பெயரென்றும் இருப்பிடமென்றும்
confusionநகைப்புத் தோன்ற
கிளம்பி நெடுந்தூரம் வந்தாயிற்று
யாரொருவரும் கலைத்துப் போடலாமென
வழி தவறிய நாயைப் போல கடந்த பாதையில்
அடையாளம் எதையும் உண்டாக்கவில்லை
புராணக் கதையின் சிறுமியாய்
மணியாரத்தின் முத்துகளை
வழிநெடுகச்சிதறி விட தேவதைகளின்
உபயமும் எனக்கில்லை
தொலைதூரத் தனிமை
குழப்பங்களால் புதியவைகளைப் பற்றுகிறது 
அடையாளமாய் விலா எலும்புகளை
விட்டு வரலாமென்றாலும்
உணவிடமுடியாதவற்றிடம்
உரிமை கோரும் துணிவெனக்கில்லை
அதோ வெளிச்சத்தின் வாசனையை 
நுகர்கிறது நாசி
அதன் சப்தங்களை சுவைத்துக் கொண்டேவரும் 
என்மீது இரக்கம் கொண்டு
இளஞ்சூட்டில் பொன் நிறமான தேனீரைத் தருகிறீர்கள்
என்னையாரென்று வினவப் போகும் உங்களுக்கு
பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் நடுங்குகிறது உடல்
தயவு செய்து என் குழப்பத்தை விளக்குங்கள்
முதல் நகரத்தில் சந்தித்தவர்தானா நீங்கள்
வேறொரு நகரத்திலும் நீங்கள்தான் இருக்கிறீர்களா
அடையாளம் ஏதுமில்லை
என்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்

Pin It