ஸ்ரீ ரமண சர்மா என்னும் ஒருவர், கணிப்பொறியில் தமிழ் எழுத்துகளின் நீட்சி என்பதாக ஒரு கருத்தை எழுதி அனுப்பியுள்ளார். தனி ஒரு மனிதர் எழுதியுள்ள அக்கடிதம் தமிழ் உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜ, ­, ஹ முதலான கிரந்த எழுத்துகளையும் கணிப்பொறி விசைப்பலகையில் இணைத்திட வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். இதைத்தான் தமிழ் எழுத்துகளின் நீட்சி என்று அவர் குறிப்பிடுகின்றார். தமிழைச் சீர்குலைக்கும் வேலையை அவர்கள் இன்னும் கைவிடவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

இது குறித்து, தமிழ்க் கணிப்பொறி எழுத்துகளின் மேலாண்மைக் குழுத் தலைவரான அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்கள், மிகத் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகத்தின் தொன்மையான மொழிகளில், தமிழ், சமற்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகிய நான்கு மொழிகளே, வரையறுக்கப்பட்ட இலக்கணங்களைக் கொண்டிருந்தன என்பதை விளக்கும் வா.செ.கு., தமிழும், சமற்கிருதமும் முற்றிலும் வேறுவேறான மொழிக் குடும்பங்களையும், பண்பாடுகளையும் உடையவை என்று கூறுகின்றார். ஆரிய, திராவிடப் பண்பாட்டுக் கூறுகள், இவ்விரு மொழிகளின் அடித்தளத்தில் எழுந்தவை என்பதையும் நினைவூட்டுகின்றார். எனவே ஒரு மொழியின் எழுத்துகளை, இன்னொரு மொழியில் இணைப்பது மொழி ஆதிக்க நோக்கம் கொண்டது என்பதும் அவர் கூற்று. எனவே சர்மாவின் திட்டத்தை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.

எதிர்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த சர்மா, என் முன்மொழிதலை மொழி அடிப்படைவாதிகள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறுகிறார். இவர் கூற்றை ஏற்காதவர்களுக்கெல்லாம், அடிப்படைவாதிகள் என்னும் பட்டத்தை இலவசமாக வழங்கி மகிழ்கிறார் சர்மா. அறிவியல் பார்வை கொண்ட மறுப்பை அடிப்பைவாதம் என்று சொல்லுவது எவ்வளவு பெரிய புரட்டு என்பதை உலகம் உணரவேண்டும்.

உலகில் உள்ள எந்த மொழியிலும், எல்லா ஒலிகளும் இருப்பதில்லை. தமிழில் உள்ள ழ வேறு எத்தனை மொழிகளில் இருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள எஃப் என்னும் ஒலி தமிழ் உட்படப் பல மொழிகளில் இல்லை. அதனால் என்ன? ஒவ்வொரு மொழியிலும் உள்ள சொற்களுக்குத் தேவையான ஒலிகள் அந்தந்த மொழிகளில் இருந்தால் அதுவே போதுமானது. இதுதான் அறிவியல் பார்வை. இதனை மறுப்பவர்களே அடிப்படைவாதிகள்.

தமிழைச் சிதைக்கும் சமற்கிருதவாதிகளின் முயற்சி நமக்குப் புதிதன்று. ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கம் மருவிய காலத்திலேயே அந்த முயற்சிகள் தோன்றிவிட்டன. இன்றும் அது தொடர்கிறது என்பதைத்தான் சர்மாக்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றனர்.

தமிழைச் சிதைக்க ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. காலத்தை வென்று வாழும் தமிழ், மறுபடியும் வெல்லும்.

Pin It