தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஸ்ரீலங்கா அரசின் இந்தியத் தூதுவர் பிரசாத் கரியவாசம் (Prasad Kari yawasam) அண்மையில் சென்னையில் சந்தித்து உரை யாடினார். அந்த சந்திப்பு குறித்து, இலங்கை அதிபர் ராஜபக்சே தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவைத் தங்கள் நாட்டிற்கு விருந்தினராக அழைத்துள்ள செய்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்து பத்திரிக்கை ஆசிரியர் என். ராமிற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் (23.07.2011) இத்தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் ஈழ உறவுகளை இலட்சக்கணக்கில் கொன்று குவித்த ராஜபக்சேயின் நெருக்கமான நண்பர் இந்து நாளேட்டின் ஆசிரியர் என். ராம் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. இட்லரினும் கொடியவனான, தமிழ் இனத்தை அழிக்க முயன்ற ராஜபக்சே யுடன் நட்புப் பாராட்டுவது மட்டுமின்றி, இன்றும் அந்தக் கொடூரனைப் போற்றியும், வாழ்த்தியும் எழுதிக் கொண்டிருக்கும் என். ராம், சோ போன்றவர்கள், தமிழ்நாட்டில் ஏடுகள் நடத்திப் பிழைத்துக் கொண்டிருப்ப வர்கள்.

அண்மையில் ஸ்ரீலங்காவின் தலைநகரான கொழும்பிற்குச் சென்று, அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேயுடன் காலை உணவு அருந்திய படியே பேட்டி கண்டிருக்கிறார் ராம் (breakfast meeting at temple trees in colombo). தமிழீழப் பகுதிகளில் சிங்கள இராணுவக் குடியேற்றம் பற்றிய கேள்விக்கு, 'தெற்கிலும் கூடத்தான் இராணுவம் குடிகொண்டுள்ளது. அம்பன் தோட்டாவிலும் இராணுவம் நிற்கத்தான் செய்கிறது. அதைப்போல யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பகுதியிலும் இராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதைச் சிலர் திரித்துப் பேசுகின்றனர்'என்று ஆணவத்தோடு விடை சொல்லியிருக்கிறார் ராஜபக்சே.

இன்னும் பல கேள்வி களுக்கும் இதே போன்ற திமிர்த்தனமான விடைகளே வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக, பிபிசி யின் அலைவரிசை 4 ஒளிபரப்பிய படத்திற்கு அவர் கொடுத்தி ருக்கும் விளக்கம் நம் குருதியைக் கொதிக்க வைக்கிறது. "அது தமிழில் எடுக்கப்பட்ட படமாக இருக்க வேண்டும், அப்படி யில்லை என்றால், விடுதலைப் புலிகள் ராணுவத்தினரைச் சுடுகின்ற படமாக அது இருக்கலாம்"என்று விடைய ளித்திருக்கிறார். இந்த விடை யைத்தான் இந்து நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது.

அந்த உரையாடலுக்கு இடையில்தான், ஜெயலலிதாவுடனான சந்திப்பு மகிழ்ச்சி தருகிறது என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இங்கே பலபேர் அவரை ஈழத்தாய் என்று சொல்லிப் பாராட்டிப் பரவசமாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ சிங்களத் தாயாக ராஜபக்சேக்குக் காட்சி யளிப்பார் போலிருக்கிறது. காரணம் இல்லாமல் ராஜபக்சே மகிழ்ச்சி அடைகிறார் என்று நாம் சொல்லிவிட முடியாது. 2009 ஜனவரி 17ஆம் தேதி, எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பேட்டியில், "இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள்தான் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வலுக்கட்டாயமாக இராணுவத்திற்கு முன்னால் அம்மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்களால் தான் தமிழினம் அழிகிறதே அல்லாமல், சிங்கள அரசினால் அன்று"என்று சொன்னவரல்லவா அவர். அப்படிப்பட்ட ஒருவர் தமிழக முதலமைச்சர் ஆனதில் , ராஜபக்சே மகிழ்ச்சியடையத்தானே செய்வார்.

'இதெல்லாம் பழைய கதை. இப்போது அம்மா மாறிவிட்டார்' என்று புதிய பூசாரிகள் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கோரி தீர்மானம் நிறை வேற்றும் வேளையிலும், புலிகளை அவர் எவ்வளவு இழிவுபடுத்திப் பேசினார், கொச்சைப்படுத்திப் பேசினார் என்பதை நாடு அறியும். அத்தனை சொற்களையும் சட்ட மன்றத்திலேயே அவர் பேசி, அவைக்குறிப்பிலும் மாறாத கறையாக அவை பதிவாகி உள்ளன என்பதை நாடறியும். ஒரு பக்கம் பொருளாதாரத்தடை கோருவதும், மறுபக்கம் போராளிகளைக் கொச்சைப்படுத்துவதும் ஒரே நாடகத்தின் வெவ்வேறு காட்சி கள்தான் என்பதை ராமும், சோவும் ராஜபக்சேக்குச் சொல்லாமலா இருப்பார்கள்! அதனால் தான் அவரை விருந்தினராக ராஜபக்சே தன் நாட்டிற்கு அழைக்கிறார்.

Pin It