ஏ.கே. செட்டியாரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் 10.11.2011 அன்று நடைபெற்றது. விழாவில் துணைவேந்தர் பேரா. கல்யாணி அன்புச் செல்வன் தலைமையுரை ஆற்றினார். புதுக்கோட்டை ஞானலாய நூலக நிறுவனர் பா. கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். விழாவில் ஏ.கே. செட்டியார் எழுதிய நூல்களும், குமரிமலர் இதழ்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விழாவில் ஏ.கே. செட்டியார் பற்றி உரையாற்றியவர்களின் உரைகளிலிருந்து சில துளிகள்...

ஏ. கருப்பன் செட்டியார் என்று அழைக்கப்பட்ட ஏ.கே. செட்டியார் உலகம் சுற்றும் தமிழன் என்ற அடை மொழியுடன் அழைக்கப்பட்டவர். இவர் காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர். அன்று பணக்காரர்கள் மட்டுமே வெளிநாடு சென்று கொண்டிருந்த காலத்தில், சராசரி வகுப்பைச் சேர்ந்த இவர் வெற்றிகரமாக உலகை வலம் வந்தவர். மேலும் வெளிநாடு என்றாலே இங்கிலாந்து என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளுக்குச் சென்று பயணநூல்களை எழுதியவர். இன்றைக்கு ஆவணப்படங்கள் பரவலான கவனம் பெற்றுள்ளன. ஆனால் அது வெகுஜனப் பரிச்சயம் பெறாத அந்த நாட்களில் முதன்முதலாக காந்தி உயிரோடு இருக்கும் போதே அவரைப் பற்றி தமிழ் தெலுங்கு மொழியில் படம் எடுத்தவர். குமரி மலர் என்ற மாத இதழை நாற்பது ஆண்டுகள் நடத்தியவர்.

குடும்பத்தொழிலை கவனிக்க ரங்கூனுக்கு சென்ற இவர், அங்கு தனவணிகன் இதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றார். அப்போதுதான் வெ. சாமிநாத சர்மா போன்றோர்கள் அந்த இதழில் கட்டுரைகள் எழுதினர். இவர் புகைப்படக் கலை குறித்த மேல் படிப்புகாக ஜப்பான் சென்று வந்தார். அந்த அனுபவங்களுடன் ஜப்பான் என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் அப்போதைய ஆங்கில காலனிய அரசால் தடை செய்யப்பட்டது. அந்த நூலின் முன்னுரையில் ‘ஒரு நாட்டைப் பற்றி எழுதுவது என்றால் - அந்நாட்டில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தங்கி, அந்நாட்டு மொழியை நன்கு பயின்று, அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகியிருக்க வேண்டும். ஆனால் நான் ஜப்பானில் தங்கியிருந்தது ஒரு மாதகாலம்தான். இது நுனிப்புல்லை மேய்வது போன்றது. இந்நிலையில் நான் அதிகம் எழுத முடியாது என்றாலும் ஜப்பானைப் பற்றி தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலேயே இந்நூலை எழுத முன் வந்தேன்’

ஏ.கே. செட்டியார் எழுதிய நூல்கள்

1. ஜப்பான் (1936) 2. திரையும் வாழ்வும் (1943),

3. பிரயாணக் கட்டுரைகள் (1947) 4. மலேயா முதல் கனடா வரை (1955), 5. அமெரிக்க நாட்டில் (1956)

6. கரிபியன் கடலும் கயானாவும் (1957) 7. உலகம் சுற்றும் தமிழன் (1958) 8. அண்டை நாடுகள் (1958)

9. ஐரோப்பிய வழியாக (1961) 10. இட்டபணி (1962) 11. குடகு (1967) 12. புண்ணியவான் காந்தி (1969) இந்த நூல்கள் சிலவற்றை சக்தி வை. கோவிந்தன் அவர்களும், மற்ற சில நூல்களை டி.வி.எஸ். நிறுவனமும் ஏஷியன் டிராவல்ஸ் நிறுவனமும் வெளியிட்டுள்ளன இன்னும் அச்சில் வராத மூன்று நூல்கள் உள்ளன.

குமரி மலர் மாத இதழ் இரண்டாம் உலகப்போர்க் காலமான 1943-ல் தோன்றியது. 1983 ஏப்ரல் வரை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் வரை வெளிவந்தது. இடையில் 1.4.1945 முதல் 1.1.1946 வரை இதழ் வெளி வருவது தடைப்பட்டது. ஏ.கே. செட்டியார் வெளிநாடு சென்ற போது வெ. சாமிநாத சர்மா ஆசிரியராக பொறுப்பேற்று குமரிமலரை நடத்தினார்.

Pin It