“புலனற்ற பேதையாய் பெண்ணைச் செய்தால்,

       அந்நிலம் விளைந்த பைங்கூழ்நிலையும் அம்மட்டோ”

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 

மனித உரிமைகள் மீறப்படுவது மிகக் கொடுமையானது. அதிலும் இந்த ஆணாதிக்க உலகில் பெண்ணை ஒரு மனித ஜீவனாகப் பார்க்காமல் இம்சிப்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு நாட்டின் சட்டத்தாலேயே இந்தக் கொடுமைகள் எல்லாம் அங்கீகரிக்கப்படுகிறதென்றால் இதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?

சேக்கினே மொகமதி அஷ்டியானி எனும் பெயர் கொண்ட மாது ஒரு விதவை. வயது 43, இரண்டு பிள்ளைகளுக்கு தாய் (ஒரு மகன், ஒரு மகள்) வேறு ஒருவனோடு தொடர்பு வைத்திருந்தார் என்றும் சோரம் போய் விட்டார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நீதிமன்ற தண்டனைப்படி 99 சாட்டையடி! ஏனோ கருணை மிகுதியால் அதை 100 சாட்டையடியாக ஆக்கவில்லை போலும். அப்படி அடித்துத்தான் அந்த அம்மையார் தவறு செய்துவிட்டதாக ஒப்ப வைக்கப்பட்டது. தொலைக்காட்சியிலும் காட்டி அவர் தன் தவறை ஏற்பதாக சொல்ல வைக்கப்பட்டது. அதோடு முடியவில்லை அந்த இம்சை! 5 ஆண்டுகள் சிறை தண்டனை யும் சுமத்தப்பட்டது. சிறை தண்டனை முடிந்த பிறகு, அவர் வெளியே போக சுதந்திரம் கிடைத்ததா? அதுவும் இல்லை. ஈரான் இஸ்லாமிய மத நீதிமன்றம் அந்த அம்மையைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பும் அளித்துவிட்டது. இங்கு போதிய சாட்சியம் தேவையில்லை. நீதிபதிக்கு குறிப்பிட்ட நபர் தவறு செய்து இருப்பார் என்று தோன்றினாலே தண்டனை கொடுக்கப்படும். அந்த அம்மையார் அப்படி என்ன அநியாயம் செய்து விட்டதாகச் சொல்லப்படுகிறது? யாரோ ஓர் ஆணோடு உறவு வைத்திருந்தார் என்பதுதான். அப்படியே நடந்து விட்டிருந்தாலும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பெரிய தண்டனைகளா? இவ்வளவும் மதத்தின் பேரால் செய்யப்படுகிறது. கொடுமையின் உச்சக்கட்டமாக வேறொன்றும் இருக்கிறது. கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு சொன்ன நீதிபதிதான் முதல் கல்லை எடுத்து அந்தத் தாயின் மீது எறிய வேண்டுமாம்!

அந்தத் தாயின் தோள்பட்டை வரை உடல் மண்ணில் புதைக்கப்பட்டு இருக்க வேண்டும். மார்பகங்கள் மண்ணில் மறைக்கப்பட இந்த ஏற்பாடாம். கல்லால் அடி விழுகிறபோது வலியால் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் கூட திரும்பக் கூடாது என்ற நோக்கில்தான் தோள்பட்டை வரை புதைக்கப்படுகிறார் போலும். ஆணுக்கு இடுப்பு வரைதான் புதைக்கப்படும். ஆண் கல்லடியால் சாகாமல் மீண்டுவிட்டால், முடிந்தால் குழியிலிருந்து தப்பிக்க அவருக்கு உரிமை உண்டு. பெண்ணுக்கு இந்த வகையிலும் தப்பிக்க வாய்ப்பு இல்லை.

இறைத்தூதர் நபிகள் (சல்) எனப் போற்றப்படும் அந்த நாயகர் இஸ்லாமியர் மத்தியில் பெண்களுக்கு எவ்வளவோ உரிமைகள் வழங்கியுள்ளார். பெண்ணுக்குக் கணவனாக வரவேண்டியவன் பிடிக்கவில்லை என்றால் மீறி திருமணத்தை நடத்தி வைக்கக்கூடாது. திருமணம் ஆன பின்னும் இடையில் பிடிக்கவில்லை யென்றால், கணவன் செய்த குற்றங்களைச் சுட்டிக்காட்டி பெண்ணுக்கு பிரிந்து போக உரிமையுண்டு. சொத்தில் உரிமை உண்டு, பெண் மறுமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. இப்படியெல்லாம் உரிமைகள் வழங்கி யுள்ள இஸ்லாம் மதத்தின் பேரால் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன. அதிலும் 21ம் நூற்றாண்டிலும் நடைபெறுகின்றது.

பெண்கள் என்றால் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்க வேண்டும் போலும். மதம் பெண்ணை அடிமைப் படுத்தும் ஓர் அமைப்பு என்று பொதுவாகக் குற்றம் சாட்டப்படுகிறதே அது உண்மைதான். ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்று சொல்லுவார்களே, அது போல் அந்த வல்லார் கள் மதத்தை பொல்லாத முறையில் பயன் படுத்திக் கொள்கிறார்கள். பாதிக்கப்பட்ட அந்த ஈரானிய தாயின் மகன், மகள் இருவரும் தங்கள் தாய்க்கு ஏற்பட்டக் கொடுமை களையெல்லாம் வேறு வழி இல்லாது விழுங்கிக் கொண்டார்கள். ஆனால் சிறையில் 5 ஆண்டுகளைக் கழித்துவிட்டு வந்த அந்தத் தாய்க்கு மீண்டும் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை வழங்கப் பட்டதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஈரான் நாட்டின் ஆகப்பெரிய ளுரயீசநஅந டுநயனநச அயோதல்லா அலி கோமேனிக்கு மக்கள் இருவரும் இறைஞ்சி கடிதம் ஒன்று எழுதினார்கள். கல்லால் அடித்து கொல்லும் கொடிய தண்டனையிலிருந்து தம் தாயை மீட்க வேண்டும் என வேண்டினார்கள். ஆனால் அவரோ நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார். “நீதிமன்ற விவகாரத்தில் தலையிட முடியாது, அப்படித் தலையிடுவது அதன் சுதந்திரத்தை அவமதிப்பதாகும்” என்று கூறி விட்டார். இந்த விவகாரம் அண்டை நாடுகளுக்கெல்லாம் பரவி விட்டது, சர்வதேச பிரச்சனையாகவும் மாறியது. சில நாடுகள் தலையிட்டு, கல்லால் அடித்துக் கொல்லும் கொடுமையைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டன என்பது உண்மை, ஆனால் இந்தியா அப்படி கேட்டுக் கொண்டதா என்று தெரியவில்லை. பிற நாடுகளின் நிர்ப்பந்தத்தால் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நாளைக்கு என்பது தெரியாது, இதற்குள் மதத் தலைவர்கள் குறுக்கிட்டு தள்ளி வைத்தது தவறு, மதத்திற்கு எதிரானது என்று குறுக்கீடு செய்தால் தண்டனை அமலாக்கப்படலாம்.

ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் அளவிற்கு அமெரிக்காவை மிரட்டிக் கொண்டிருக்கும் முன்னேறிய நாடுதான். ஆனாலும் அங்கு, சமூகத்தில் பெண்களின் நிலை முன்னேறவில்லை என்றே தெரிகிறது. இள வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் முடிக்கிற பழக்கம் உண்டு. பிடிக்காத மாப்பிள்ளையென்றாலும் பெண்ணைக் கட்டாயப்படுத்தி முடிக்கும் திருமணம் உண்டு. அந்தப் பெண் பிரிய வேண்டும் என்று முயற்சித்தாலும், அவனை விட்டு பிரிய முடியாது என்ற நிர்ப்பந்தமும் நீடிக்கிறது. இவை யெல்லாம் மதத்தின்பேரால் நடக்கும் மாதர்களுக்கு எதிரான ‘மாண்புகள்.’

ஆனால் சில இஸ்லாமிய அறிவுஜீவிகள் குரானில் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை எல்லாம் சொல்லப்படவில்லை. ஈரான் நாட்டின் சட்டத்திருத்தம் வந்துவிட்டது. பெண் தவறு செய்துவிட்டால் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை நீக்கப்பட்டு விட்டது என்றும் சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி இருந்தும் பின் ஏன் இந்தக் காட்டுமிராண்டித்தனம் நீடிக்கிறது என்று தெரிய வில்லை. அது நிச்சயமாக அதிக அளவு ஆணாதிக்கமுள்ள மதநாடு என்று தெரிகிறது. மதத்தின் பேரால் இதுபோன்ற கொடுமைகள் நடக்கின்றன என்றும் அறிய முடிகிறது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற கொடுமைகள் இல்லை என்ற திருப்தியோடு மேசை மேல் இருந்த ஒரு ஆங்கில வார இதழைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தபோது, என் கண்ணில் பட்ட செய்தி ஒன்று என்னை அதிர வைத்து விட்டது.

ஈரானில் மதத்தின் பேரால் பெண் இனத்திற்கு கொடுமை இழைக்கப்படுகிறது என்றால், இந்தியாவில் சாதியின் பேரால், தீண்டாமையின் பேரால் பெண்கள் அடுக்கடுக்கான அட்டூழியங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாக நடைபெறுகின்றன. உதாராணமாக, மராட்டிய மாநிலத்தில் மும்பை நகரத்தில் நடந்த தீண்டாமைத்தீயின் சுவாலை எவ்வளவு கொடுமை யாகத் தீண்டி காயத்தை உருவாக்குகிறது என்ற செய்தி நம்மையும் எரிக்கிறது.

மும்பையின் ரியோரோடு பகுதியில் புறவழியாக செல்லும் பாதையில் குப்பையும், கூளமும் கொட்டப்பட்டு கிடக்கும் சூழலில் குடிசைகள் கட்டிக்கொண்டு மக்கள் நெருக்கடியில் வாழ்கிறார்கள். அவர்கள் அப்படி ஒன்றும் மேல்சாதி மக்களல்ல. பிற்படுத்தப்பட்ட மக்கள்தான், உழைப்பாளி மக்கள்தான்.

எல்லோர் மனதையும் உறுத்தும் வகையில் ஒரு குறிப்பிட்ட குடிசையில் ஒரு தாய், ஒரு மகன், ஒருமகள் ஆக மூன்று பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கு குடியேறி இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அங்குள்ள மற்றோருக்கு அவர்கள் தலித் என்று அப்போது தெரியாது. மெல்ல மெல்ல மோப்பம் பிடித்து அவர்கள் தாழ்ந்த ஜாதி என்று கண்டுபிடித்து விட்டார்கள். தாழ்ந்து கிடக்கும் குடிசையில் வாழும் இவர்களுக்கு தாழ்ந்த ஜாதி என்றால் பிடிக்கவில்லை.

மற்ற சாதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் சேர்ந்து தொல்லைகள் கொடுத்தார்கள், நாளுக்கு நாள் தொல்லைகள் அதிகமாயின. திடீரென ஒரு நாள் அந்தத் தலித் இளைஞர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டார். அவர் செய்த குற்றம் யாரையோ கற்பழித்துவிட்டாராம். போலி சார் கூறியது அதிர்ச்சியான செய்தியாக இருந்தாலும், தலித் இளம் பெண்ணும் (வயது 22) அவள் தாயும் தைரியமாக தொல்லைகளை சமாளித்தார்கள், குடிசையை காலி செய்து விட்டு வெளியேற முடியாது என்று உறுதியாய் நின்று விட்டார்கள்.

மீண்டும் திடீரென ஒரு நாள் அந்த இளம் பெண் குடிசையிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டு அடி, உதைக்கு ஆளாக்கப்பட்டார். சாதியை கேவலமாகச் சொல்லி துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அதோடு திருப்தி அடையாத அந்த கூட்டம் இளம் பெண்ணின் ஆடைகளை யும் பிடுங்கி எறிந்து விட்டது, அவரை நிர்வாணமாக்கி இழுத்து வந்து சந்துகளில் நடக்க நிர்ப்பந்தித்தார்கள். வழியெல்லாம் ஆண்களும் பெண்களும் கிண்டல், கேலி, செல்போனில் படம் எடுப்பது என ஏகக்கொடூரங்கள் நடந்தன. தடுக்கச் சென்ற தாயும் தாறுமாறாக தாக்கப்பட்டார். இங்கே ஒரு கேள்வி எழுகிறது. தாக்குதலுக்கு உள்ளாகிற தலித் பெண்கள், மேல் சாதியின ரால் தாக்கப்படுவதோடு நில்லாது, ஏன் நிர்வாணமாக ஆக்கப்படுகிறார்கள்? இதன் மர்மம் பெண்ணாக இருப்ப தால் மட்டுமா? அது மட்டுமல்ல, அவர் ஒரு தலித்தாக இருப்பதும் காரணம்.

கீழ்ச்சாதி பெண்ணுக்கு மானம், ஈனம், வெட்கம், நாணம் வேறு தேவைப்படுகிறதா? இந்தக் கீழ்ச்சாதி பெண்ணுக்கு மறைக்க ஆடை வேறு கேட்கிறதா? என ஒரு வகையான சாதி வெறி-வன்மம், ஒருவிதமான வக்ரம் இப்படிப்பட்ட வன்கொடுமைகளைச் செய்யத் தூண்டுகிறது. இந்த அவமானத்தை, அசிங்கத்தை, இழிவை அந்த இளம் பெண்-தலித் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? ஆனால் மேல்சாதி பெண்கள் தன்னைப் போன்ற பெண்ணினம் ஒன்று இப்படி அவமானப்படுத்தப்படுகிறதே என்று எண்ணி துடிக்கவில்லை, மாறாக கைதட்டி குலுக்கி, ஆராவாரம் செய்த கொடுமையைத்தான் பார்க்க முடிந்தது. ஜாதி வெறியின் எல்லை எங்கு எப்போதுமுடியும்? யாரால் சொல்ல இயலும்? ஆனால் “சயீதா குவாசி” என்கிற இஸ்லாமிய மாது - இந்து சாதி வெறி கண்டு துடித்த மாது - தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துணிந்து அந்த தலித் பெண்ணின் உடலை துப்பட்டாவால் மறைத்து, ஆத்திரமாக குரல் கொடுத்துக் கொண்டே குடிசைக்குள் கொண்டு சென்று விட்டார். தலித் மராத்திப் பெண்ணுக்கு உதவிட மற்ற மராத்தி பெண்கள் முன்வரவில்லை.

இன்னொரு இஸ்லாமியர் “சகில் அகமது” என்பவர் ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவர். அவருக்குத் தகவல் தெரிந்து போலிசுக்குத் தகவல் தந்தார். நடவடிக்கை எடுக்கப் போராடினார். அதன் பின்னர்தான் அந்தக் கொடியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட தாயும், போலிஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

போலிஸ் தகவல்படி சாரதா யாதவ் என்ற பெண்தான் தன்னோடு 30 பெண்களையும், சில ஆண்களையும் திரட்டிக் கொண்டு சென்று தலித் பெண்ணை நிர்வாணமாக ஆக்கி, அவமானப்படுத்திட திட்டமிட்டாராம். அவரும், மற்றவர்களும் கைது செய்யப் பட்டுள்ளார்கள். வழக்கு என்ன ஆகும்..? வழக்கப்படி ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்று திடமாக நம்பலாம்.

Pin It