யாரங்கே... அழைத்து வாருங்கள் ஊர்வசியை. பூலோகத்தில் ஷாஜஹான் என்றொரு கலைஞன் நீண்ட நாட்களாக எழுதாது தவமிருக்கிறார். அவரது தவத்தை கலைத்து வரவேண்டும்.

வணங்குகிறேன் பிரம்மதேவா, இப்பொழுதுதான் பூலோகத்திலிருந்து வருகிறேன். உங்களின் சித்தம் அறிந்து வம்சி பதிப்பகத்தின் துணையோடு அவரின் தவம் கலைத்து காட்டாறு எனும் முதல் கதைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளேன்.

சந்தோசம் ஊர்வசி... சந்தோசம். கதைகளை படித்துக் கூறு கேட்க ஆவலாய் இருக்கிறேன்...(சும்மா தமாசுக்குத்தான்.)

ஏதோ பழைய கதைகளாக்கும் என நினைக்க வேண்டிய அவசியமில்லை. கதைகளின் வெளிப்பாடு சமகால, வருங்கால பிரச்சினைகளின் நேர்மையான அணுகுமுறையோடு தானிருக்கிறது. கதைகளில் வார்த்தைகள் தேவையற்று நீட்சி கொள்ளாது கச்சிதமாக முடிந்துள்ளன. வாசகனை மிரட்டாது கதகதப்பான கைகுலுக்கலோடு அழைத்துச் செல்கின்றன கதைகள்.

1992 ஒசூர் பஸ்நிலையத்தில் "இன்னும் நாலு மாசத்துல பொண்ணுக்கு கண்ணாலத்த வச்சிருக்கேன். ராவு பகலா வேல பாத்து வயித்த, வாய கட்டி குருவியா சேத்த பணத்தையும் புடுங்கிட்டு அடிச்சி தொறத்திட்டானுவ... உள்ளூர்லயும் வேல இல்ல... பொழைக்க வந்தா தமிழாளுவன்னு தொரத்தறாங்க. எம்பொண்ணு கண்ணாலத்த எப்படி முடிக்கப்போறனோ. சனியத்த கட்டிக் கொடுத்திட்டா நிம்மதியா கண்ண மூடிடுவேன்'னு கதறி அழுத பெரியவரை நினைவூட்டியது கருவேல மரங்கள் கதை. இவ்வளவு சாதாரணமாய் பெங்களூருக்கு வேலைக்கு போக சம்மதித்தது ராசப்பனுக்கு என்னவோ போலிருந்தது என கதைமுடியும். தன் ஆசாபாசங்களை, விருப்பங்களை புதைத்துவிட்டு சூழலுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் பக்குவம் எக்காலத்திலும் பெண்ணுக்குத்தான் உண்டு என்பதை நுட்பமாய் சொல்லியுள்ள கதை.

கருவேல மரங்கள் கதை முத்தம்மாவை போன்றேதான் கண்ணில் தெரிகிற வானம் மெர்சியும், அவளது அண்ணியும். விருப்பப்பட்டவனோடு வாழமுடியாத சூழலில் மெர்சி. தன் பெயர் இருக்கவேண்டிய கல்யாண பத்திரிகையில் வேறுபெயர் இருப்பதைப் பார்த்து கதறிவிட்டு... அப்பெயரை அடித்துவிட்டு தன்பெயரை எழுதி அழகு பார்த்தும், ஜான் அனுப்பிய வாழ்த்து அட்டைகளோடு துணிமணிகளுக்கிடையில் மறைத்து வைத்துவிடுகிறாள்.

வெறுமனே தேம்பித்தேம்பி நஞ்சு போயிடாதே, கதறி அழு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழு. இனி அழமுடியாதுன்னு தெரியற வரைக்கும் அழுதுட்டுப் போய்த்தூங்கு. சரியாயிடும்... மெர்சிக்கு மட்டுமல்ல, தன் முதல் காதலை இன்னமும் துணிமணிக்கடியில் பொத்திப்பொத்தி வைத்திருக்கும் எல்லா பெண்களுக்குமான ஆறுதலாக மெர்சி அண்ணி.

அறுத்தெறிந்த கதை. குடிகார கணவனோடு பள்ளி சென்ற இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடிப்போன தாயை பார்த்துவிட்டு திரும்பி வந்த சுந்தர் தன் அக்காவிடம் நம்மள விட்டுப்போன அந்த ஓடுகாலியை இனி நான் செத்தாலும் பார்க்க போகமாட்டேன். நீயும் மறந்துடுக்கா என சொல்லிவிடுவானே என்ற பயத்தோடும் பதட்டத்தோடும் கதையை படிக்க நேர்ந்தது எங்கே பெண்ணை மறுபடியும் வேலிக்குள் தள்ளிவிடுவாரோ என... நாம இரண்டு பேரும் அன்னிக்கி பள்ளிக்கூடம் போகாம இருந்திருக்கலாம் என கூறியதும் துயரங்களுக்காக ததும்பிய கண்ணீர் சந்தோசத்தில் வழிந்தோடியது.

தன் மனைவியின் உணர்வுகளை மதித்து நீண்டநாட்களுக்குப் பிறகு தன் காலேஜ்மேட்டோடு பேசுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, பின் பிரிந்தவுடன் தன் மனைவிக்கு அழுவதற்கான அவகாசத்தை கொடுக்க தலைநிமிராது பேப்பர் படித்தபடி இருக்கும் ஊமைக்காயம் கதை ரவிசங்கரைப் போன்றவர்கள் இருந்தால் கொஞ்ச பெண்களாவது தன் வெளிச் சொல்லமுடியாத வாழ்வை நினைத்து ஆசுவாசங் கொள்ள முடியும்.

திருமணத்திற்கு முன் நிறைய விட்டுக் கொடுப்பதாலும், சகித்துப் போவதாலும் வளர்கிற காதல், திருமணத்திற்கு பின் அதிகம் விட்டுக்கொடுப்பது, சகித்துப்போவதென மிகப்பெரிய தியாகிகளாகிவிடும் பெண்கள்... தன் பழைய தோழியை சந்தித்ததும் உடன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாத துயரில் தவிக்கும் பெண்கள்... தனக்கு பிறந்த குழந்தைக்கு தன் விருப்பப்படி பெயர் வைக்க முடியாது தவிக்கும் பெண்கள்... தன் நெருங்கிய தோழியின் தாயின் மரணத் திற்குக்கூட செல்லமுடியாத பெண்களென... ஆகாயப்பந்தலெங்கும் பெண்ணின் துயரங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது ஆகாயப்பந்தல் கதையில். ஊர் தப்பாக பேசியபோதும் உறவற்று பழகியவர்களிடம் ஏற்படும் பரிவும், அக்கறையும் அலாதியானதுதான். மெஸ் நடத்திய மீனா அவ்வூரை விட்டு வேறு ஊர் குடிபோக இருக்க-யார் என்ன வேணுமானாலும் பேசிட்டுப் போகட்டும் சார் நாலு காசு பணம் இருக்கறவங்களுக்குத்தான் சார் உறவும் சுற்றமும் என சமைத்துவந்ததை பரிமாறிவிட்டு சொல்லிக்கொண்டு புறப்படும் மீனா... வெவ்வேறு கோணங்கள் கதையில் பெண்கள் தனக்கு சரியென்றும், உண்மையென்றும் பட்டுவிட்டால் தீர்க்கமான முடிவெடுப்பவர்களென்பதை சொல்லியுள்ளார்.

"விவசாயத்தை விடறது உசுர விடறமாதிரின்னு' இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் இருப்பதால்தான் வக்கணையாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டிருக்கும் உலகமயம் விவசாயத்தை மட்டும் விட்டுவிடுமா என்ன... பார்த்து பார்த்து தூசி துரும்பற்று காத்த பருத்தியை விலைக்கு போடும்போது "இந்த சனியன் வேணாய்யான்னு' எறக்கிப் போட்டுட்டு, இப்பதான் வெளிநாட்டுலருந்து கப்பல் கப்பலா பருத்தி இறங்க ஆறம்பிச்சுடுச்சே என்கிறார் மானாவாரி கதையில். நம் வீட்டுக்குள் இருக்கும் குதிருக்குள் நம் அரசாங்கம் தந்த சாக்குபையில் நாம் வேடிக்கை பார்த்திருக்க விதை நெல்லை அள்ளிச்சென்று பாரம்பரிய பயிர்களுக்கெல்லாம் விதையற்றுப் போக செய்து டப்பா உணவாக்கி... உள்ளூர் பொருளுக்கெல்லாம் விலையற்றுப்போக செய்துகொண்டு அசுரனாய் நம்முன் நிற்கும் உலகமயமாக்கல் குறித்தும்... விவசாயத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்துகள் குறித்துச் சொல்ல நிறைய திறப்புகள் இக்கதையில் இருந்த போதும் வெறுமனே பெரியவரின் துயரத்தோடு இக்கதையை முடித்துள்ளார்.

சாதிக்கலவரத்தில் தன் கணவனை இழந்தவளின் மகன் அழகர், தன் ஊருக்கு ராட்டினம் சுற்றி பிழைக்கவரும் குடும்பத்தில் உள்ள ராசுவுடன் சிநேகம் பூக்கிறது. சிறுவர்களுக்கான உலகத்தில் அவர்கள் சந்தோசமாக இருக்க... அவர்களின் உலகத்துள் அப்பப்போ தலைகாட்டி அவங்க என்ன சாதியோ... பாத்து பழகுடா, வேற ஆளுங்களா இருந்து வம்பு தும்பு வந்துடப்போவுது என எச்சரிப்பதும்... அவர்கள் என்ன சாதியென அறிவதில் குறியாக இருக்கும் தன் அம்மாவிடம் அவங்களும் நம்மாளுங்கதாம்மாவென கூறுவதாய் இருக்கும் காட்டாறு கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தன் சாதியினரை தவிர பிறசாதியினர் எல்லோரும் மோசமானவர்கள் என்பதான தொனியை ஏற்படுத்துகிறது கதை. தன் மகன் நல்லவர்களோடு பழகவேண்டுமென ஆசைப்படுவார்களே தவிர நம்சாதியில் மட்டும்தான் பழகவேண்டும் என நினைப்பார்களா என்பது கேள்விக்குறியே... அதுவும் பிழைப்புக்காக ராட்டினம் சுற்ற வரும் குடும்பம் அவ்வூரிலேயே நிரந்தரமாக தங்கப் போவதில்லையே... மற்றொரு இடத்தில் ராசு குடும்பத்திடம் அழகர் தன் அப்பா இறந்தது குறித்து விலாவாரியாக கூறுவதும் உறுத்தலாக இருக்கிறது.

இத்தொகுப்பு பெண்களுக்கான உணர்வுகளை வெறுமனே அனுதாபத்தோடு அனுகாமல் உண்மையான அக்கறையோடும் மிகு நுட்பமாகவும் பதிந்துள்ளார். தடித்த தோள்களை உரித்துவிட்டு தன்னை புதுப்பித்துக்கொள்ளும் பாம்புகளாய் என்னுள் இருந்த தவறான கருத்தாக்கங்களை உரித்துப்போட்டன கதைகள். தூக்கம் தொலைத்து... நிம்மதி தொலைத்து... துடைக்க... துடைக்க வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரோடு தான் தொகுப்பை படித்து முடித்தேன்... ஷாஜஹான் இன்னும் தொடர்ந்து எழுதினால் எழுத்துலகிற்கு இன்னும் பல நல்ல கதைகள் கிடைக்கும். எதிர்பார்க்கிறேன்... எதிர்பார்ப்போம்.

ஜே.ஷாஜஹானின் சிறுகதைத் தொகுப்பு

"காட்டாறு"

வெளியீடு: வம்சி புக்ஸ்,

செட்டித்தெரு, திருவண்ணாமலை, விலை: ரூ.50