இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து பாசிச ராஜபக்சே குடும்ப அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் 50 நாட்களைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தை 1000க்கும் அதிகமான மகிந்த ராஜபக்சேவின் கைக்கூலிகள் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியதில் இருந்து தீவிரமானது.

இதில் ராஜபக்சேவின் பூர்வீக வீடு உள்பட ஆளும் கட்சியினரின் பல இடங்கள் எரிக்கப்பட்டன. போராட்டத்தைக் கண்டு அஞ்சி ஓடிய கோழையான மகிந்த ராஜபக்சே இதுவரை எங்கிருக்கின்றார் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.

இந்த சம்பவத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்ததுடன், 200ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

colombo protestபோராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு கடுமையான போலீஸ் ஒடுக்குமுறைகளும் ஏவி விடப்பட்டிருக்கின்றன.

மக்களின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் ஓடிப்போன மகிந்த ராஜபக்சேவுக்குப் பதிலாக ஜனாதிபதி கோத்தபய இராஜபக்சே ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவர் ரணில் விக்கிரமசிங்கை தற்போது பிரதமராக நியமித்திருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்கை கோத்தபய இராஜபக்சே ஏன் பிரதமராக நியமித்தார் என்பதைப் புரிந்து கொண்டால்தான் போராட்டத்தை சீர்குலைக்க நடக்கும் சதியை நாம் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த காலங்களில் தொழிலாளர்கள் மீது கொடூர தாக்குதல் தொடுப்பதிலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையில் இருந்து தூக்குவதிலும், உலகமயத்தை தீவிரமாகத் திணிப்பதிலும், சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளை ஈவிரக்கமின்றி செயல்படுத்துவதிலும் அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு சேவை செய்வதிலும் ரணில் பேர் போனவர் ஆவர்.

ஓடிப்போன மகிந்த ராஜபக்சேவுக்கும், கோத்தபய இராஜபக்சேவுக்கும் இடையில் தரகு வேலை பார்க்கவும் மக்கள் போராட்டங்களைத் திசை திருப்பவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மீண்டும் கடன் வாங்கவுமே ரணில் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியானது உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை கொள்முதல் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து அவசரகால நிதியைப் பெற முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நெருக்கடியை ரணில் விக்கிரமசிங் போன்ற அமெரிக்க ஏஜென்டுகளைப் பயன்படுத்தி தீர்க்க முடியும் என மகிந்த ராஜபக்சேவுக்கும் கோத்தபய இராஜபக்சேவும் நம்புகின்றார்கள்.

இலங்கை இன்று எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி சாதாரணமானது அல்ல. 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 95.4 சதவீதத்தை கடனுக்காகவே செலவிட வேண்டிய நிலையில் இலங்கை இருந்தது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் 21.5 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 33.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்வளவு மோசமான நெருக்கடிக்குள் இலங்கை தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் அது கடைபிடித்த உலகமய பொருளாதாரக் கொள்கையே ஆகும்.

வாங்கிய கடனையே கட்ட முடியாத நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங் மீண்டும் கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளார். இதன் மூலம் தனியார் மயம், தாராளமயம் போன்றவை இலங்கையில் தீவிரமாக செயல்படுத்தப்படுவதோடு மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்ட தொகையும் பெருமளவு வெட்டப்படும்.

இதை மே 16 அன்று நாட்டு மக்களுக்கு விக்கிரமசிங் ஆற்றிய உரையிலேயே குறிப்பிட்டு இருக்கின்றார், “அடுத்த சில மாதங்கள் எவரும் முன்னர் முகங்கொடுத்திராத அளவுக்கு நிலை கடினமானதாக இருக்கும்” என்று. இதன் அர்த்தம் நாட்டின் மொத்த நெருக்கடியையும் சாமானிய மக்களே தங்கள் தோளில் சுமக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் இலங்கையில் இருக்கும் தொழிற்சங்கங்கள் அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு எதையும் தெரிவிக்காமல் மெளனமாக இருக்கின்றன. மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும், கோத்தபய இராஜபக்சேவுக்கு எதிராகவும் போராடிய தொழிற்சங்கங்கள் இன்று ரணில் விக்கிரமசிங்கின் அடாவடித்தனங்களை அனுசரித்துப் போகும் நிலையை அடைந்திருக்கின்றன.

தற்போது இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள் மீதான அடக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட ஆழமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டதும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை மக்கள் அனுப்பும் பணம் வீழ்ச்சியடைந்துள்ளதும், உக்ரைன் மற்றும் ரஷ்யா போரால் தேயிலை ஏற்றுமதி சரிந்துள்ளதும் பெரும் கடன் நெருக்கடியில் இலங்கையைத் தள்ளியுள்ளது.

நாட்டின் மத்திய வங்கி 51 பில்லியன் டாலருக்கும் அதிகமான பெரிய வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள், மருந்துகள் மற்றும் அடிப்படை உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பற்றாக்குறையால் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் மக்கள் நிற்க வேண்டியுள்ளது, தினமும் பல மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

வாழ்வதற்கு வேறு வழியே இல்லை என்ற சூழ்நிலையில்தான் இலங்கை மக்கள் தங்களுக்குள் இருந்த இன வெறுப்புகளை உதறித் தள்ளிவிட்டு இன்று கரம்கோர்த்து பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக தீவிரமாக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் உலக ஏகாதிபத்தியங்கள் இலங்கை மக்களின் போராட்டத்தை ஒழித்துக் கட்ட தங்கள் ஏவல் நாய்கள் மூலம் முடிந்த அனைத்து சதிகளையும் அரங்கேற்றிக்கொண்டு இருக்கின்றன.

இலங்கை மக்களின் போராட்டம் தன்னெழுச்சியாக, எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின்றி நடைபெறுவதால் அது அரச பயங்கரவாதத்தின் எளிய இலக்காக இருக்கின்றது.

போராடும் மக்கள் ஒரு தலைமையின் கீழ், சித்தாந்தத்தின் கீழ் அணிதிரட்டப்படவில்லை என்றால் நீண்ட கால நோக்கில் தொய்வு ஏற்பட்டு ஆளும் வர்க்கம் நினைத்ததே நடக்கும் சூழ்நிலை ஏற்படும்.

மக்கள் உண்மையில் இன்று தங்களின் நெருக்கடிக்கு காரணமான முதலாளித்துவ அரசுக்கு மாற்றாக தங்களைக் காப்பாற்றும் சோசலிச அரசையே எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு தலைமை அளித்து வழிநடத்திச் செல்ல யாருமில்லாத அல்லது அதற்குத் தகுதியான கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத சூழ்நிலை இலங்கையில் நிலவுகின்றது.

இத்தனை அடக்கு முறைக்குப் பின்பும் அங்கு மக்கள் தங்களின் வர்க்க ஒற்றுமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் இந்தப் போராட்டத்தின் தனிச்சிறப்பாகும்.

இனவாதமும், மொழிவாதமும், சாதியவாதமும், மதவாதமும் இன்று இலங்கையில் தோற்கடிக்கப்பட்டு தங்களின் உண்மையான எதிரி முதலாளித்துவமும், அதைச் செயல்படுத்தும் அரசும்தான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த உணர்வை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டியதும், இன்னும் தீவிரமாக வளர்த்தெடுக்க வேண்டியதும் அங்கிருக்கும் முற்போக்கு அமைப்புகளின் தலையாய பணியாகும்.

இன்றில்லை என்றாலும் நிச்சயம் இந்த வர்க்க ஒற்றுமை நாளை சோசலிச அரசை நோக்கிய பாதைக்கு இலங்கையை இட்டுச் செல்லும் என நம்புவோம்.

- செ.கார்கி

Pin It