பாலியல் வன்முறைகளும், வல்லுறவுகளும் உலகின் நாடுகள் பலவற்றிலும், காலந்தோறும் நடைபெற்று வருகின்ற கொடூரமாகவே உள்ளன. எனினும் இப்போது இந்தியாவில் அதனினும் கொடிய நிகழ்வுகள் அடிக்கடி தலைகாட்டுகின்றன. சிறுமிகள், பெண் குழந்தைகள் மீதும் கூட, இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் இன்றைய காலத்தில் கூடுதலாய் நடக்கத் தொடங்கியுள்ளன. இந்த இழிநிலையை மாற்றுவதற்கான உடனடித் தேவை நாட்டில் எழுந்துள்ளது. இது குறித்த சமூக, உளவியல் பார்வைகளை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.

விலங்குகளைப் போல மனிதர்கள் நடந்து கொள்கின்றனரே என்று பலர் ஆதங்கப்படுவதைப் பார்க்கிறோம். கவனித்துப் பார்த்தால், விலங்குகள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை என்பது புரியும். அவை, ஒரு குறித்த பருவ காலத்தில், எதிர்பாலின விலங்கின் இசைவோடுதான் உறவு கொள்கின்றன. மனிதன்தான் விலங்கினும் கீழாய் மாறிவிட்டான்.

இவை போன்ற குற்றங்கள் மிகுவதற்கு, இரண்டு வழிகளில் அரசுகள் பொறுப்பாகின்றன. பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் திரைப்படங்கள், பத்திரிகைகள், இன்னபிற புறத்தூண்டல்களின் மீது அரசுகள் போதுமான கவனம் செலுத்தவில்லை. அக்குற்றங்கள்  நிகழா வண்ணம் தடுக்க வேண்டிய காவல்துறையும் முடுக்கி விடப்பட வில்லை. அதனால்தான் தில்லி போன்ற மாநகரங்களில் அரசுக் கெதிரான போராட்டங்கள் வெடிக்கின்றன. ஆனால் அந்தப் போராட்டங்கள் குறித்தும் சற்றுக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மிகப் பெரும்பான் மையோர், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களே. பா.ஜ.க., இடது சாரிகள் ஆகியோரே அப்போராட்டத்தை வழிநடத்தினர். அதே வேளையில், தமிழ்நாட்டிலும் அதனையயாத்த பாலியல் வன்முறை கள் நடைபெற்றுள்ளன. திருப்பூரிலும், திருவைகுண்டத்திலும் இரண்டு சிறுமியர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒரு சிறுமி இறந்தும் போய்விட்டாள்.

தில்லியில் அதிரடிப் போராட்டங்களை நடத்திய, மன்மோகன் சிங், சோனியா காந்தி வீடுகளை முற்றுகையிட்ட அந்த அரசியல் கட்சிகள், தமிழ்நாட்டில் சிறு அசைவைக் கூட ஏற்படுத்தவில்லை. என்ன காரணம்?

தில்லி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். தமிழக அரசுக்குச் சிறு இடையூறு கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணமா? போராட்டங்கள் அனைத்தும் மனித நேயம் கொண்ட வையா, அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மீது நாட்டம் கொண்டவையா? இவைபோன்ற ஐயங்கள் எழவே செய்கின்றன. எனினும் கொடூரங்கள் எதிர்க்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

அவை அரசியல் கட்சிகளின் போராட்டங்களாக மட்டு மல்லாமல், பொதுமக்களின் போராட்டங்களாகப் புறப்பட வேண்டும் என்பதே நம் விருப்பம். கொடுமைகளுக்கு ஆளான குழந்தைகளின் நிலை நம்முடைய குழந்தைகளுக்கும் நாளை வராத என்பது என்ன உறுதி?
மனிதநேயம் மிக்கவர்கள் ஓரணியில் திரண்டு, நாட்டையும், நம் மக்களையும் காப்பாற்ற வேண்டிய தருணம் இது!

Pin It