டில்லி சுல்தான்கள் காலம் துவங்கி, முகலாயர்கள் காலம் வரை சுமார் 200 ஆண்டுகால ஆட்சி முறை பற்றி அருணன் அலசியுள்ளார். முகலாய மன்னர்களே தங்களின் வாழ்க்கை வரலாறுகள் பற்றி எழுதியுள்ளது, அல்லது பிறரைக் கொண்டு எழுதி வைப்பது என்ற ஒரு நடைமுறை அமலாக்கப்பட்டது நமக்கு ஆச்சரியமான விசயம்.

அந்நிய மதத்தார் இந்தியாவில் கோலோச்சிய காலத்தில், உச்ச நிலையிலேயே வாழ்ந்து வாழ்வை அனுபவித்து வந்த பிராமணியர்களின் நிலை என்னவாக இருந்தது என்பதன் நுணுக்கங்களை மிகத் திறமையாகவே திரை விலக்கிக் காட்டுகிறார் அருணன். அதற்காக பல்வேறு ஆசிரியர்களின் பழைய ஏடுகளையெல்லாம் எடுத்தாளுகிறார். படிக்கிற வாசகர்களுக்கு மிகப் பிரமிப்பாகவே இருக்கும். ஏராளமான புத்தகங்களிலிருந்து பலப்புதிர்களைக் கொண்டு வந்து அறுவை சிகிச்சை செய்து அப்பட்டமாகவே நம் கண் முன்னால் கொண்டு வந்து காட்டுகிறார். அவர் அப்படி காட்டுகிற போதுதான் அதன் சூட்சுமங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய ஆட்சி வரலாறுகளை நிறைய பேர் எழுதியுள்ளார்கள். ‘வந்தார்கள், வென்றார்கள்’ என்ற தலைப்பில் மதன் தொடராக எழுதி, பின் புத்தக வடிவில் வந்தது. “முகலாயர்” என்ற தலைப்பில் முகில் எழுதிய (கிழக்கு பதிப்பகம்) வரலாற்று நூலும் வந்துள்ளது. இதனிடையில் புகழ் பெற்ற வரலாற்று மேதைகளும் கூட ஆங்கிலத்தில் நிறையவே எழுதியுள்ளார்கள்.

ஆனால் பெரும்பான்மையினர் மதம் என்று சொல்லக்கூடிய இந்துமதம் சிறுபான்மையினரான வேற்றுமதம் சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்ட போது அதன் நிலைமை என்னவாக இருந்தது, அது எப்படி இஸ்லாமிய மதத்தோடு உராய்ந்தது, உள் வாங்கியது, ஊர்ந்தது, சமயம் கிடைத்த போது எப்படி எக்கியது, இயலாமைக் காலத்தில் எப்படி ஏங்கியது, ஆனாலும் எப்படியோ பிழைத்து வாழ்ந்ததே அது எப்படி? இந்த வரலாற்று உண்மை களெல்லாம் அருணன் எழுதியிருப்பது தனி ரகமானது. ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களுக்கும் அவரவர்களின் சித்தாந்த தரிசனம் அவர்கள் எழுதும் வரலாற்று நூல்களில் கட்டாயம் பிரதிபலிக்கும்.

அண்டை நாட்டிலிருந்து, அந்நிய நாட்டிலிருந்து, மதத்தாலும், மொழியாலும் வேறுபட்ட ஒரு குறிப்பிட்ட இன மக்கள் (சுல்தான்கள், முகலாயர்கள்) எப்படி இந்தியாவை வெல்ல முடிந்தது, ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஆளவும் முடிந்தது? அவர்கள் என்ன அவ்வளவு முரடர்களா? பலாத்காரவாதிகளா? ஆயுதப் பயிற்சியில் வல்லவர்களா? வென்றால் நாடு, அல்லாதுபோயின் சுடுகாடு எனச் சூள் உரைத்துப் போருக்குக் கிளம்பியவர்களா? இவை மட்டும்தான் அந்நியர்கள் ஒரு நாட்டை வெல்லுவதற்கு அடிப்படைக் காரணங்களாக இருக்க முடியுமா? இவைகளுக்கு அப்பால் வேறு காரணங்கள் இருக்க முடியாதா? நிச்சயமாக இருந்திருக்க வேண்டும்.

சுல்தான்களோ, மொகலாயர்களோ இந்தியாவை நோக்கி படையெடுத்து வருவதற்கு முன்னாள் இந்திய நாட்டின் நிலை என்ன? அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந் தவர்கள்,சொந்த மண்ணின் மக்களிடம், அந்த பெரும் பான்மையான உழைப்பாளி மக்களிடம், அந்நியப்பட்டுக் கிடந்தார்கள். பார்ப்பன‌ மதமும், அவர்களால் உருவாக்கப்பட்ட சாதிப்பிரிவுகள், தீண்டாமை எனும் கொடுமை, மூடப்பழக்க வழக்கங்கள், பெரும்பான்மையான மக்களுக்கு கல்வியறிவே அண்டாமல் செய்தது, சொத்துரிமை இல்லாமல் பார்த்துக் கொண்டது. புண்ணியம், பாவம், மறுபிறவி - இப்படிப் பல்வேறு பாகுபாடுகளால், சமூகக் கொடுமைகளால் பெரும்பான்மை அடித்தட்டு மக்கள் தனிமைப்பட்டு வைக்கப்பட்டதால், ஆட்சி அதிகாரத்திலிருந்த ஆளும் வர்க்கங்கள், சமூக அந்தஸ்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் அந்நியத் தாக்குதல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், ஒதுக்கப்பட்ட மக்கள் யார் வீழ்ந்தால் என்ன, யார் எழுந்தால் என்ன என்று வாளா இருந்தார்கள், சலனமின்றி வாழ்ந்தார்கள். இந்த அடிப்படைக் காரணம்தான் வேற்று நாட்டினர் வந்தார்கள், வென்றார்கள், ஆண்டார்கள் என வரலாறுகள் நடந்து முடிந்தன.

மற்றக் காரணங்களான இந்தியாவை ஆண்ட ராஜாக்கள் சிறுசிறு பகுதியாக ஆண்டார்கள், அவர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாதிருந்தது, வந்த அந்நிய நாட்டாருக்கு சிலர் வெண்சாமரம் வீசினார்கள். தங்களின் அடுத்த பகுதி ராஜாவையே காட்டிக் கொடுத்தார்கள் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான். இந்த ஒட்டுமொத்தமான பலகீனங்களுக்கு இடையிலேயும் சில கடுமையான போர்கள் நடந்ததும் உண்டு.

இந்த நூலின் பலமே, இஸ்லாமியர்களின் ஆட்சிகாலத்தைப் பற்றி எழுதியபோது, அவர்கள் அந்நிய நாட்டார்கள், வேற்று மதத்தார்கள் என்ற வெறுப்பை முன்கூட்டியே சிந்தையில் இறுத்திக் கொண்டு, உல்லிங்கனம் காட்டி எழுதவில்லை. உவத்தல், காய்த்தல் இன்றி நடுநிலையில் நின்று எழுதியுள்ளார்.

உதாரணமாக அக்பர் ஆட்சிக்காலத்தை சிறப்பித்து எழுதுகிறார். அவர் செய்த பல வியத்தகு மாற்றங்களை வரவேற்கிறார். குறிப்பாக மத நல்லிணக்கம் அக்பரின் மூச்சாக இருந்ததை பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அதே அக்பர் சித்னர் கோட்டையை முற்றுகையிட்டு போர் நடத்திய போது சுமார் 30 ஆயிரம் ராஜபுத்திர வீரர்கள் (உள்ளூர் விவசாயிகளும், சேர்ந்து) கொல்லப்பட்டதையும், அந்தப்புரத்து ராஜபுத்திர பெண்ககள் சுமார் 300 பேர் அவர்களின் சொந்தக்காவலர் களாலேயே உயிரோடு எரிக்கப்பட்டார்கள்(காரணம் ராஜபுத்திர பெண்கள் இஸ்லாமிய சேனையிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக)என்பதையும் தெரிவிக்கின்றார்.

இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்கோயில்களை இடித்தது பற்றிய நோக்கம் என்ன? பல சரித்திர ஆசிரியர்கள் இதுபற்றி சார்புநிலையில் நின்றே எழுதியுள்ளார்கள். ஆனால் உண்மை நிலை என்ன?

எதிரிகள் படை எடுத்து ஒரு நாட்டை தாக்குகிற போது அந்த நாட்டில் உள்ள கோயில்களை இடிப்பது எதிரிகளின் வழக்கம். இது உலகம் முழுவதும் இருந்து வந்த பழக்கம். பல நாடுகளில் இப்படி நடந்தது உண்டு. குறிப்பாக இந்தியாவில் இந்து கோயில்களில் ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள், தங்கம் வைடூரியம், வெள்ளி, பணம் போன்றவைகளை இரகசியமாக பாதுகாத்து வைக்கிற பழக்கம் உண்டு. இஸ்லாமிய மன்னர்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகிறபோது, கொள்ளை யடிக்கவும் வந்திருக்கிறார்கள், அப்போது அவர்கள் வெள்ளி, தங்கம், வைடூரியம் போன்ற பொருள்களுக்காகக் கோயில்களை இடித்துள்ளார்கள்.

சில இடங்களில் ‘லோக்கல்’இந்து மக்கள் தூண்டுதல்களால் மசூதி கூட இடிக்கப்பட்டதுண்டு. அதுபோன்ற நேரங்களில் ஆட்சியில் உள்ள இஸ்லாமிய மன்னர்கள் சினம் கொண்டு இந்துக்கோயில்கள் சிதிலம் அடையச் செய்ததுண்டு. இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களில் இருந்த இடத்தில் மசூதிகள் கட்டப் பட்டதும் உண்டு.

“பழைய இந்துக் கோயில்களை இடிக்க வேண்டாம், புது இந்துக்கோயில்களை இனி கட்டவும் வேண்டாம்” என மன்னர்கள் உத்தரவிட்டதும் உண்டு. சில இடங்களில் மொகலாய மன்னர்கள் இந்துக்கோயில்களின் மராமத்துப் பணிகளுக்கு நிதி கொடுத்ததும் உண்டு. மானியம் வழங்கியதும் உண்டு. சில மன்னர்கள் மதவாதிகளாய் இந்துக்கோயில்களை இடித்ததும் உண்டு, இதில் ஒளரங்கசிப் சற்று கூடுதலாகவே செயல்பட்டார். ஆனால் இந்துக்கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதி கட்டப்பட்ட போது அங்கு அப்படி ஒரு ராமர் கோயில் இல்லவே இல்லை என்ற ஆதாரங்களை அருணன் அழுத்தமாகவே காட்டியுள்ளார்.

ஆனால் இஸ்லாமியர்கள் ஆட்சி, இந்துக்கள் மீது ‘ஜிகுயா’ வரி(தலைவரி) விதித்தது அநியாயமானது. அருணன் இதை சரியாகவே குறிப்பிடுகிறார். இந்த வரி அரசுக்கு வருமானம் வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமல்ல. மதக் குரோதமும், மதமாற்ற கட்டாயமும் இந்த வசூலில் அடங்கியுள்ளது என்பதும் தெரிகிறது என்கிறார்.

நீண்டகாலம் நீடித்த இந்த ஜிகுயா வரியை அக்பர் ஆட்சிக்கு வந்தவுடன் நீக்கி விட்டார். அக்பர் காலத்தில் அடிமை முறை அகற்றப்பட்டதையும், மத நல்லிணக்கம் வல்லமை பெற்றதையும் மதப்பாகுபாடு கூடாது என்பதற்கு அடையாளமாக இந்துப் பெண்களைத் திருமணங்கள் செய்து கொண்டதையும், அந்தப் பெண்கள் இஷ்ட தெய்வங்களை அரண்மனையிலேயே வணங்க இடமளித்ததையும் நோக்குகிறபோது, அக்பருக்குள்ள விசால மனப்போக்கு தெற்றென விளங்குகிறது.

அக்பருக்கு ஆலோசனைகள் கூற அவர் ஆட்சியில் இந்துக்களையும் முக்கிய நிர்வாகத்தில் அமர்த்தி பரிபாலனம் செய்தார் என்பதும் வரவேற்க வேண்டிய நற்காரியமாகும். இந்துக்களிடம் வழக்கத்தில் இருந்த உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை முகலாய மன்னர்கள் தடுத்தார்கள். தடை உத்தரவு வகுத்தார்கள். ஆனாலும், அந்த மனிதநேயமற்ற பழக்கத்தை சனாதனவாதிகள் ‘விடேன்’ என்று கூறி எப்படியெல்லாம் அடம் பிடித்தார்கள், தந்திரம் வகுத்தார்கள், அதை அமல்படுத்தினார்கள் என்பதை அருணன் கோடிட்டுக் காட்டுகிறார்.

எந்த நேரமும் போர், எப்போதும் நாடு பிடிக்கப் போர், இழந்த நாட்டை பிடிக்க மீண்டும் போர், இதில் ஆயிரக்கணக்கானோர், பத்தாயிரக்கணக்கானோர் வெட்டி வீழ்த்தப்படுவது, எங்கும் சதா ரத்தவாடை தான். இந்து மன்னன் தோற்கடிக்கப்பட்டால், அரண்மனைப் பெண்கள் முகலாயர்களிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக உயிரோடு தீக்கு இரையாகி தீய்ந்து போவது, நகரங்கள் நாட்கணக்கில் எரிக்கப்படுவது கூட நடந்ததுண்டு.

இப்படி மன்னர்கள் ஆட்சியில் வகைவகையான வன்கொடுமைகள் ஒரு மன்னனின் ஆட்சி எத்தனை ஆண்டுகள் நீடிக்கும், யார் உத்தரவாதம் கொடுப்பது, ஆகவேதான், அனைவரையும் அடக்கி வைக்க, அல்லது அழித்து விட அதன்மூலம் அதிகார எல்லையை விகுதரிக்க முயற்சிகள் நடந்தன. அழிவுகள் நிரம்பி வழிந்தன. ஆனாலும் இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலேயும் இடர்பாடுகளுக்கு நடுவிலேயும், பிராமணியம் வாழ்ந்தது, சுதாரித்துக் கொண்டது, சில மாற்றங்களை செய்து கொண்டது, சூழலுக்கு ஏற்றார்போல் தங்களை தக அமைத்துக் கொண்டது, இவற்றையெல்லாம் ஆங்காங்கே நூலில் அருணன் விலாவாரியாக விண்டுகிறார். இது சம்பந்தமாக அவர் பதிவு செய்துள்ள பல விஷயங்களில் ஒன்றை மட்டும் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

ஜெப்பூரின் (அம்பன்) ராஜா ‘பின்தங்கி விட்ட நிலக்கிழார்களிலிருந்து, தான் முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்துக்கு ஆட்பட்டு ஒரு திட்டமிட்டான், அந்தப் பார்ப்பன‌ ராஜா அக்பரோடு ஒரு நல்ல உறவை உருவாக்க விரும்பினான்.’

ராஜபுத்திர குலத்தின் ஒரு பார்ப்பன‌ ராஜா, தன் சொந்த நோக்கிலிருந்து, தானே முன்வந்து ஒரு முகலாய மன்னனை மருமகனாக்கிக் கொள்ள விரும்பினான். டில்லி சுல்தான் காலத்தில் நடந்தது போல இது கட்டாயக்கல்யாணம் அல்ல. இதற்கான முதல் ஆலோசனை பிராமணிய ராஜா தரப்பிலிருந்து வந்தது. பெருந்தன்மை மேன்மை தங்கிய ஷானிஷாவுக்கு (அக்பருக்கு) கூடப்பிறந்த குணம் என்பதால் அந்த பார்ப்பன‌ ராஜாவின் விண்ணப்பம் ஏற்கப்பட்டது. இப்படி எழுதி வைத்தது அக்பரின் உடன் இருந்தே அவரின் வரலாற்றை எழுதிய மிக முக்கியஸ்தர் அபுல்ஃபசல்.

முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் பிராமணியம் இப்படி வகைவகையான தந்திரங்களை, சூட்சுமங்களை கால நெடுகிலும் செய்து வந்திருக்கிறது. புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சிக்காலம் முடிவுற்றதோடு, அந்த வரலாற்றை முடிக்கிற போது, அன்றைய கால சூழலை, அன்றைய ஒரு பொருளாதார சமூக அரசியலோடு எப்படி அருணன் வர்ணிக்கிறார் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். ஒரு மார்க்சிய வரலாற்று சிந்தனை யாளருக்குத்தான் அப்படிப் பார்க்க முடியும்.

அடிமைச்சமுதாயத்தில் உருவான பிராமணியம், நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. இது ஒரு அதிசயம் என்றால், பர சமயத்தவரான டில்லி சுல்தான்கள் ஆட்சியிலும் அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டது அதிசயத்திலும் அதிசயம். இதற்கு என்ன காரணம்? அல்லது காரணங்கள்?

முதல் காரணம் , அடிப்படைக்காரணம் வருணாசிரம மானது பிறப்பின் அகுதிவாரத்தில் அமைந்தது. ஆனால் அதற்கு நீடித்த தன்மை கிட்டியது. அப்புறம் அதன்படி நிலைத்தன்மை பார்ப்பன‌ர்களுக்கும், ஷத்திரியர்களுக்கும் இடையில் ஒருவகை நடைமுறை ஒத்துழைப்பு, வைசிரியரை, வத்திரரை, பஞ்சமரை ஒடுக்குவதில் பொது உடன்பாடு.

சுல்தான்கள் ஆட்சியின்போது அரசவையில் அந்தஸ்தை இழந்த பிராமணியவாதிகள், புத்திசாலித் தனமாக சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் நிலை கொண்டார்கள். நிலத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தில் இது அவர்களுக்குப் பெரும் சமூக அந்தஸ்தை இப்போதும் கொடுத்தது. காரல் மார்ஸ் வர்ணித்த அந்த சுயதேவைப் பூர்த்தி கிராமங்கள், மேலே மத்திய ஆட்சியில் வேறு சமய ஆட்சியாளர் வந்தாலும் கீழே பிராமணியத்தைத் தக்க வைத்துக் கொள்ள வசதியைத் தந்தது. விஜயநகர சாம்ராஜ்யம், ஒரிசா போன்ற பிராமணிய ராஜ்யங்களும் இருந்தது. அவர்களுக்குப் புகலிடமாக இருந்தன. நகரம், கிராமம் இரண்டிலும் மேலே, கீழே இரண்டிலும் தங்களின் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டிருந்தவர்கள் டில்லியைப் பிடிக்கவும் உரிய காலத்தை நோக்கிக் காத்திருந்தார்கள். ஆனால் நடந்தது வேறு. டெல்லி சுல்தான் ஆட்சி ஆரம்பமானது. அதை பார்ப்பன‌ர்கள் எப்படி சமாளித்தார்கள் என்பது தனிக்கதை. இப்படி முடித்த நூலாசிரியர் அருணன் மூன்றாம் பாகத்தில் ‘முகலாயர் ஆட்சிக்காலத்திய விஷயங்களை விளக்குகிறார். வாசகர்கள் அதையும் படிக்க வேண்டும்.’

இந்த வரலாற்று ஆய்வு நூலைப் படித்து முடித்த பிறகு வாசகனாகிய எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இரண்டு நூற்றாண்டுகள் கோலோச்சிய இஸ்லாமியர்கள் ஆட்சியில் எவ்வளவோ நல்லது கெட்டது நடந்திருக்கலாம். அவ்வாறே இரண்டு நூற்றாண்டுகள் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போதும் எவ்வளவோ நல்லது, கெட்டது நடந்திருக்கலாம்.

ஆனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த இந்திய மண்ணில் பிறவியிலேயே மனிதர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி, தீண்டப்படாதவர்கள் என்ற பட்டம் கொடுத்த ஒரு இழிநிலையை உண்டாக்கி, தலைவிதி, கர்மபலன், முன்பிறவி, பாவம், புண்ணியம், சொர்க்கம் என்றெல்லாம் பொய் சொல்லி வந்து, பெண்ணடிமைத்தனத்தையும் பேணிக்காத்து, பெண்களுக்கும், பஞ்சமர்களுக்கும் படிப்பே கூடாது என விதி வகுத்து, அவர்களுக்கு சொத்தும் கூடாது, சொர்க்கமும் கிடையாது என சொல்லி வைத்து, காலம் பூராவும் ஒரு பெரும்பான்மை மக்களை அடிமையாக, சிந்தனையை சிறை வைத்து, ஆதிக்கம் செய்து வந்த - வருகிற பிராமணியத்தை விட இருநூற்றாண்டு சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் ஆட்சி கொடுமையானதா, ஆங்கிலேயர்கள் ஆட்சி கொடுமையானதா என்று ஒரு இஸ்லாமியர், ஒரு ஆங்கிலேயர் கேட்டால், ஒரு இந்தியன் அல்லது ஒரு தமிழன் என்ன பதில் சொல்வது? பதில் சொல்ல மனம் வலிக்கிறது!

 காலம்தோறும் பிராமணியம் பாகம் II & III , அருணன், வசந்தம் வெளியீட்டகம், மதுரை

Pin It