துனிசியா, எகிப்து என மத்திய கிழக்கு நாடுகளில் பற்றிப் படர்ந்த மக்கள் திரள் போராட்டங்கள் 'அரபு வசந்தம்' என்று அழைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக்கானப் போராட்டமும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. இப்போது ஏப்ரல் மாதம் தொடங்கி சிறிலங்கா தலைநகரம் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலும் இன்ன பிற நகர்ப்புற பகுதிகளி லும் நடந்துவரும் போராட்டத்தை 'சிறி லங்கா வசந்தம்' என்று அழைக்கலாம்.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளியல் நெருக்கடி சிங்கள மக்களைத் தெருவில் இறங்கி போராட வைத்துள்ளது. சிங்கள மக்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று ஆட் சிக்கு வந்த இராசபக்சே சகோதரர்களைத் தான் இப்போது ‘பதவி விலகு, வீட்டுக்குப் போ' என்று மக்கள் போராடி வருகின்றனர். கொரோனாவுக்கு முன்பு இனவழிப்புப் போரின் வெற்றிவாதத்திற் குள்ளாக ஆட்சியைப் பிடித்தவர்கள் இவர்கள். இப்போது ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக் கடிக்கு இராசபக்சாக்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

rajapakse brothers 430கடந்த புதன் அன்று (4-5-2022) சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பேசிய அதன் நிதியமைச்சர் அலி சாப்ரி விவரங்களைச் சொன்னார். கோத்தபய இராசபக்சே அரசால் கொண்டு வரப்பட்ட வரிவிலக்கு காரணமாக கடந்த 2020 இலும் 2021 இலும் 5 இலட்சம் பேர் வரி செலுத்தாத நிலையேற்பட்டது. சிறிலங்கா அரசு தன் வரவை விடவும் 2.5 மடங்கு அதிகமாக செலவு செய்து வருகிறது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு 1500 பில்லியன் சிறிலங்கா ரூபாய்கள் அதன் வரவு. மொத்த செலவோ 3522 பில்லியன் ரூபாய்கள். சிறிலங்கா அரசின் மொத்த கடன் தொகை 53 பில்லியன் டாலர்கள். 2026 ஆம் ஆண்டுக்குள் இதில் 25 பில்லியன் டாலர் செலுத்தப்பட வேண்டும். அதன்படி இந்த ஆண்டு 7 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

எதிர்க்கட்சிகள் இந்த பொருளியல் நெருக்கடிக்கு காரணமாக இராசபக்சே சகோதரர்களை சொல்கின்றன. 2019 இல் கோத்தபய இராச பக்சே ஆட்சிக்கு வந்தவுடன் வரி விலக்கை அமல்படுத்தினார். இதன் விளைவாக நாட்டின் வருவாய் ஒட்டுமொத்த உள்நாட்டு உற் பத்தியில் 9ரூ என்றளவுக்கு சரிந்தது. அதை தொடர்ந்து வந்த கோவிட் பெருந்தொற்று நெருக்கடி உலகெங்கும் பொது முடக்கத்தை கொண்டு வந்தது. சிறிலங்காவின் சுற்றுலாத் துறை, அயற் செலாவணி வருவாய் வெகுவாக அடிவாங்கியது. உடனே, இந்த நெருக் கடியை எதிர்கொள்வதற்காக சிறிலங்கா அரசு பணத்தை வரையறையின்றி அச்சடிக்கத் தொடங்கியது. திசம்பர் 2019 க்கும் ஆகஸ்ட் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் 42 நாணயத்தை அதிகமாக அச்சடித்து சுற்றோட்டத்தில் விட்டது.

கடந்த ஏப்ரலில், கோத்தபய இராச பக்சே போதிய திட்டமிடலும் மக்கள் பங்கேற்பும் இன்றி வேளாண் துறையில் செயற்கை உரப் பயன்பாட்டை தடை செய்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தது. உர இறக்கு மதியைக் கட்டுப் படுத்தும் நோக்கத் தில் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. ஆனால், இது வேளாண் துறையைப் பாதித்தது. ஒட்டுமொத்த வேலை வழங்கலில் 3 இல் 1 பங்கும் உள் நாட்டு உற்பத்தியில் 8 உம் வேளாண் துறையைச் சார்ந்து இருந்த நிலையில் இயற்கை வேளாண்மை' என்ற கொள்கை முடிவு அடுத்த நெருக்கடிக்கு வித்திட்டது. நெல் உற்பத்தியின் வீழ்ச்சி உணவு தேவைக்கு முழுக்க முழுக்க இறக்குமதியை சார்ந்திருப்பதை நோக்கி தள்ளியது. தேயிலை உற்பத்தியின் வீழ்ச்சி தேயிலை ஏற்றுமதி வருவாயைப் பாதித்த தோடு அயற்செலாவணி கையிருப்பைக் குறைத் தது. இதைப் புரிந்து கொண்டு கடந்த நவம்பரில் வேளாண் துறையில் அரசு மேற் கொண்ட கொள்கை மாற்றத்தை பகுதியளவில் கை விட்டது. ஆனால், அதற்குள் நிலைமை கைமீறி விட்டது.

அதேநேரத்தில், சிறிலங்காவின் பொரு ளியல் கொள்கைப் பற்றிய வரலாற்றுப் பார்வை கொண்டோர் இச்சிக்கலுக்கான பொறுப்பை ஊழலில் திளைக்கும் இராசபக்சே சகோதரர் களின் குடும்ப ஆட்சியின் மீது மட்டும் சுமத்த வில்லை. மாறாக, சிறிலங்காவின் பொருளியல் அடிப்படை என்பது வெறுமனே சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஜவுளித் துறை ஆகிய வற்றை சார்ந்திருக்கிறது. நவீன தொழில் துறை வளர்ச்சியில் சிறிலங்காவின் இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சரி சிறிலங்கா சுதந்திர கட்சியும் சரி அக்கறை கொள்ளவில்லை. இப்பிராந்தியத்தில் உலகமய, தாராளிய, தனியார்மய கொள்கைக்குள் முதலில் அடியெடுத்து வைத்த நாடு (1976 இல் சீனா, இந்தியாவுக்கு முன்பே) சிறிலங்கா என்றாலும் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய அயல் முதலீடு சார் தொழில் துறை, சேவைதுறை வளர்ச்சிகூட உள்நாட்டுப் போர் காரணமாக ஏற்படவில்லை.

1976 இல் உலகமய, தாராளியக் கொள்கையில் அடியெடுத்து வைத்ததில் இருந்து 16 முறை பொருளியல் நெருக்கடிக்கு உள்ளாகி பின் அதில் இருந்து பன்னாட்டு நாணய நிதியத்தால் மீட்கப்பட்ட நாடாக சிறிலங்கா அறியப்படுகிறது. எனவே, கோத்தபய இராசபக்சேவின் தவறான கொள் கைகள், குடும்ப ஆட்சி, சர்வாதிகாரப் போக்கு, ஊழல் ஆகியவற்றோடு சிறிலங்காவின் பொருளியல் கட்டமைப்பே இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கான ஏரணத்தைக் கொண்டுள்ளது என்று பொருளியல் அறி ஞர்கள் சொல்கின்றனர். குறிப்பாக, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு நிரந்தர தீர்வு காண்பதற்கு வேளாண் துறையை நவீனப் படுத்துதல், தொழில் துறையை வளர்த் தெடுத்தல் ஆகிய அடிப்படை மாற்றங்களை செய்ய வேண்டி யுள்ளது. சிறிலங்காவில் ஏற்று மதியைவிட 80 அதிகமாக இறக்குமதி உள்ளது. அடிப்படை தேவைகளுக்கான தற்சார்பை நோக்கிச் செல்வதற்கான பொருளியல் கொள்கையை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இன்னொரு புறம், இந்த பழமைவாத பொருளியல் கொள்கைக்கு சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கொள்கைக்கும் இடையிலான உறவு குறித்து அதிகம் விவாதிக் கப்படாமல் இருக்கிறது.

சிறிலங்காவின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவோ அல்லது அவரைத் தொடர்ந்து வந்த பண்டாரநாயக்காவோ அரசியல் கொள்கையாக பேரினவாதத்தை தழுவிக் கொண்டு பொருளியல் தளத்தில் வேளாண் உற்பத்தி சார்ந்த கொள்கையை நடைமுறையாக்கினார்கள். 1970 க்குப் பின்னர் இனவாதம் இராணுவத் தன்மையைப் பெற்று உள்நாட்டுப் போராக உருவெ டுத்தது. சிறிலங்கா அரசு 1980 தொடங்கி 2009 வரையான உள்நாட்டுப் போர் காலத்தில் படைக்காக கணிசமான தொகையை செலவு செய்தது. சிறிலங்கா அரசின் படை வரிவாக்கம், ஆயுத குவிப்பு இவையாவும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புக்காகவே செலவழிக்கப் பட்டது. 2009 க்குப் பின்னும் அது தனது படைச் செலவைக் குறைத்துக் கொள்ளவில்லை. 2009-2017 காலகட்டத்தில் அதன் ஒட்டு மொத்த ஆண்டுச் செலவினத்தில் 11 படைச் செலவுக்கானதாகும். போர்க் காலத்தை விடவும் 1176 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. உலகிலேயே தனது படையின் 99 விழுக் காட்டினரை செயல்பாட்டில் வைத்திருக்கும் ஒரே நாடு சிறிலங்காதான். படையினர் ஓய்வூதியமாக மட்டும் ஆண்டொன்றுக்கு 170 மில்லியன் டாலர் செலவு செய்யும் நாடு அது. போருக்குப் பின்பும் படையினரின் சம்பளத்தை 45 உயர்த்தியுள்ளது. இப்படி பெருஞ்செலவில் உருவாக்கித் தீனிப் போட்டு பேணப்படும் படையினரில் பெரும்பகுதி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிலேயே நிலைகொண்டுள்ளனர். இவ்வண்ணம், சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் என்பது சிறிலங்காவின் பொருளியல் நெருக்கடிக்கான முதன்மைக் காரணங்களில் பிரித்துப் பார்க்க முடியாததாகும்.

தமிழர் நிலைப்பாடு குறித்து

"கோத்தபய வீட்டுக்குப் போ" என்று சிங் களர்கள் எழுப்பும் முழக்கம் தமிழர்களுடையதும் தான். 2009 ஆம் ஆண்டு நடந்தேறிய முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்குப் பின்னான இந்த 13 ஆண்டுகளில் தமிழ் மக்கள் இராச பக்சே சகோதரர்களுக்கு வாக்களிக்கவில்லை, அவர்கள் பதவியில் இருப்பதை விரும்ப வில்லை. சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள்தான் இவர்கள். அதே சிங்கள மக்கள் இன்று அவர்களைப் பதவி விலக சொல்கிறார்கள். தமிழ் மக்களோ அவர்கள் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்படுவதோடு இனவழிப்புக் குற்றங்களுக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றப்பட்டு சிறைப் படுத்தப்பட வேண்டும் என்று இத்தனை ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ரசியப் புரட்சியின் போது ஜார் மன்னனை வீழ்த்துவதற்கு "போரை நிறுத்து, ரொட்டி வேண்டும்” என்ற முழக்கத்தை லெனின் வடித்தெடுத்தார். இது ரசியர்களைப் புரட்சிக்கு அறைகூவி அழைப்பதற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், ஜார் ரசியாவின் கீழ் இருந்த பல்வேறு தேசங்களையும் புரட்சியில் இணைப் பதற்குப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை லெனின் முன்வைத் தார். பெரும்பான்மை ரசிய இனத்தில் இருந்து லெனின் இப்படி ஓர் அறைகூவலை விடுத்து ரசியா அல்லாத தேசங்களைப் ஜார் மன்னனுக்கு எதிரானப் புரட்சிப் போராட்டத்தில் வெற்றி கரமாக இணைத்தார்.

சிங்கள மக்களின் போராட்டத்திலோ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஏற்பளித்து இதுவரை எவரும் தமிழர்களை நோக்கி அறைகூவல் விடுக்கவில்லை. போராட்டம் அதிகம் தன்னெழுச்சித் தன்மை வாய்ந்ததாக இருப்பினும் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற இடதுசாரி அமைப்பும் அதில் இருந்து பிரிந்து வந்த சோசலிச முன்னணியும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்துகின்றன. ஆயினும் இவ்விரு பிரிவினரும் தமிழருக்கு இழைக்கப் பட்டது இனவழிப்பு என்று ஏற்கவில்லை, தமிழர் களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமைக்கும் ஏற்பளிக்கவில்லை.

அதேநேரத்தில், சிறுபான்மை தேசிய இனமான தமிழ்த் தரப்பில் இருந்து கோத்தபய பதவி விலகு என்பதோடு 'கோத்தபயவைக் கூண்டில் ஏற்ற வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட வேண்டும். இதன்மூலம் சிங்கள மக்கள் சர்வாதிகாரத்திற்கும், குடும்ப ஆட்சிக்கும், நிர்வாக சீர்கேடுகளுக்கும், ஊழ லுக்கும் எதிராக நடத்தி வரும் போராட்டத்தில் தமிழர்கள் தம்மையும் இணைத்துக் கொள்ள முடியும். குடியாட்சியத்திற்காகப் போராடும் சிங்களப் போராட்டக்காரர்கள் தமிழர்களுக்கு செய்யப் பட்ட கொடுமைகள் குறித்துப் புரிந்து கொள்வதற்கு இது உதவும்.

எனவே, இராசபக்சேக்களைப் பதவியில் இருந்து கீழிறக்கி இனவழிப்புக் குற்றத் திற்காக சிறைக்கனுப்ப வேண்டும், பெரும் பொருட் செலவோடு தமிழர் தாயகப் பகுதியில் நிலை கொண்டுள்ள சிங்களப் படையை வெளி யேற்று, பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய் என்று முழங்கியபடி வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் தெருவில் இறங்க வேண்டும். சிங்கள மக்களின் போராட்டத்தால் திறந்து விடப்பட்ட குடியாட்சிய வெளி தமிழ்ப் பரப்பிலும் விரி வடையும். சிங்கள மக்களைப் போராட அனு மதித்துவிட்டு தமிழ் மக்கள் மீது படை யினரை ஏவ முடியாது. அப்படி ஏவினால் உலக நாடுகள் கண்டனக் குரல் எழுப்பும். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் தமிழர்கள் குடியாட்சி யத்தின் பக்கம் நிற்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

போராட்டத்தின் திசைவழி

புரட்சிகர தலைமை இன்றியும் புரட்சிகர தத்துவமின்றியும் தன்னெழுச்சிப் போராட்ட மாகவே இது வெடித்துள்ளது. 20 ஆவது சட்டத்திருத்தத்தை நீக்கி, ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்துள்ள 19 ஆம் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு பௌத்த மகாசங்கத்தின் ஒரு பிரிவினர் முன்வைக்கின்றனர். அப்படியான எந்தவொரு திருத்தமும் தேவையில்லை என்று மகாசங்கத் தின் இன்னொரு பிரிவினர் சொல்கின்றனர். மகிந்த இராசபக்சே பிரதமர் பதவியில் இருந்து வெளியேறிவிட்டார். அவரது ஆதரவாளர்கள் கலவரங்களில் ஈடுபட்டதால் அது மகிந்தாவுக்கு எதிரானப் பெருங்கோபமாக மாறியுள்ளது. பௌத்த மகாசங்கம் போர் வெற்றி நாயகர்களான கோத்தபயாவையும் மகிந்தாவையும் பாதுகாக்க நினைகின்றது. ஆனால், நிலைமை கை மீறி போய்க் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.

இந்த மக்கள் எழுச்சி குடும்ப ஆட்சி, ஊழல், நிர்வாக சீர்கேடு ஆகியவற்றிற்கு எதிரானப் போராட்டம் என்ற வகையில் ஒரு குடியாட்சிய உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. குடியாட் சியத்திற்கான இந்த போராட்டத்தோடு தமி ழர்கள் கைகோர்ப்பதன் மூலம் தமிழர் தரப்புக்கு சிங்கள மக்களுடன் உரையாடுவதற்கான வெளி திறந்தவிடப்படும். இது பெரிய பண்பு மாற்றமாக இல்லாவிடிலும் ஓர் சிறிய அளவு மாற்றமாக காட்சி தருகிறது. ஆனால், பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது போல் பசி போனால் பத்தும் மீண்டும் வந்து விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. போராட்டம் ஓர் இரத்தக் களரியில் முடியுமா? அல்லது கோத்தபய பதவி விலகுவதில் முடியுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் மகாசங்கத் தால் புதிதாக ஒருவரை ஜனாதிபதியாக அடையாளம் காண முடியாதநிலை இருக்கிறது. இதனால், இப் போராட்டம் மேலும் நீட்டிக்கும் பட்சத்தில் அதிகம் வன்முறையை நோக்கிச் செல்லக் கூடும். ஒரு புரட்சிகரமான தத்து வத்தைக் கொண்ட தலைமை இல்லாத நிலையில் இந்த தன்னெழுச்சிப் போராட்டம் புரட்சிகர வளர்ச்சிப் பெறுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெளிவாக தெரிய வந்துவிடும். ஆயினும், குடியாட்சி யத்திற்காக மக்கள் நடத்திவரும் போராட் டத்தில் இருந்து பெறக்கூடிய படிப் பினைகள் பெறுபேறாக பார்க்கத்தக்கன. அத்தகைய பற்பல மக்கள் திரள் போராட் டங்களின் செயல் வழியில்தான் சிறிலங்காவில் சிங்களர்களுக்கான குடியாட்சியமும் தமிழர் களுக்கான இன விடுதலையும் ஏற்படும்.

சிறிலங்கா வசந்தம் வெல்லட்டும்! தேசிய இனங்களுக்கு இடையே சம உரிமை உருவாகட்டும்!

- செந்தில்