தினமணி நாளிதழில் கருத்துக்கணிப்பு என்கிற பகுதி தொடர்ந்து வெளி வருகிறது. பல ஆண்டுகளாக மதி என்பவரின் கார்டூனும் வெளிவந்து கொண்டிருக்கிறது. பெரியாரியவாதிகள் என்றால், பார்ப்பனர் நடத்தும் பத்திரிகைகள் அனைத்தையும் விமர்சிப்பார்கள் என்று பார்ப்பன நடுநிலையாளர்கள் கருத்துச் சொல்வதுண்டு. ‘பார்ப்பனர்கள் பத்திரிகை நடத்தும் நாட்டில் யோக்கியதையை நாம் எதிர்பார்க்க முடியாது’ என்று பெரியார் அன்று தெரிவித்த கருத்து இன்றைய காலகட்டத்திற்கும் நூறு விழுக்காடு பொருந்துகிறது.

பெரியாரின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாகவே, தினமணி நாளிதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, வைத்தியநாதன் என்கிற மூத்த பத்திரிகையாளர்(?) பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு, சனாதனக் கருத்து களை மிகவும் வெளிப்படையாகப் பரப்புகிற நாளிதழாகவே தினமணி வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்து, இந்தி, இந்தியா என இந்த மூன்று அடையாளங்களையும் தமிழன் ஏற்றுக்கொள்ளும் வரை தமிழினத்துக்கு விடுதலை சாத்தியம் இல்லை.

மேற்கண்ட மூன்று அடையாளங்களையும் ஒருசேர தகர்க்கப் பாடுபட்ட, பாடுபட்டுக் கொண்டு இருக்கும் ஒரே இயக்கம் திராவிட இயக்கம் மட்டுமே. இந்தத் திராவிட இயக்கத்தை ஒரு சேர அழிப்பதற்கான அனுமன் சேனை போல் தினமணி நாளிதழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அன்றாடம் கருத்துக் கணிப்பு என்கிற பெயரில், மக்கள் கருத்தைத் தெரிவிப்பது போல், பார்ப்பன நஞ்சைக் கக்கி வருகிறது.

தினமணியின் ஒரே நோக்கம் சங்பரிவார் தலைமையிலான ஒரு ஆட்சி மத்தியில் ஏற்பட வேண்டும் (22.01.2013, கருத்துக்கணிப்பு). சங்பரிவாருக்கு ஆதரவு தரும் மாநில அரசு இங்கு ஏற்பட வேண்டும் என்பதே. பாரதிய சனதா ஒரு நல்ல இயக்கம், அதைவிட முக்கியம் நரேந்திர மோடி இந்தியாவிற்குத் தலைமை தாங்க வேண்டும் என்பது தினமணியின் அவா. தினமணியின் கருத்துக் கணிப்பு என்கிற பகுதி தன்னுடைய அகண்ட பாரதக் கனவை மக்களின் கருத்தாகத் திணித்து வருகிறது. இந்திய அளவில் மாநிலக் கட்சிகள் பிற்படுத்தப் பட்டோர் அமைப்புகளை இழிவு படுத்துவ தும் ஊழல் கட்சிகளாகச் சித்தரிப்பதும் இதன் நோக்கம். பாரதிய ஜனதாவையும், நரேந்திர மோடியையும் பரிசுத்தமாகக் காண்பிப்பது தான் அதன் எண்ணம்.

அதே போல், தமிழக அளவில் ஜெயலலி தாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுவது போலவும், தி.மு.க. உள்பட திராவிட இயக்கம் தமிழகத்தில் இருந்து தனிமைப் பட்டு விட்டது போலவும் சித்தரிக்க முயன்று வருகிறது. தினமணியின் வக்கிரத்துக்கு மிகச் சிறந்த உதாரணம், 14.03.2003 அன்று வெளியான கார்டூன். திகார் சிறையில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு இருப்பவர்கள் தங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, சிறையில் தூக்குப் போட்டுச் சாக வேண்டும் என்பதுபோல் ஒரு கார்டூனை மதி வரைந்திருந்தார். என்னே ஒரு கொடூர மனநிலை.

சங்கராச்சாரியார் பாலியல் குற்றத்திற்காகவும், கொலை வழக்கிற்காகவும் கைதான போது, இப்படி ஒரு கார்டூனை தினமணி வெளியிட்டதா? பார்ப்பன தினமணி ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். சங்கராச்சாரி தூக்குப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று எந்த பெரியாரிய வாதியும் சொல்லவில்லை. இதுதான் மனுநீதி சிந்தனை யாளர்களுக்கும், மனிதாபிமான சிந்தனை யாளர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு. குற்றம் சுமத்தப்பட்டால் விசாரணை இல்லாமல் ஒரு சூத்திரனைக் கொலை செய்யலாம் என்கிற மனுநீதியின் கொள்கை பரப்பு ஏடாகவே இந்த தினமணி எழுதி வருகிறது.

மரணதண்டனைக் கைதிகளுக்கான கருணை மனுவைத் தொடர்ச்சியாக ஜனாதிபதி நிராகரித்து வருகிறார். இச்சூழலில் மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக மரணதண்டனைக்கு எதிராகப் போராடி வருகின்றன. ஆனால் தினமணியோ மரண தண்டனைக்கு ஆதரவான பிரச்சாரத்தைத் தனது கார்டூன் மூலம் தொடர்ந்து பரப்பி வருகிறது. அதோடுகூட, மரணதண்டனைக்கு எதிரான மனித உரிமை ஆர்வலர்களையும் மிகவும் கேவலமாகச் சித்தரித்துக் கார்டூன் வெளியிடுகிறது ( 23.02.2013  கார்டூன்).

25.03.2003 அன்று வெளியான கார்டூ னில், குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இசுலாமிய பயங்கரவாதிகள் தான் என்கிற இந்துத்துவப் பிரச்சாரத்தைச் செய்கிறது. குண்டு வெடிப்புச் சம்பவங்களில் விசாரணை இன்றிக் கைது செய்யப்படும் நபர்களாக இசுலாமியர்கள் இருக்கும் இந்நாட்டில், அவர்களை உடனடியாகத் தூக்கில் இடச் சொல்கிறது தினமணி. திரைப் படங்களில் தீவிரவாதிகளாக இசுலாமியர் களைச் சித்தரிப்பதை நியாயப்படுத்துவதன் மூலம் இந்துத் தீவிரவாதத்தை மறைக்க முயல் கிறது, விஜய பாரதத்தின் கிளைப் பத்திரிகை யான தினமணி (03.01.2013, 01.02.2013, 23.02.2013, 15.03.2003 கார்டூன்கள்).

திராவிட மறுப்புத் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இங்கு சிந்திக்க வேண்டும். மரணதண்டனை விதிக்கப்பட்ட புல்லர், பேரறிவாளன் உள்பட அனைவருக்காகவும் நாம் போராடி வருகிறோம். ஆனால் மரண தண்டனை வேண்டும் என்கிற கருத்தைத் தினமணி தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறது. கருணாநிதி மரண தண்டனைக்கு எதிராக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதற்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்று கருத்துக் கணிப்பு வெளியிடுகிறது (14.04.2013 கருத்துக் கணிப்பு). அதே சமயம் கருணாநிதி மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடாது என்கிற சோவின் கருத்துக்கு மக்களிடம் ஆதரவு பெருகுவ தாகக் கருத்துக் கணிப்புக் கூறுகிறது (17.01.2013 கருத்துக் கணிப்பு).

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கருத்துச் சொல்லும் தினமணி, பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் பெண்கள் ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் உடைக் கட்டுப் பாடு பெண்களுக்கு வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறது (03.01.2013, 04.01.2013  கருத்துக் கணிப்பு) பாலியல் குற்றங்கள் இந்தியாவில்தான் நடக்கின்றன, பாரதத்தில் நடைபெற வில்லை என்று கூறிய மோகன் பகவத் என்கிற ஆர்.எஸ்.எஸ்.காரருக்கும், தினமணி வைத்தியநாதனுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதைப் பெண்ணியச் சிந்தனையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். லல்லு பிரசாத்தையும், நிதிஷ்குமாரையும் ஒப்பிடும் போது, நிதிஷை ஆதரிக்கிறது. நிதிஷ்குமார் நரேந்திர மோடியை எதிர்க்கிற போது, நிதிஷ்குமாரைக் கடுமையாகச் சாடுகிறது. படிநிலை அமைப்பைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது இனமணி.

மாநில உரிமை, ஈழத்திற்கு ஆதரவான தீர்மானம் என ஜெயலலிதாவின் கருத்தை வரவேற்கும் தினமணி, தி.மு.க. தி.க., விடுதலைச் சிறுத்தைகளின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை விமர்சிக்கிறது (06.03.2013) ஆனால் அதே சமயம், சி.பி.எம். பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் தமிழீழத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்போது தினமணி கள்ள மவுனம் காக்கிறது. ஈழ விவகாரத்தில் துக்ளக் சோவின் கருத்தில் துளியும் மாறுபாடு இல்லாத, நாளிதழ் தினமணி என்பதைத் தமிழ் உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகத் தமிழ் உணர்வாளர்களைத் தன்வயப்படுத்த முயற்சிக்கிறது. மருத்துவர் இராமதாசுக்கு மதுரைக்குள் நுழையத் தடை விதித்ததைக் கண்டிக்கும் தினமணி, அதே கருத்தைத் தி.மு.க. தலைவர் கூறியவுடன், அதைச் சந்தர்ப்பவாதம் என்று கருத்து வெளியிடு கிறது (10.01.2013 கருத்துக் கணிப்பு).

இதையயல்லாம் விட ஒரு படி மேலே சென்று, தமிழர்கள் கொண்டாடும் மாட்டுப் பொங்கலை இழிவு படுத்திக் கார்டூன் வரைகிறது இந்த இனமணி (17.01.2013 கார்டூன்). சித்திரை ஒன்றாம் தேதியைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர்களிடம் திணித்தது மட்டுமல்லாமல், தமிழ்ப்புத்தாண் டான பொங்கல் திருநாள் கொண்டாட் டத்தைத் தமிழர்கள் வாழ்வில் இருந்து அகற்றிட வேண்டும் என்கிற நோக்கோடு, பண்பாட்டுப் படையயடுப்பை நடத்திக் கொண்டி ருக்கிறது இந்தத் தினமணி.

திராவிடத்தை விமர்சிப்பது என்கிற மனநோய் நம்மவர்களிடம் பெருகி வரும் இச்சூழலில் அந்நோயைத் தமிழகத்தில் பரவலாக்க வேண்டும் என்பதே தினமணியின் நோக்கம். சிறுபான்மையினர் எதிர்ப்பு, மரணதண்டனைக்கு ஆதரவு, பெண்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் அடிப்படைவாத மனப்பான்மை, சமூக நீதிக்கு எதிரான கருத்தியல் எனப் பெரும்பான்மையான மக்கள் நலனுக்கு எதிராக ஆரிய நஞ்சைக் கக்கும் தினமணியின் மானுட விரோதப் போக்கைத் தமிழர்களாகிய நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அது வெளியிடும் கருத்துக் கணிப்பு மக்கள் கருத்தல்ல, சனாதனத் திணிப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(பின்குறிப்பு: தினமணி இணையத் தளத்தில் கருத்து வெளியிடும் பெயர்கள், மனுநீதி, முதியமுட்டை, ரமேஷ் போன்ற பெயர்களாக மட்டுமே பெரும்பாலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது).

ஜெயலலிதாவை எதிர்க்கும் விஜயகாந்த் பாராட்டும் பண்ருட்டி!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இருக்கக்கூடாது என்ற முடிவில், தே.மு.தி.க.வினருக்கு எல்லா இடையூறுகளையும் கொடுத்து வருகின்றார் தமிழக முதலமைச்சர். அங்கே தொடர்ந்து குதிரை பேரம் நடக்கின்றது. ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்மாறி விட்டனர். மேலும் ஆறு தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப் பட்டு விட்டனர். அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மீது ஊர் ஊருக்கு வழக்குத் தொடுத்து அவரை இழுத்தடிக்கிறது அரசு.

ஆனால், அக்கட்சியின் அவைத்தலைவரும், சட்டமன்றத் துணைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சட்டமன்றத்தில் அன்றாடம் புகழ்ந்து தள்ளுகின்றார். தாயுள்ளம் என்கிறார். ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டுவதாகச் சொல்லி, இயேசுவுக்கு இணையாகப் பாராட்டுகின்றார்.எல்லாக் கன்னங்களிலும் அறை வாங்கியவர்கள் இவர்கள். இயேசுநாதர் அவரா? விஜயகாந்தின் செல்வாக்கினால் கட்சி வளர்ந்தது. பண்ருட்டியின் பாதை, அக்கட்சியை வேறு எங்கோ கொண்டு செல்கிறது.விழித்துக் கொள்வாரா விஜயகாந்த்?

Pin It