அதியன் ஆதிரையின் ‘அப்பனின் கைகளால் அடிப்பவன்’ எனும் இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளாக எழுதப்பட்ட கவிதைகளின் முழுத் தொகுப்பு என்பதை ஆசிரியரே முன்னுரையில் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது. தலித் வாழ்வியலையும், விடுதலையை ஒரு தலித் படைப்பாளரே பேசுவது என்ற வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் தொடக்கத்தில், “உன் / கருப்பு நிறத்தை / ஒரு போர்வை போல் போர்த்தாமல் / ஒரு போர்க்கொடி போல் உயர்த்திப் பிடி” (ப.3) எனும் ஆப்பிரிக்கக் கவிதையை முத்தாய்ப்பாய்த் தந்திருப்பது கவிஞரின் போர்க்குணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
காலம் காலமாய்ச் சாமிகள் உருவாக்கப்படுவதைக் கவிஞர் தம் கவிதையின் வழியாகக் காட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளார். “சாராயம் / கருவாடு / சுருட்டு / ஆடு / மாடு / பன்னி / கோழியெனப் பலியிட்டு / இன்று / என்னைப் போலவே / நீயும் வணங்குகிறாய் / என் பாட்டன்களான / மதுரை வீரன் / இருச்சி / காத்தவராயன் / நந்தன் என / அன்று / உன் பாட்டனுக்கெதிராய் / அடங்க மறுத்து / அத்து மீறியதால் / பழிவாங்கப்பட்டவர்கள் / சாமிகளானார்கள் / இன்று கழுத்தறுந்தும் / மலம் தின்னும் / உன்னோடு / சண்டையிடும் / நாங்கள் யார் தெரியுமா / உன் / பிள்ளைகளின் சாமிகள்.” (பக்.19,20)
அன்றும் இன்றும் ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்படுபவர்கள் குலசாமியாய் மாறிப்போனதற்கு ஆறு.இராமநாதனின் ’இன்னொரு குலசாமி’ சிறுகதை உள்ளிட்ட எத்தனையோ கதைகள் இன்றும் சாட்சிகளாய் இருப்பதை இக்கவிதை நினைவூட்டுகிறது. வானளாவிய நிலையில் அறிவியல் வளர்ச்சி அடைந்திருக்கும் இக்கால கட்டத்தில் சுடுகாடு இல்லாத நிலையை, “வான்வழி / தரைவழி / நீர்வழி / சண்டையிடும் உலகில் / வழியில்லாமல் தவிக்கிறோம் / சுடுகாட்டிற்கு.” (ப.31) என்று சுடுகாடு இன்றி இன்றும் பல கிராமங்கள் உள்ள நிலையைக் கவிஞர் ஆதங்கத்துடன் பதிவு செய்கிறார்.
சாதிய எண்ணம்
சந்திரனைப் போலவே செவ்வாய்க்கும் மனிதன் சென்று வர முயற்சித்துக் கொண்டிருக்கும் இதே காலத்தில்தான் சாதியத்தால் சக மனிதனை நோகச் செய்யும் நிலையும் நிலவுகிறது. அப்பாவின் மீது குத்தப்பட்ட சாதி முத்திரை அதே பார்வையில் தன் மீதும் அதிகமாகவே குத்தப்படுகிறது என்கிறார் கவிஞர். “எப்போதாவது / ஒரு முறைதான் / நீயே / என்னை அடிப்பாய் / ஆனால் / நீ / அடிக்கடி அடிப்பது / என் / அப்பனின் கைக்கொண்டுதான்.” (ப.17) என்பதில் தலைமுறை தலைமுறையாக சாதியம் ஏற்படுத்தும் பாதிப்பை கவிஞர் முதற் கவிதையிலேயே வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு மனிதன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்பதை அறிந்துகொள்ள சாதிய எண்ணம் கொண்ட மனிதர்கள் எவ்விதமாகப் பேசுவர் என்பதைத் தம் கவிதையில் வெளிப்படையாகக் கவிஞர் பதிவு செய்கிறார். “பெயரையும் / ஊரையும் / சொன்ன பிறகும் / நீ / துரைச்சாமிக் கவுண்டருக்கு / என்ன வேண்டும் / வேலு முதலியாருக்குப் / பக்கத்து வீடா / தேரடிக்கு எதிர்த் தெருவா / அல்லிக் குளத்திற்கு மேல் தெருவாயெனக் / கேட்ட / அனைத்துக் கேள்விகளுக்கும் / இல்லையென்றதும் / முகத்தைச் சுருக்கி / நீ / அப்போ என நீளும் / அவன் ஆய்விற்கு / முற்றுப்புள்ளியாய் / பறச்சேரி யென்றேன்.” (ப.34) தற்போதும் இதுபோன்ற கேள்விகளை எழுப்புபவர்களுக்கு பட்டென்று நெற்றிப் பொட்டில் அடித்தது போல் கவிஞர் பதில் அளித்துள்ளார் என்றே இக்கவிதையைக் கொள்ளலாம்.
பல்வேறு இன்னல்களுக்குப் பின் நகரத்தில் வாழ முற்படும் மனிதர்கள் சாதியத்தைப் பொருத்திப் பார்க்கும் நிலைக்குச் சான்றாக நிகழ்வொன்றைக் கவிஞர் கவிதையாக்குகிறார். “முன்புபோல் / அடிக்கடி வர முடியாமல் போன / பக்கத்து வீட்டுக்காரர்களைப் / பற்றி அறிய / காரணங்கள் பல இருந்தும் / முதற் காரணம் / இப்படித்தான் தோன்றுகிறது / தெரிந்து இருக்குமோ / என் சாதி.” (ப.35) என்பதில் சாதியால் மனிதனுக்குள் ஓடும் எண்ணவோட்டம் புலப்படுத்தப்பட்டுள்ளது.
தீண்டாமையும் அடிமைநிலையும்
அடிமை என்னும் சொல்லிற்கு சிறை, தொண்டன் எனப் பொருள்கள் கூறப்படுகின்றன. தீண்டாமை என்பது அடிமை முறையின் இந்திய வடிவம் என்றார் அம்பேத்கர். இது இந்தியநாடு குறித்த அம்பேத்கரின் பார்வையைக் காட்டுகிறது. அடிமைநிலை குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் தன் கருத்தைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். “அமிஞ்சி, அடிமை, அடியான், மூப்படியான், படியாள், பண்ணையாள், குடிப்பறையன், கொத்தடிமை எனப் பல்வேறு பெயர்களில் தமிழர்களில் ஒரு பிரிவினர் அடிமைகளாய் அல்லல்பட்டு ஆற்றாது அழுது மடிந்த துயர நிகழ்ச்சிகள் மறக்க முடியாத வராலாற்றுண்மைகளாகும். இத்தகைய வரலாறு இன்னும் முடிந்துவிடவில்லை. இன்றும் புதிய வடிவில் பல்வேறு தொழில்களில் அடிமைநிலை நீக்கமற நின்று நிலவுகிறது.” (ஆ.சிவசுப்பிரமணியன்.2005)
கோயிலில் நுழைந்ததால் கொலை செய்யப்பட்ட கந்தசாமி பற்றியும், கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் கால்கள் தாக்கப்பட்டு நொண்டியாக்கப்பட்ட கோவிந்தன் பற்றியும், குளத்தில் தண்ணீர் எடுத்ததற்காக அடிகள் வாங்கி ஊரை விட்டே ஓடிப்போன பெரியத்தாய் குப்பன் பற்றியும் போகிற போக்கில் கவிஞர் சொல்லிச் செல்கிறார். அம்பேத்கர் காலம் தொட்டு பள்ளி வகுப்பறைகளில் நிலவிய சாதியப் பாகுபாடு கவிஞரின் பள்ளிக் காலத்திலும் நிகழ்ந்துள்ளது என்பதைக் கவிதையின் வழி அறிய முடிகிறது. குறிப்பாக, நாராயணசாமி வாத்தியார் உணவு முறையின் வழி சாதி குறித்து ஏளனமாகப் பேசியதும், தெருவைக் குறிப்பிட வைத்து வேதாச்சலம் வாத்தியார் ஏளனப்படுத்தியதும், சங்க இலக்கிய பரத்தையர் வீட்டை இன்றைய பறைச்சி வீடு என இலட்சுமி அம்மாள் கேவலமாகச் சித்தரித்ததும் வகுப்பறையின் பாகுபாட்டு அவலங்களாகும். இக்கவிதையை நடுநிலைத்தன்மையுடன் அணுகும் எந்தவொரு வாசகனுக்கும் கோபம் பீறிட்டு எழவே செய்யும்.
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும், சேரிகளுக்குள் சாதியத்தால் இன்றும் சுதந்திரமற்ற அடிமை நிலையே நிலவுகிறது என்ற அவலத்தை இறப்பின் வழியாகக் கவிஞர் காட்சிப்படுத்துகிறார். ”ஊர்த் திருவிழா அன்னைக்குச் / செத்துப் போன / மொட்டை நாக்கு / தாத்தா பொணத்தை / சாமிக்குத் தீட்டுன்னு / சீக்கிரம் / புதைக்கச் சொன்ன / ஊரையும் / சேரியையும் சேர்த்து / புதைக்க முடியாதுடா / நான் ஒப்பாரி வைத்து என் மக்க / ஆடிப் பாடித்தான் / என் மாமனைப் புதைப்பன்னு / சொன்ன / நாவம்மா பாட்டியின் பிணத்தை / ஊருக்குக் கட்டுப்படாதவனு / ஒதுக்கி வைச்சாங்க / பம்பாய்க்கு / கால்வாய் வெட்டப் போன / மக வரும் வரை / நாறிக் கிடந்த நாவம்மா பாட்டி / பொண நாத்தம் / இன்னும் வீசுகிறது / சேரியின் சுதந்திரக் காற்றாய்.” (பக்.41,42)
இறப்பில் மட்டும் அல்லாமல் திருவிழா போன்ற கொண்டாட்ட காலங்களில் சேரியின் நிலை எவ்வாறு உள்ளது என்பதையும் கவிஞர் பதிவு செய்துள்ளார். “எங்க ஊர்த் திருவிழா / பதினெட்டு நாள் பாரதம் / ஐந்து நாள் கூத்து / ஆறாம் நாள் தீமிதி / சுத்துப்பட்டு / எல்லா சனமும் / வந்து சேரும் / கூட்டம் கூட்டமாய் / தொலைந்து போகாமல் இருக்க / ஒருவர் கையை / ஒருவர் பிடித்து நிற்போம் / சேரிக்காகக் / குறுக்கே / கயிறும் மயிறும் / இருப்பதை மறந்து.” (பக்.43,44) என்பதில் தீண்டாமை நிலையினைக் குறிப்பிடும்போது, கவிஞர் தம் உணர்வெழுச்சியால் வசவுச் சொல்லை வெளிப்படுத்தியுள்ளார் என்றே கொள்ளமுடிகிறது.
சாதியத்தால் அம்மா - அப்பா இருவரும் அடிமைகளாக நடத்தப்படுவதை மகனின் நிலையிலிருந்து கவிஞர் காட்சிப்படுத்தியுள்ளார். “வேலைத் தலங்களில் / அம்மாவிற்கு ஏற்படும் / அவமானத்தையும் / உடல் வலியையும் / அப்பாவைப் போய் / ஞாயம் கேட்கச் சொல்வாள் / தினமும் அம்மாவின் முறையிடல் முறையில் / கோபம் / அதிகரித்துக் கொண்டே இருக்கும் / அம்மா / உணர்வதுமில்லை / அப்பா / உணர்த்துவதுமில்லை / செட்டியார் மனைவிக்கு / அப்பாவும் அடிமையென்று.” (ப.60) தாம் அடிமையாக நடத்தப்படுகிறோம் என்பதை உணராத அம்மாவின் நிலையையும், அதை உணர்ந்தும் ஆணாதிக்க மனோபாவத்தால் உணர்த்த முன்வராத அப்பாவின் சிக்கலான நிலையையும் பதிவு செய்துள்ளார்.
தாத்தாவும் பறையும்
பறை எனும் சொல்லிற்குச் சொல்லுதல், அறிவித்தல் எனப் பல பொருள்கள் கூறப்படுகின்றன. இசைக் கருவி என்ற வகையில் பலவகையான தோற்கருவிகளின் பொதுப் பெயராகச் சுட்டப்படுகிறது. மருதையன் குறிப்பிடுவதைப் போல, “முதலில் வினைச் சொல்லாகவும், பின்னர் இசைக் கருவியைக் குறிப்பிடும் பெயர்ச் சொல்லாகவும் இருந்த பறை, சமூக உறவுகளின் இலக்கண விதி மாறியபோது - தீண்டாமை நுழைந்தபோது - பெயர் உரிச்சொல்லாகவும் மாறியது. இழிவு, அழுக்கு, கருப்பு என்ற பொருள் தரும் சொல்லாகவும் பறை மாறியது.” (மருதையன், 2000) இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ’பறை இசைக்கருவி - ஓர் ஆய்வு’ நூலில் மு.வளர்மதி குறிப்பிடுவதைப் போல, ”இந்தியா, இலங்கை தவிர வேறு எந்த நாட்டிலும் பறை எனும் கருவியை இசைத்த மக்கள் தீண்டத்தகாதோர் ஆக்கப்பட்டவில்லை.” எனவேதான் பறை தம்முள் ஏற்படுத்திய தாக்கம் அதியன் ஆதிரையின் கவிதைகளில் அதிகமாகவே வெளிப்பட்டுள்ளது.
இரவில் ஊரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது கேட்கும் பறை ஒலியில் இறந்து போனது யாராக இருக்கும் என்ற பயம் கலந்த எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவதைப் போலவே கவிஞருக்கும் ஏற்படுகிறது. அவ்வாறான பயம் மனதைக் கவ்வியதை கவிதைப்படுத்தியுள்ளார். “சிறு சிறு / தூறல்களுக்கிடையே / அதிர அதிர / ஒலித்துக்கொண்டேயிருக்கிறது / பறை / ஈர இருட்டில் / ஊருக்கு வெளியே / தனித்து வரும் எனக்கு / அடுத்தடுத்து விழும் / தூறல்களுக்கிடையே / வந்து விழுகின்றன / முகங்கள்.” (ப.18) இக்கவிதையின் முடிவில் தூறல் விழுவதைப் போல ’வந்து விழுகின்றன முகங்கள்’ என்று கவித்துவமாகச் சொற்கள் விழுந்துள்ளன.
கவிஞரின் தாத்தாவிற்கும் ஆயாவிற்கும் இடையிலான உறவில் பறையும் முக்கியப்பங்கு வகிக்கிறது. பறை வாசிக்கப் போன இடத்தில் பறை வாசித்தலில் நடந்த அடவுப் போட்டியை அறியாத ஆயாவின் நிலையை கவிதைப்படுத்துகிறார். “பள்ளிக்கூடத்தில் / மாட்டுப் போட்டியில் / பரிசு பெற்று வந்த நாளில் / வெளியூருக்குப் / பறையடிக்கப் போன தாத்தா / ஊர்வலத்தில் / தனக்கும் / வெளியூர்க்காரனுக்கும் / நடந்த / அடவுப் போட்டியை / போதையில் / உளறிக்கொண்டேயிருந்தார் / இப்போட்டியை உணராமலே / கடைசிவரை / மௌனமாய்ச் சென்ற பல பிணங்கள் போலவே ஆயாவும் இருந்தாள்.” (ப.25) என்பதில் ஆயாவின் பறை குறித்த புரிதலின்மையை அறிய முடிகிறது.
ஆதிமனிதன் இசைத்த கருவியான பறையை அடிப்பதற்காகவே தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த தாத்தாவைப் பாட்டி திட்டியதையும், அதற்கான பதிலாக அவரின் உறக்கத்திற்கு முந்தைய உளறலையும், இருவருக்கும் நடுவராக இருந்த பெயரனான கவிஞர் அழகாய்க் கவிதையின் வழி நினைவு கூர்ந்துள்ளார். ”எங்கனா / சாவுன்னா போதும் / மோளத்தை தூக்கிகீனு / நாக்கத் தொங்கவுட்டுக்கீனு / கிளம்பிடுறியே / அத குடிக்கிறதை விட / அவன் மூத்திரத்தைக் குடி என்றாள் / குபிர்னு / எழுந்த / தங்கையின் / சிரிப்புக்கிடையில் / பறையை தலைகாணியாய் வைத்துத் / தூங்கிப் போகும் முன் / தாத்தாவின் உளறல் / மங்கலாய்க் / கேட்டுக் கொண்டே இருந்தது / பறையைத் தடவியபடியே / சாராயத்துக்காவடி போறன் / சாராயத்துக்காவடி போறன்னு.” (பக்.46,47)
மற்றொரு கவிதையில் தாத்தாவின் ஒரே சொத்தாகப் பறை இருந்தது எனக் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, என் தாத்தாவிற்கு ஒரு வீடு இருந்தது, யானை இருந்தது, குதிரை இருந்தது, நாற்காலி இருந்தது எனக் கதைகளின் தலைப்பைப் படித்தபோது, கவிஞருக்கு நினைவு வந்ததைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். “என் / தாத்தாவிற்கு இருந்தது / நினைவுக்கு வந்தது / ஒரு / மயிர் புடுங்கிய மாட்டுத்தோலும் / முறுக்கிக் காய்ச்சிய / ஒத்த பறையும்.” (ப.65)
மேலும் ஒரு கவிதையில் பறை இசைக் கலைஞரான தாத்தா பறை இசைக் கருவியை உருவாக்கும் விதத்தையும், அதற்குத் தாம் செய்த ஒத்தாசையையும் கவிதையின் மூலம் கவிஞர் அழகுறப் பதிவு செய்துள்ளார். ”இரத்தம் சொட்டச் சொட்ட / கொண்டு வருவாங்க / செத்த மாட்டுத் தோலை / சின்னச் சின்னதாய் / குச்சி சீவி / இழுத்து அடித்து / அடுப்புச் சாம்பலைத் தூவிவிட்டா / காயும் ரெண்டு நாளைக்கு. / சூரிக் கத்தியால் / முடியெல்லாம் சொரண்டி / வட்டமாய் அறுத்து / தோலை ஊறவைத்தா / ஊறும் பகலெல்லாம் / தினமும் பள்ளிக்கூடம் முடிந்ததும் / நான் ஏரிக்கரையில் / பொறுக்கி வந்த / புளியங்கொட்டையை / வறுத்துக் குத்தி / கூழாய்க் கொதிக்க வைத்து / உதிரித் தோலில் / கயிறு திரித்து / தன் சகாக்களோடு / கதை பேசியபடியே / பறை மூடுவார் / இரவெல்லாம். / மூன்று நாள் கழித்துக் / கொஞ்சம் கொஞ்சமாய்த் / தீயில் காய்ச்சி / உரசி / உரசிப் பதம் பார்த்துக் / கண்கள் பிதுங்க / உடல் முறுக்கேற / மண்ணதிர / அடவு போட்டுப் பிறக்கும் / புதிய பறை. / தன் நினைவு தெரிந்த / நாளில் இருந்து / பறையோடு வாழ்ந்ததாய்ச் / சொல்வாள் ஆயா. / தாத்தா செத்த பிறகு / கோவணமும் சாராயமும் / கறிச்சோறும் / நடு வீட்டில் படைத்தார்கள் / எல்லோரும் கடைசி வரை / மறந்தே போனார்கள்... / பறையை.” (பக்.73-75) இவ்விதமாகப் பறையை உருவாக்கியும் பறை அடித்தும் வாழ்ந்து மறைந்த தாத்தாவுக்கும் பறைக்குமான உன்னத உறவைக் கவிஞர் தம் கவிதைகளில் வடித்திருப்பதை காணும்போது, தன் வாழ்வனுபவ நிலையில் தாத்தாவும் பறையுமே கவிஞருக்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிய முடிகிறது.
சுழியத்திற்குக் கொண்டு வருதல்
தலைமுறை தலைமுறையாக ஆதிக்க சாதியினரை எதிர்த்து நிகழும் போரைக் கவிஞர் கவிதையின் வழி நிகழ்த்துகிறார். “என் அப்பனும் / பாட்டனையும் போலவே / உனக்கெதிரான போரை / சுழியத்திலிருந்தே தொடங்குகின்றேன் / எனக்கான வெற்றியென்பது / உன்னைக் / கொல்வதில் அமைவதில்லை / மீண்டும் / சுழியத்திற்கே / உன்னைக் / கொண்டு வருவதிலேயே / அமைந்து இருக்கிறது.” (ப.52) என்பதில் ஆதிக்க சாதியின் மீதான கோபமானது தீவிரமாகவே வெளிப்பட்டுள்ளது. இக்கவிப்போரில் ஆதிக்க சாதிக்கு எதிரான போரைச் சுழியத்திலிருந்து தொடங்கி, ஆதிக்க சாதியையும் சுழியத்திற்குக் கொண்டு வருவதே தன் உண்மையான வெற்றி என்கிறார். குறிப்பாக, சுழியத்திற்குக் கொண்டு வருதல் என்பது, சிங்களவர்கள் தமிழரை நோக்கிக் கூறி இனப்படுகொலை புரிந்ததையும், தமிழகம் உட்பட இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இன்று வரை நிகழ்வதை நினைவு கூர்வதாகவே உள்ளது.
சாதியமற்ற சமூகம்
கவிஞர் அதியன் ஆதிரையின் மனம் சாதியமற்ற சமத்துவ சமூகத்தைக் காண விரும்பும் மனமாக இருக்க, மறுபுறம் இயற்கையின் அழிவு மீதான அக்கறை உள்ள அளவிற்கு சாதிய ஒடுக்குமுறை குறித்த அக்கறை எள்ளளவும் இல்லை என்பதைக் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். மரம் / ஆடு / மாடு / மண் / செடி / கொடிகள் அழிவதைப் பற்றிக் / கவிதை எழுதிவர / சொன்னவனிடத்தில் / சேரிகள் / பற்றி எரிவது பற்றிய / கவிதையைக் கொடுத்தேன் / தலைப்புக்குள் / அடங்காது என்றான் / போடா மசுரு / அனைத்தும் அடங்கும் / சேரிக்குள் என்றேன்.” (ப.54)
தந்தை மகனுக்குச் சாதிய வலிகளைக் கைம்மாறாக அளிப்பதைக் கவிதையின் வழி ஆதங்கத்துடன் கவிஞர் கூறியுள்ளார். ”உன் ஒவ்வொரு / பிறந்த நாளின்போதும் / எனக்குள் / நீ / இனி வாழப்போகும் / நாட்களைப் பற்றிய / எண்ணங்கள் பிறக்கின்றன. / தினம் தினம் / நீளும் / அரசு சமூக அதிகார வன்முறையில் / நான் / அனுபவித்த வலிகளை நிராகரிப்புகளை / உனக்கு ஒன்றுகூட குறையாமலே / கை மாற்றியே விட்டுச் செல்கிறேன் / உன் தகப்பனாய் / உன் உற்ற தோழனாய் / நீ / மருத்துவராகவோ / பொறியாளராகவோ / அரசு அதிகாரியாகவோ இருக்க / துளியும் விருப்பமில்லை / எனக்கு. / என்னைப் போல் / நீயும் / உன் பிள்ளைக்கு / இவ்வலிகளைக் கை மாற்றாமல் / சக மனிதர்கள் மீது / பேரன்பு கொண்டு / சமூக அவலங்கள் உடைய / பதாகைகளை ஏந்திக் / களமாடும் தோழனாய் / இருப்பாயா என் தோழனே.” (பக்.104,105) ஒரு தந்தையாகத் தான் வாழ்ந்த வாழ்வு போல் சாதிய வலியுடன் தன் மகன் வாழாமலும், தன்னைப் போலவே அவனது மகனுக்குக் கைமாறாகச் சாதிய வலிகளைக் கைமாற்றாமல் போராட்ட குணத்துடன் வாழ வேண்டும் என்று சமூக மாற்றத்தை விரும்பும் கவிஞரின் மனதை இக்கவிதையின் வழி காணமுடிகிறது.
முடிவுரை
அதியன் ஆதிரை தம் ’அப்பனின் கைகளால் அடிப்பவன்’ கவிதை நூலின் வழி, சாதிய அடையாளத்தால் இச்சமூகம் தனக்கு ஏற்படுத்திய பாதிப்பினைப் பெரும்பாலும் கவிதைகளாகப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக இறப்பில் கொட்டப்படும் பறை பற்றிப் பெரும்பான்மையாகப் பேசுகிறார். தனது தாத்தாவிற்கும் பறைக்குமான பிடிப்பினை நான்கு கவிதைகளில் பதிவு செய்துள்ளார். சாதியம் பல தலைமுறைகளாக அளித்து வரும் வலி தம்மோடு ஒழிந்து, தன் மகன், எல்லோரும் சமமாக வாழும் சமத்துவ சமூகத்தில் வாழ வேண்டும் என்ற வேட்கை கவிதையில் புதைந்துள்ளது. சொல்ல நினைத்த கருத்தினைக் கவிதையின் வழி துணிந்து சொல்லும் திறம் கவிஞரிடம் இயல்பாகவே உள்ளது. அதனால்தான் அப்பனின் கைகளால் அடிப்பவனைக் கவிதைகளின் வழி எதிர்த்து அடிக்கவும், அவன் கைகளை ஒடிக்கவும் துணிந்துள்ளார்.
அப்பனின் கைகளால் அடிப்பவன்,
அதியன் ஆதிரை, நீலம் பதிப்பக வெளியீடு, சென்னை.
விலை ரூ. 150
துணை நூல் பட்டியல்
1. சிவசுப்பிரமணியன்.ஆ, தமிழகத்தில் அடிமை முறை, 2005, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
2. மருதையன், புதிய கலாச்சாரம், ஜனவரி 2000.
- முனைவர் இர.சாம்ராஜா, உதவிப் பேராசிரியர், மொழிகள் துறை, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), வல்லம், தஞ்சாவூர்.