ஈழத் தமிழர் - கச்சத் தீவு உரிமைகளுக்காக கோவையில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வரைப் பாராட்டிபெரியார் திராவிடர் கழகம் நடத்திய கருத்தரங்கில் தமிழக உணர்வுகளை அவமதிக்கும் சிவசங்கரமேனனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஈழத்தில் தமிழர்களை முற்றாக ஒழிக்கும் நோக்கத்தோடு போர்க் குற்றம் புரிந்தவர்களை அய்.நா. வழியாக போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்தவேண்டும்; அங்கே வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடையை மற்ற நாடுகளுடன் இணைந்து அறிவிக்க வேண்டும் - என்ற கருத்துடன் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா 8.6.2011 அன்று ஒரு தீர்மானத்தை முன் மொழிய சட்டமன்றம் ஒரு மனதாக அத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அடுத்த நாள் - கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே உரிமையானது என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கி, இது தொடர்பாக 2008 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசின் வருவாய்த் துறையும் இணைத்துக் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை தமிழக முதல்வரால் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. 1974 மற்றும் 1976 இல் கச்சத்தீவு இலங்கைக்கு ‘தாரை’ வார்க்கப்பட்ட போது நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட்டு, அரசியலமைப்பில் சட்டத் திருத்தம் செய்திருக்க வேண்டும்; அப்போதுதான் சட்டப்படி செல்லும் என்று 1960 இல் உச்சநீதிமன்றம் ‘பெருபாரி’ தீவு வழக்கில் தீர்ப்பளித்திருந்தது. மேற்கு வங்கத்துக்கு உரிமையான ‘பெருவாரி’ எனும் தீவை வங்க தேசத்துக்கு தாரை வார்த்ததை எதிர்த்து, அன்றைய மேற்கு வங்க முதல்வர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியதே இந்தத் தீர்ப்பு.
வரலாற்று சிறப்பு மிக்க இத் தீர்மானங்களைக் கொண்டு வந்த தமிழக முதல்வரை பாராட்டியும், தீர்மானத்தின் கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்க வலியுறுத்தியும் பெரியார் திராவிடர் கழக சார்பில் 13.6.2011 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ச்சி ஒன்று குறுகிய இடைவெளியில் கழக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத் தோழர் அன்பு தனசேகர் வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், “ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் துரோகக் கொள்கைகளை தமிழர்கள் ஏற்கவில்லை என்பதை தமிழக சட்டமன்றத்தின் இத் தீர்மானம் அறிவிப்ப தால், இதை வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் என்று கூறுகிறோம். இலங்கை அரசு இனப்படுகொலையும், போர்க் குற்றங்களையும் இழைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அங்கே மனித உரிமை மீறல்கள்கூட நடக்கவில்லை என்றே இந்திய அரசு, அய்.நா.வில் கருத்து தெரிவித்து, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை தோற் கடித்தது. தமிழக முதல்வரின் தீர்மானம் இந்தியாவின் இந்த நிலையை மறுக்கிறது. இந்தியா, இலங்கைக்கு தாராளமாக ஆயுத உதவிகளை வழங்கியதோடு, நிதி உதவியையும் வழங்கி, சர்வதேச நிதி நிறுவனம், இலங்கைக்கு கடன் வழங்க மறுத்தபோதும், இந்தியா தலையிட்டு, கடன் கிடைக்க உதவியது. தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானம், இந்த அணுகுமுறையை மறுத்து, இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை கோருகிறது. எனவே இது சரித்திரம் படைத்த தீர்மானம் என்கிறோம். இத் தீர்மானத்தை யார் கொண்டு வந்தாலும் வரவேற்று பாராட்டுவது பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை வழிப்பட்ட கடமையாகக் கருதுகிறோம்.
கடந்த காலங்களில் ஈழத் தமிழர் மீதான இனப் படுகொலை நடத்தப்பட்டபோது, இந்திய அரசை இப்படிக் கண்டிக்கக்கூடிய ஒரே ஒரு குரலைக்கூட தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சி உயர்த்த வில்லை. வேண்டுகோள்களும், கோரிக்கைகளும் மென்மை யாக, அதுவும், தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பவே முன் வைக்கப்பட்டன. எனவே தான் இந்தத் தீர்மானம் ஈழத் தமிழர்களின் புண்பட்ட உள்ளத்துக்கு ஆறுதலையும் உலகத் தமிழர்களுக்கு நம்பிக்கையும் தந்திருக்கிறது” என்று விடுதலை இராசேந்திரன் கூறியதோடு. தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில், தமிழ் ஈழ விடுதலைக்காக களத்தில் நின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வழங்கிய ஆக்கப்பூர்வமான உதவிகளைப் பட்டியலிட்டுக் காட்டினார்.
தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் தமிழக அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி தமது உரையில், “தேசிய சுய நிர்ணய உரிமை கொசாவாவிலும், தெற்கு சூடானிலும் அங்கீகரிக்கப் படும்போது தமிழ் ஈழத்துக்கு மட்டும் மறுப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? அய்.நா.வின் அறிக்கை வந்த பிறகும், இந்திய அரசு, இலங்கையின் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசவே மறுப்பது, ஈழத் தமிழர்களை மட்டுமல்லாது, அவர்களின் தொப்புள் கொடி உறவான தாய்த்தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பது அல்லவா? இந்த நிலையில்தான், தமிழக முதல்வர், தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார். கடந்த காலத்தில் நடந்த ஆட்சி, இப்பிரச்சினையில் துரோகமிழைத்தது உண்மை. இப்போது, தமிழக சட்டமன்றத் தீர்மானம் புதிய நம்பக்கையைத் தந்திருக்கிறது. இது தொடரவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பேசுகையில் - பொருளாதாரத் தடை விதிப்பதோடு மட்டுமின்றி, இலங்கை யுடனான அரசு உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். சட்டமன்றத் தீர்மானத்தை ‘ஏளனத்துக்கு உரியது’ என்று சுப்ரமணியசாமி என்ற நபர் கூறியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைப் பொதுச் செயலாளர் கி. மகேந்திரன் பேசுகையில் - சிவசங்கரமேனனை தேசிய பாது காப்பு ஆலோசகர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தமிழர்கள் வாழும் பகுதி களில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் காணவில்லை என்று அய்.நா. கூறுகிறது. இலங்கை அரசும், அதை ஒப்புக் கொள்கிறது. ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியிலுள்ள சிவ சங்கரமேனன் என்ற அதிகாரி 1999 ஆம் ஆண்டி லிருந்து, அங்கே மக்கள் தொகைக் கணக்கெடுப்பே நடக்கவில்லை என்று கூறி, இனப்படு கொலையை மூடி மறைக்கிறார். ஏழேகால் கோடி மக்களின் பிரதிநிதியான தமிழக இறையாண்மையின் வடிவமான தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர் மானத்தை அலட்சியப்படுத்துகிறார். இது பற்றி ராஜபக்சேயிடம் பேசவே இல்லை என்கிறார். நியாயமாக தமிழக முதல்வரிடம் இது பற்றிப் பேச வேண்டியது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவே தவிர, இந்த அதிகாரிகள் அல்ல. ஈழத் தமிழர் பிரச்சினைகளைக் கையாளும் உரிமைகளை மத்திய அரசு இந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. சிவசங்கரமேனன் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
இப்போது தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு, இந்திய அரசின் பதில் என்ன? இதை ஆதரிக்கிறார்களா? புறந்தள்ளு கிறார்களா? இதை உடனடியாக அறிவிக்க வேண்டும். இதுதான் இப் போது பிரச்சினை. இந்த கோரிக்கையை முன் வைத்து நாம், தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டும். தமிழக இறையாண்மையை மத்திய அரசு ஏற்க மறுத்தால், இந்திய இறையாண்மைக்கு எதிராக கேள்வி எழுந்து விடும் என்பதை ஆட்சி யாளர்கள் உணர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இறுதியாக புலவர் புலமைப் பித்தன் உரையாற்றினார். “தமிழர் களுக்கு எதிரான போரை நடத்தியதே இந்தியா தான். அந்த துரோகத்துக்கு தி.மு.க. ஆட்சியும் துணை நின்றது. இந்திய அரசு, இரகசியமாக வழங்கிய ஆயுத உதவிகளை அங்கே செய்தி சேகரிப்பவராக செயல்பட்ட ஏ.கோகலே என்பவர் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்” என்று கூறி, நூலிலிருந்து பல செய்திகளை சுட்டிக் காட்டினார். தமிழீழ விடுதலைப் புலி களுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை விவரித்த புலவர் புலமைப் பித்தன் தமிழக முதல்வர் ஜெயலலிதா எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதில் உறுதியாக நிற்பார். இதை நம்பலாம் என்று உறுதி கூறினார்.
“இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், அதை பெரியார் திராவிடர் கழகம் செய்து காட்டிவிட்டது. பெரியார் திராவிடர் கழகத்தின் போராட்டங்களையும் செயல்பாடு களையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இதுதான், பெரியார் கொள்கைக்காக பாடுபடும் உண்மை யான பெரியாரின் திராவிடர்கழகம். 1948 ஆம் ஆண்டு முதல் நான் கருப்புச் சட்டைக்காரன். நான் கருப்புச் சட்டைப் போடாவிட்டாலும், எப் போதும் உள்ளத்தில் கருப்புச் சட்டைக்காரன்தான். அந்த உணர் வோடு சொல்கிறேன், இந்த அமைப்பு தான் சரியான திசையில் செயல்படு கிறது. இப்போது பெரியார் இருந்திருந் தால் என்ன செய்திருப்பாரோ அதை பெரியார் திராவிடர் கழகம் செய்கிறது” என்று பாராட்டினார்.
தமிழக சட்டமன்றத் தீர்மானத் தைப் பாராட்டியும், ராஜபக்சேவை சந்தித்த இந்தியத் தூதுக் குழுவைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் தபசி. குமரன் நன்றி கூற, 9.15 மணியளவில் நிகழ்ச்சி முடிவுற்றது.
தோள் கொடுத்து துணை நிற்போம்!
ஈழத் தமிழர் - கச்சத் தீவு உரிமைகளுக்காக தமிழக சட்ட மன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வரைப் பாராட்டி 13.6.2011 அன்று பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கருத்தரங்கில் அனைவரின் கரவொலிக்கிடையே நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையில் நடந்த போர்க் குற்றங்களுக்கு எதிராகவும், ஈழத் தமிழர் மற்றும் கச்சத்தீவு உரிமைகளை வலியுறுத்தியும், இந்தியா - இலங்கை மீது பொருளாதார தடை கோரியும், தமிழக முதல்வர் 8.6.2011 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் பெருமை சேர்த்துள்ளார். தாய்த் தமிழகத்து ஆட்சியின் ஆதரவு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்த - ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைத்து, தமிழக மக்களுக்கும் உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கும் ஆறுதலையும், நம்பிக்கையையும் இத் தீர்மானத்தின் வழியாக வெளிப்படுத்திய தமிழக முதல்வர் அவர்களை உளம் திறந்து பாராட்டுவதில் உவகை அடைகிறோம்.தமிழ்நாட்டில், மக்கள் செல்வாக்கோடு நடைபோடும், இந்த ஆட்சி, ஈழத் தமிழர்களின் உரிமைக்காக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தோள் கொடுத்து துணை நிற்போம் என்று உறுதி கூறுகிறோம்.
2) இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்த பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரன் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு, தமிழக சட்டமன்றத் தீர்மானத்தையோ, ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களையோ ராஜபக்சேயிடம் வலியுறுத்தவில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இது, தமிழக முதல்வரையும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமன்றத் தீர்மானத்தின் உணர்வுகளையும், தமிழக மக்களையும் அவமதிக்கும் செயல் என்று கருதி, இந்த அவை இந்திய அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு சிவசங்கரமேனனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறது.