சமூக அவலங்களைப் பிரதிபலிக்கும், சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள் தமிழில் அதிகளவில் வருவதில்லை என்ற குறை நம்மில் பலருக்கும் உண்டு. வியாபார நோக்கோடு எடுக்கப்படும் படங்களுக்குத்தான் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது, சமூகப் படங்களைப் பார்ப்பதற்கு மக்கள் முன்வருவதில்லை என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. அந்தக் காரணங்களை எல்லாம் தாண்டி, சில இயக்குனர்கள் சமூகச் சூழலில் நிலவும் உண்மைகளுக்குக் காட்சி வடிவம் கொடுத்து, வெகு மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம். அந்த வகையில், இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘கெளரவம்’ என்ற படம், சாதிய அமிலத்தின் தெறிப்புகளில் மிகக்கொடியதான கெளரவக் கொலையை, அதற்கான காரணங்களை மக்களிடையே பேச வந்துள்ளது.

இந்த மகத்தான மனிதநேயப் பணிக்காக இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் முதலில் நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

எழுத்துகள் போடும்போது பின்னணியில் காட்டப்படும் ஓவியம், சாதி வெறியின் அத்தனை கோரங்களையும் கோடுகளாகக் காட்டுகிறது. வாச்சாத்தி, திண்ணியம், வெண் மணி என எல்லாக் கொடுமைகளும் நம் கண்முன்னே வந்து போகின்றன. வால்மார்ட், அந்நிய முதலீடு என இன்றைய அரசியல் பிரச்சினைகளையும் போகிற போக்கில் தொட்டுச் செல்லத் தவறவில்லை. ஆனாலும் சாதி வெறியின் உச்சகட்டமான கெளரவக் கொலையே படத்தின் பேசுபொருளாக இருக்கிறது.

நண்பனைத் தேடி வரும் இடத்தில், காதலித்த பெண்ணோடு ஊரைவிட்டுப் போய் 6 மாதங்களுக்கும் மேலாகியும், அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல், நண்பனின் வயதான தந்தை வாடிக்கொண் டிருக்கும் செய்தி கதாநாயகனுக்குத் தெரியவருகிறது. அவனோ பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவன், அவன் காதலித்த பெண்னோ அந்த ஊர்ப் பெரிய மனிதரின்(!) மகள். நண்பனைத் தேடும் முயற்சியில், தங்களுடன் படித்த மாணவர்களைத் தேடி ஒருங்கிணைத்து இறங்கிப் போடுகின்றனர். இறுதியில் நாம் எதிர்பார்த்தது போல இருவரையும் அழுகிய பிணங்களாகத்தான் கண்டெடுக்கின்றனர்.

அந்தக் கொலைகளை யார் செய்திருப்பார்கள் என்பதையும் நம்மால் முன்கூட்டியே ஊகித்துவிட முடிகிறது. திரைக்கதை அமைப்பில் உள்ள குறை என்று சொல்ல முடியாது. காரணம், இங்கு நடக்காத ஒன்றையோ, நாம் கேள்விப்படாத ஒன்றைப் பற்றியோ இத்திரைப்படம் பேசவில்லை. ஆனால், கண்டிப்பாகப் பேசியே தீர வேண்டியவற்றைப் பேசியிருக்கிறது என்பதே இப்படத்தின் சிறப்பு.

‘பத்து வயசுல சென்னைக்கு ஓடிப்போனவன் சார் நானு. அங்க இருந்த 20 வருசத்துல, ஒருத்தங்கூட நீ என்ன சாதின்னு என்னக் கேக்கல சார். சரவணபவனுக்குப் போயி சாப்டுட்டு, டிப்ஸ் குடுத்துட்டு வந்துட்டே இருப்பேன் சார். இங்க என்னடான்டா இத்துப்போன டீக்கடையிலகூட உள்ள விட மாட்றானுங்க சார்’ என்று மாசி சொல்லும் இடம், அழகான கிராமத்தின் இன்னொரு பக்கம் எத்தனை அசிங்கமானதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இரட்டைக் குவளையும், கையில் குடிக்கத் தண்ணீர் ஊற்றும் காட்சியும் பட்டணத்துப் பிள்ளைகள் பார்த்து, ஏன் இப்படி என்று கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை காண முற்பட்டால் அதுவே இந்தப் படத்திற்கான விருது.

சாதி இந்துக்களின் ஆதிக்க வெறியைக் காட்டும் அதே நேரத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்குள் பிரிந்து கிடப்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை இந்தப் படம். ‘தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்’ என்றார் அம்பேத்கர். அந்நிலை ஏற்படுத்தப்படாத காரணத்தால்தானே, ‘மயிலாப்பூரில் இருப்பவர்கள் வேறு வகையினர், அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த வருபவர்கள் வேறு வகையினர்’ என்று சொல்லி, அரசே திறந்த நீதிமன்றத்தில் தீண்டாமையை நிலைநிறுத்த முயல்கிறது இங்கே. இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களே தங்களுக்குள் மேல் கீழ் என்ற தன்மையோடு இருக்கின்ற வேதனைக்குரிய நிலையை சூடான வசனங்கள் மூலம் நம் கவனத்திற்குக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

அதே நேரத்தில் ஒன்றை நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். கதாநாயகனுக்குத் துணையாக வரும் நண்பன் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது புரிகிறது. சாதிக்கு எதிரான போராட்டத்தில் அவர் அடிகளைத்தாங்கி, ரத்தம் சிந்தக்கூடத் தயாராக இருப்ப தாகக் காட்டியிருப்பது உண்மை நிலைக்குப் புறம்பான தாக இருக்கிறது. அவர்களில் சிலர் அசைவம் சாப்பிடுவதும், படிக்கிற இடத்தில் அனைவரு டனும் கலந்து பழக வேண்டிய தும் காலத்தின் கட்டாயமாகி விட்டது.  மற்றபடி சாதிக்கு எதிராக அவர்கள் ரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறார் கள் என்பதெல்லாம் திரைப் படத்தில் மட்டும்தான் சாத்தியம். இதுபோன்ற சமர சங்களுக்கு முடிந்த வரை இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. அல்லது அந்தக் கதாபாத்திரத்தை அடையாளம் காட்டாமல் விட்டிருக்கலாம், கதாநாயகனைக் காட்டியிருப்பது போல.

கதாநாயகியை போராட்டக் குணம் உடையவராகக் காட்டியிருப்பதும், குத்துப்பாட்டும், கவர்ச்சி ஆட்டமும் வைக்காமல், கதையை மட்டுமே முன்னிலைப்படுத்தி இருப்பதும் பாராட்டுக்குரியது.
‘சாதி என்னும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி’ என்றார் புரட்சிக்கவிஞர். அந்த தாழ்ந்த படியில் விடாப்பிடியாக அமர்ந்து கொண்டு, மனிதத்தன்மையை அறவே இழந்துவிட்டவர்களுக்குக் கெளரவம் வேறு இருக்கிறதாம், அதைக் கட்டிக்காக்க, பெற்ற பிள்ளைகளைக் கூட வெட்டிச் சாய்ப்பார்களாம்! சாதி என்னும் நச்சு மரத்தை வெட்டிச் சாய்க்கக் காலமெல்லாம் பாடுபட்ட, பெரியாரின் மண்ணில், ஒரு கூட்டம் சாதிக்கு நீரூற்றி வளர்த்து அறுவடை செய்யப் பார்க்கிறது. இந்தச் சூழலில் இதுபோன்ற படங்கள் காலத்தின் தேவை என்பது வெளிப்படை. போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா என்றெல்லாம் தயங்காமல் செயல்பட்டுள்ள, தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் ராதாமோகன் மற்றும் நடிகர்கள், படக்குழுவினர் அனைவரும் பாராட்டுதலுக்குரிய கலைஞர்கள் ஆவர்.
 

சமூக சிந்தனையோடு எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ்த்திரை  உலகின் கெளரவம்!

Pin It