நால்வருணம் என்பது இந்தியாவில் பிராமண மதம் என்கிற வேத மதத்தின் உயிரோட்டமான கொள்கையாகும். அதை எதிர்த்து இயக்கம் கண்டவர் முதலில் புத்தர்; அடுத்து தமிழகத்தில் கி.மு.31-இல் தோன்றிய திருவள்ளுவர். அவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பட்டாங்கமாகச் சொன்னார். ஆனாலும் நாளாவட்டத்தில் ஒவ்வொரு ஆட்சிக்காரராலும் நால்வருணம் காப்பாற்றப்பட்டது.

இசுலாமியர்கள் இந்தியாவில் 600 ஆண்டுக் காலம் ஆட்சி புரிந்தனர். அவர்கள் தங்கள் மதத்தைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என நினைத்து, இந்துக்கள் நால்வருணங்களாகவே பிரிந்து கிடக்க அனுமதித்தனர்.

இந்தியாவை கி.பி.1600 முதல் 1947 வரை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டனர். அவர்கள் இந்துச் சட்டங்களைப் பாதுகாத்தார்கள்; நடைமுறைப்படுத்தினார்கள்.

அடுத்து, வெள்ளையன் வெளியேறிய பிறகு, காங்கிரசுக் கட்சியினர் இந்து மதப் பாதுகாப்பு, இந்திப் பாதுகாப்பு, வருணாச்சிரமப் பாதுகாப்பு இவற்றை நோக்கமாகக் கொண்டு, 6.12.1946 முதல் 26.11.1949 வரை 1080 நாள்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றினர்.

அச்சட்டத்தில், பாகம் 3 என்பது “அடிப்படை உரிமைகள்” பற்றியது. அதில் விதி 13(3) (a) உட்பிரிவில், “சட்டம் என்பது ஒரு அவசரச் சட்டம், ஆணை, துணைவிதி, ஒழுங்குமுறை ஆணை, அறிவிக்கை, வழக்கச் சட்டம் அல்லது பழக்கச் சட்டம் என்கிற பேரால் இந்திய எல்லைக்குள் நடப்பில் இருக்கிற சட்டமாகும்” என்றும்;

அதேபோல் அதன் (b) உட்பிரிவில் ““Law in Force” “நடப்பில் உள்ள சட்டம்” என்பது, “இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர், சட்டமன்றத்தாலோ அல்லது தகுதி வாய்ந்த அதிகாரத்தாலோ செய்யப்பட்ட சட்டத்தைக் குறிக்கும். அச்சட்டம் இதற்கு முன் நீக்கப்படாமலோ அல்லது இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடப்பில் இல்லாமலோ இருந்தாலும் அச்சட்டத்தைக் குறிக்கும்” என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

அதாவது, பழைய பழக்கச் சட்டம் - வழக்கச் சட்டம் என்பவை இன்றும் - அதாவது இந்த அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த பிறகும் செல்லு படியாகும் என்பது பொருளாகும்.

அதேபோல் விதி 372(3)(b) உட்பிரிவில், இதே கருத்து (Explanation-1) “விளக்கம்” என்கிற தலைப்பில் குறிக்கப்பட்டுள்ளது.

மேலே கண்ட அரசமைப்புச் சட்ட விதிகளின்படி, தென்னாட்டில் பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு. தென்னாட்டில் பார்ப்பனர் 3 விழுக்காடு மட்டுமே.

வட இந்தியாவில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நால்வருணங்கள் இன்றும் உண்டு.

பார்ப்பனன் பிறப்பினாலேயே பார்ப்பனன் (A Brahmin is born) ; மதகுரு ஆகத் தகுதி, படிப்புத் தகுதியினால் அல்ல - என்று இன்றும் சட்டத்தில் உள்ளது. இந்த அநீதி 2500 ஆண்டுக்காலமாக உள்ளது.

எப்படிப் பாதுகாப்பாக உள்ளது?

மனுநீதி, இந்துக்களை நான்கு வருணங்களாகப் பிரித்தது. அதை மற்ற சாத்திரங்களும் ஒத்துக்கொண்டன.

அதன்படி, வடஇந்தியாவில் உள்ள இந்துக்கள் எல்லோரும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு வருணங்களாகவும்; தென்னிந்தியாவில், கலியுகத்தில் பரசுராமன் படையெடுத்து சத்திரியர், வைசியர் ஆகிய இரு பிரிவினரைக் கொன்றுவிட்டதால், கலிகாலத்தில் எஞ்சியிருப்பவர்கள் பிராமணர், சூத்திரர் மட்டுமே என்பதும் இன்றைக்கும் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

வடநாட்டில் பிராமணன் மட்டுமே உயர்ந்தவன்; தென்னாட்டிலும் பிராமணன் மட்டுமே உயர்ந்தவன் என்று சட்டப்படி உள்ளது. உலகத்தில் கிறித்தவம், இசுலாமியம் மற்றும் பல மதங்களில் இப்படிப்பட்ட பிறவி உயர்வு, தாழ்வு இல்லை.

பிராமணன் (அ) மதகுரு பணி என்ன?

“பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்கள் தங்களது சுப, அசுப சடங்குகளுக்குத் தங்களை விடப் பிறவியில் உயர்ந்த வகுப்பார் என்கிற எண்ணத்தின் பேரில் வேறு வகுப்பாரைக் கொண்டு செய்து கொள்ளுவதில், நாமே நம்மைத் தாழ்ந்த வகுப்பார் என்று ஒப்புக் கொள்வதாயிருப்பதாலும் - இவ்வித மனப்பான்மையே நமது சுயமரியாதையை அழிப்பதற்கு ஆதாரமாயிருப்பதாலும், இனி இவ்வழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

(அ) “இந்துக் கோவில்களில் இந்துக்கள் என்று சொல்லப்படுகிற எல்லா வகுப்பினருக்கும் பிரவேசத்திலும், பூசையிலும், தொழுகையிலும் சமவுரிமை உண்டென்று” இம்மாநாடு தீர்மானிக்கிறது.

மேலே கண்ட தீர்மானங்கள் மதுரையில் 1926 திசம்பர் 25, 26 நாள்களில் நடைபெற்ற ‘பார்ப்பனரல்லாதார் 10ஆவது மாகாண மகாநாடு’ சுயமரியாதைக் கொள்கைக்கு, முதன்முதலாக வடிவம் கொடுக்க இயற்றப்பட்ட தீர்மானங்கள். இவையே பார்ப்பன விலக்கம் பற்றிப் பெரியார் நமக்குக் கூறியவை.

இசுலாம் மதத்தில் மவுல்வி என்று இருக்கிறார். அவர்தான் இசுலாமியர்களுக்கு வேண்டிய வீட்டுச் சடங்குகளையும், மசூதிச் சடங்குகளையும் செய்கிறார். அவர்கள் பிறவியினால் ‘மவுல்வி’ என்கிற தகுதிகள் பெறுவதில்லை; அரபிக் கல்லூரியில் ஒரு முஸ்லிம் பெறும் மதப் படிப்பினால் மட்டுமே ‘மவுல்வி’ என்கிற தகுதி பெறுகின்றார்; பிறவியினால் அல்ல.

அதேபோல், கிறித்தவர்களும், இறையியல் கல்லூரி என்கிற கல்லூரியில் சான்றிதழ்ப் படிப்பு, பாதிரி, பிஷப் ஆகிய பட்டப்படிப்பு ஆகிய படிப்புகளைப் பெறுவதனால், மதச் சடங்குகளைக் கிறித்தவர்கள் வீட்டிலும் மாதாக் கோவில்களிலும் செய்யும் மதகுரு தகுதியைப் பெறுகிறார்கள்; பிறவியினால் அல்ல.

பார்ப்பனர் மட்டும் வேதம் படிக்கப் பல இடங்களில் வேத பாடசாலைகள் உள்ளன, அங்கு படிப்பதால், அவர்கள் குறிப்பிட்ட சடங்குகளுக்குப் பார்ப்பனர்கள் வீடுகளுக்குச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட படிப்பாளிகளுக்குச் ‘சாஸ்திரிகள்’ என்று பெயர்.

தந்தை பெரியார் அவர்கள், 1926 முதல் 1973 வரையில் 47 ஆண்டுகள், அவரே ஊர் ஊராகப் பயணம் செய்து சுய மரியாதைக் கொள்கைகளைப் பரப்புரை செய்தார்; பயிற்சி வகுப்புகள் நடத்தினார். போராட்டங்கள் நடத்தினார்.

தந்தை பெரியார் செய்த அதே பணியை நாம் வலுவாகச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான், வருகிற 05.01.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி; சுயமரியாதை மாநாட்டுக்கு முதன்மையளித்து நடத்துகிறது.

05.01.2020 முற்பகலில் சிந்தனையாளன் 2020 பொங்கல் சிறப்பு மலர் வெளியீட்டுக்கும் மற்றும் மாநாடுகளுக்கும் விளம்பரங்களும் நன்கொடைகளும் திரட்டி அளிக்குமாறு அன்போடும் பணிவோடும் கட்சித் தோழர்களையும் தமிழ்ப் பெருமக்களையும் உளமார வேண்டுகிறேன்.

சூத்திரர் விடுதலைக்குத் தடையாக, இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உள்ள விதிகள் 13(3), 372(3); பழைய சட்டங்களைக் காப்பாற்றும் விதி 25, விதி 395 (கடைசி விதி) ஆகியவை உள்ளன.

இவை அரசமைப்புச் சட்டத்திலிருந்து அடியோடு நீக்கப்படும் வரையில், நாம் தமிழர்கள்-இந்தியப் பார்ப்பனர் அல்லாதார் எல்லோரும் இழிசாதி மக்கள்தான் என்பதை உணர வேண்டும்.

- வே.ஆனைமுத்து

Pin It