரகதாரன்யக உபநிடதம் சொல்கிறது, “உலகம் பிரம்மமாக இருந்தது. பிரம்மம் மட்டுமே இருந்தது. வேறு ஒன்றும் இல்லை”

இதில் உலகம் (பருப்பொருள்+உயிர்)முழுமையும் பிரம்மத்துள் அடங்கி பிரம்மமாகி விடுகிறது. தனித்தனியாக எதுவும் இல்லை.

இதை “மாத்யமிக சாத்திரம்” அதாவது பரமசத்தியம் என்கிறார் நாகார்ஜுனர்.

பரமசத்தியத்தை இப்படி விளக்கு கிறார் உபநிடத தத்துவவாதி யாக்ஞவாக் கியர், “பரமசத்தியத்தை இது (பிரம்ம) இந்த வகையானது, அது அந்த வகையானது என்று சொல்லமுடியாது. சொல்ல முயல் வது அறியாமை... அது (பிரம்மம்) கைப் பற்ற முடியாதது, ஆகவே அது கைப்பற்றப் படுவதில்லை. அது அழிக்க முடியாதது, ஆகவே அது அழிக்கப்படுவதில்லை.

அது எதனோடும் இணைவது இல்லை, ஆகவே அது தன்னோடு எதையும் இணைத்துக் கொள்வது இல்லை. பிரம்மம் கட்டுக்குள் அடங்குவது இல்லை”. இதுதான் பிரம்மம் குறித்து யாக்ஞவாக்யர் தரும் விளக்கம்.

இப்பொழுது நாகர்ஜுனர் சொல்வதைக் கேட்போம்,“பிரம்மத்திற்குத் தோற்றம் இல்லை, முடிவு இல்லை. நிலைப்பது இல்லை, நிலையாமை இல்லை. ஒருமை இல்லை, பன்மை இல்லை. உருவாவது இல்லை, மறைவது இல்லை. பரமசத்தியம் பிரம்மம் ஒன்றே” நாகர்ஜுனர் விளக்கம் இது.

பிரம்மம் இருக்கிறது என்று சொல்லும் பொழுது, அதை எதிர்மறைக் குறிப்பில் இல்லை இல்லை என்று மறுப் பதை வடமொழியில் “நேதி நேதி” வாத மாக்க குறிப்பிடுவார்கள்.
இந்த எதிர்மறைக் குறிப்பில் சொல்ல முற்படும் செய்தி உலகம் மாயை,உலகின் பொருட்கள் மாயை, மனிதர்கள் மாயை, மனிதர்களின் செயல், சிந்தனை, வாழ்க்கை மாயை. உலகின் இயக்கமே மாயை & சூன்யம்.

ஏங்கல்ஸ் சொல்கிறார்,“உலகம் முழுவதும் மிக நுண்ணிய பூத அணுவில் இருந்து மிகப்பெரிய தாவரம் வரை,மண்ணின் துகள்களில் இருந்து சூரியன் வரை, தாவரங்களில் இருந்து மனிதன் வரை இயல்பாகவே நிகழும் தோற்றமும், மறைவும் தான் இருக்கிறது. அவை இடைவிடாது ஓடும் ஓட்டத்திலும்,ஓய்வே இல்லாத இயக்கத்திலும், மாறுதல்களிலும் மறைந்து கொண்டு இருக்கின்றன என்பதே பவுத்தர்களின் கருத்து”இது இயங்கியல்.

ஏங்கல்ஸ் குறிப்பிடும் பவுத்தம் தேரவாதம்,மூலபவுத்தம்.நேதி நேதி எனச் சொல்லப்படும் இயங்காவியலான இல்லாமையில்,சூன்யத் தில் வெற்றிடத்தில், வெறுமையில் பிரம் மத்தை எப்படிப் பார்க்க முடியும்?

பதிலைப் பத்திரமாக வைத்திருக்கிறார் நாகர்ஜுனர்,“சூன்யத்தில் இருந்துதான் பிரம்மத்தைத் தேட வேண்டும். அதைப் பார்க்க முடியாது உணர வேண்டும்”

உணர்வு என்றால் என்ன-? ஆத்மா!

அத்வைத மகாயான பவுத்தத்தால்,இப்பொழுது நம்முன் வந்து நிற்கிறது & “பிரம்மாத்மா”.

-  தொடரும்.

Pin It