உலகப் புத்தக தினமான ஏப்ரல் 23ம் தேதி திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பல பொதுநல அமைப்புகள் இணைந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை மக்களுக்கு இலவசமாக வழங்கி உற்சாகமாகக் கொண்டாடின. மக்களின் வாசிப்புப் பழக்கத்தைப் பரவலாக்கவும், புத்தக ஆர்வத்தைத் தூண்டவும் உலகப் புத்தக தின விழாவை சிறப்பாகக் கொண்டாட தமுஎகச முடிவு செய்திருந்தது. அதன்படி திருப்பூரில் பொது அமைப்புகள், தனிநபர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. வெள்ளியன்று காலை திருப்பூர் ரயில் நிலையம் முன்பு குமரன் நினைவகம் அருகில் இந்தப் புத்தகங்களை வைத்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

தமுஎகச மாவட்டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர மேயர் க.செல்வராஜ் பங்கேற்று பொது மக்களுக்குப் புத்தகங்களை வழங்கினார். இதில், தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைப்பாளர் மு.நாகேஸ்வரன், முயற்சி மக்கள் அமைப்பின் நிர்வாகி சிதம்பரம், பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி குமாரசாமி, பாரதி சுப்பிரமணியம், கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகி ரத்தினவேல், கனவு இலக்கிய வட்டம் பொறியாளர் விஸ்வநாதன், முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கம்பன் கழகம் ராமகிருஷ்ணன், சைமா பொதுச் செயலாளர் எம்பரர் பொன்னுசாமி, சூர்யா ஜூவல்லர்ஸ் சுகுமார், ஆர்.ஏ. ஜெயபாலன், கலை இலக்கியப் பேரவை சார்பில் பெரியப்பன் ஆகியோர் பங்கேற்று மக்களுக்கு ஆர்வத்தோடு புத்தகங்கள் வழங்கினர்.

இத்துடன் திமுக மாமன்றக் குழுத் தலைவர் ச.பழனிச்சாமி, காங்கிரஸ் சார்பில் பாலசுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் கே.காமராஜ், என்.கோபாலகிருஷ்ணன், பி.ராமமூர்த்தி மற்றும் தமுஎகச நிர்வாகிகள் டி.எம்.ராசாமணி, பி.ஆர்.கணேசன், இ.அங்குலட்சுமி, ரவீந்திரன், தாண்டவக்கோன், சந்தானம், கோவை சதாசிவம், வேலா இளங்கோ, நிதர்சனா, துரைசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், நதிகள் மைதிலி, மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெண்கள், குழந்தைகள், சாலையோர வியாபாரிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் என பல்வேறு தரப்பினரிடமும் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அனைத்துத் தரப்பினரும் இன்ப அதிர்ச்சியோடு புத்தகங்களைப் பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்வு ஒரு கோடைத் திருவிழா போல் மக்கள் வரவேற்பைப் பெற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஏப்ரல் 23 புத்தகதினத்தன்று நெல்லையில் 4 மையங்களில் புத்தகக் கண்காட்சி நடந்தது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கமும் பாரதிபுத்தகாலயமும் நெல்லை டவுனில் புத்தக கண்காட்சியும், பிடித்த புத்தகங்களை பெரிய பேனரில் பதிவு செய்யும் விழாவும் நடந்தது. சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் துவக்கி வைத்தார். எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், கிருஷி, செய்தலை மணி, பாமணி, பொன்னையன், ஒவியர்கள் செல்வம், வன்னிநாயகம், ராகேஷ் மற்றும் வெங்கடாசலம், ராஜகோபால், சண்முகம் உள்ளிட்டு பலரும் கலந்து கொண்டனர். புத்தக தினத்தன்று கலெக்டர் வளாகத்தில் நடைபெற்ற மையத்தில் ரூ.5000-கிற்கும் மேலாக புத்தங்கள் விற்றன

Pin It