1776-ல் எழுதப்பட்ட ஒரிஜினல் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை இப்போது இந்தியாவில் பார்க்க முடியும். ஆட்டுத்தோல் ஏட்டில் எழுதப்பட்ட அந்தப் பிரகடனம் இமாச்சலப் பிரசேத்தின் தலைநகர் சிம்லாவில் உள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில் உள்ளது. இப்போது அது விற்பனைப் பொருளாக இல்லாமல் சுற்றுலாப்பயணிகள் விரும்பிப் பார்க்கும் அரிய தகவல் சொத்தாக உள்ளது.

சிம்லாவில் மேரியா பிரதர்ஸ் என்ற ஒரு பழைய புத்தகக் கடை உள்ளது. இதில்தான் இந்த அரியதிலும் அரிய ஆவணம் உள்ளது. ஒ.எஸ்.சுட் என்பவர் சிம்லாவில் 1953-ல் மாணவ மாணவிகளுக்கான புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களுக்கான கடையைத் துவக்கினார். பழைய பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட அவர், 1960-ல் தனது கடையை பழைய புத்தகக்கடையாக மாற்றினார். பழைய புத்தகங்கள் தவிர்த்து பழைய வரலாற்றுப் பொருட்கள் பயணப் பொருட்கள் மற்றும் பழைய பதிவேடுகளையும் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். எனவே இவர் இந்தியாவில் மிக முக்கியமான பழம்பொருள் சேகரிப்பாளர் என்று மதிக்கப்பட்டவர்.

இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பெரிய பழைய நூல்கள் சிலவற்றை வாங்கினார். ஆனால் அவை எவ்வகைப்பட்ட நூல்கள் என்று பார்க்காமலே அவரதுகடையில் இருந்த பழைய நூல்களுடன் பழைய நூலாக முறையாக அடுக்கி வைத்தார். அவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

அவருக்குப் பிறகு அவரது மகன் ராஜிவ் என்பவரும் அந்தப்பழையப் புத்தகக் கடையை பராமரித்து நடத்தி வந்தார். அவர் தனது தந்தை சேகரித்து வைத்திருந்த பழையபுத்தகங்களை யெல்லாம் கணக்கெடுத்த போதுதான் பக்குவப்படுத்தப்பட்ட ஆட்டுத்தோல் ஏட்டில் எழுதப்பட்ட ஒரிஜினல் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் இருப்பது அறியப்பட்டது. அது, 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை வாங்கி அடுக்கி வைத்த பழைய நூல்களில் ஒன்றாகும்.

அமெரிக்க மக்கள் பிரிட்டிஷ் காலனியாட்சியை எதிர்த்து போராடி வந்ததன் பின்னணியில் பொருட்டு 1776 ஜூனில் தாமஸ் ஜெஃபர்ஸனால் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் எழுதப்பட்டது. அப்போது இந்தப் பிரகடனம் பக்குவபடுத்தப்பட்ட தோல் ஏடுகளில் 200 ஒரிஜினல் பிரதிகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் ஒரு சில தான் இன்று உலகில் உள்ளன என்று கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் மேரியா பிரதர்ஸ் கடையில் உள்ள ஒன்றாகும்.

இது குறித்து இமாச்சல பிரதேச சுற்றுலாத் துறை அதிகாரி அருண்ஷர்மியா. இந்த அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், ஒரு அரிய செய்தியாகும். சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இதனை அவர்கள் பார்க்கக்கூடிய வகைகளில் வைக்குமாறு கடை உரிமையாளர்களை கேட்கவிருக்கிறோம். என்று கூறியுள்ளார்.

இப்போதேல்லாம் சுற்றுலாப் பயணிகள் கேட்டுக்கொண்டால் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் அவர்களுக்கு காட்டப்படுவதாக ராஜிவ் கூறுகிறார். மேலும், பழம்பொருட்கள் சேகரிப்பில் மனிதத் தொடை எலும்புகளில் தயாரிக்கப்பட்ட ஊதுகொம்புகளும் இடம் பெற்றுள்ளன. அந்தப் பழைய புத்தக கடையின் கண்ணாடி அலமாரிகளில், திபெத்திய அகதிகளால் விற்கப்பட்ட வஜ்ராயன புத்தமதம் சம்பந்தமான நூல்களும் உள்ளன. புத்தகப்பிரியர்களுக்கு நல்ல விருந்து.

Pin It