மென்ஷெவிக்குகளும் சோசலிஸ்டு வாதிகளும் பாட்டாளிவர்க்க அரசை ஏற்க மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மேதினத்தின் எழுச்சியோடு தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு அவர்கள் போயிருப்பதை வரலாறு மன்னிக்காது -லெனின் (1925)
‘சர்வதேச தொழிலாளர் தினம்’ என்று நாமெல்லாம் போற்றுகின்ற மேதினம் ‘சர்வதேச’ தொழிலாளர் தம் உரிமைகளைப் பேணிக்காக்கும் தினமாக ஒரு எண்பது நாடுகளில் மட்டுமே அனுசரிக்கப்படுவதைப் பார்க்கிறோம். உலகமயமாதலின் உச்சகட்ட நெருக்கடியின் விளைவாக இன்று உலகப் பாட்டாளி வர்க்கம் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகளுக்கு அளவே இல்லை. எட்டுமணிநேர வேலை எனும் ஒற்றைக் கோரிக்கைக்காக 1886-ல் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் கூடிய 25000 தொழிலாளர்களின் சரித்திரப்புகழ்மிக்க மாபெரும் எழுச்சிப்பேரணியின் மீது முதலாளியம் கட்டவிழ்த்து விட்ட கொடிய வன்முறைகளில் மாண்டு உயிர்த்தியாகம் செய்தவர்கள், எண்ணிலடங்கா.
கொடுங்கோன்மையை அனுபவித்து 1887-ல் தூக்கிலிடப்பட்ட மாவீரர்களான ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்த் ஸ்பைஸ், அடொல்ஃப் பிஷர், ஜார்ஜ் ஏஸ் செல்ஸ் உட்பட யாரையும் மனித சமுதாயம் தான் உள்ளவரை மறக்காது. 1889ல் பாரீசில் கூடிய சர்வதேச பாட்டாளிவர்க்கப் பிரதிநிதிகள் மே முதல் நாளை சிவப்பு தினமாக தொழிலாளர்தினமாக அறிவித்தவுடன் உலகமெல்லாம் அதை தோழர்கள் அங்கீகரித்தினர் ஆனால் அமெரிக்க வல்லரசு செப்டம்பர் ஐந்தை அரச அடிப்பொடிகளின் தொழிலாளர் தினமாக 1886முதல் 1950கள் வரை கூட தொடர்ந்து கொண்டாடி உலகப் பாட்டாளி வர்க்க எழுச்சியை கேலி செய்தும் அதை ஒடுக்கிட பலவிதமான நெருக்கடிகளும் கொடுத்தும் வந்தது; ஆனால் அதுபலிக்காமல் 1958 -ல் அதிபர் எய்சனோவர், மே ஒன்றாம் தேதியை அமெரிக்க விசுவாச தினமாக (Loyalty Day) அறிவித்து அரசு விடுமுறை ஆக்கியதையும் இதையெல்லாம் மீறி உலகத்தொழிலாளர்தினம் எழுச்சியோடு அனுசரிக்கப்படுவதையும் காண்கிறோம்.
1891 முதல் 1919 வரை நடந்த தொழிலாளர் போராட்டங்கள் எட்டுமணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டுமணிநேர பொழுது போக்கு எனும் தமது நீண்ட நாளைய கோரிக்கையை உலகமெங்கும் சாதிக்க இன்னமும் கூட இயலாத பல துறைகளில் இருக்கவே செய்கின்றன. இந்தியாவில் 1923-ல் சென்னையில் தோழர் சிங்காரவேலர் தொடங்கிய எழுச்சி ஆங்கிலேய அரசை மேதின விடுமுறை மற்றும் எட்டுமணிநேர வேலை ஆகியவற்றை நோக்கி நிர்பந்தித்ததைப் பார்க்கிறோம். பலநாடுகளில் மேதினத்தை தொழிலாளர் வர்க்கம் அனுசரிப்பதிலிருந்தும் கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காக போராடுவதிலிருந்தும் திசைதிருப்பிட பல விதமான சதிகளை ஏகாதிபத்திய அரசுகளும் சர்வதேச எஜமானர்களும் செய்து வருவதைப் பார்க்கிறோம். தொலைக்காட்சிகளின் பலவிதமான நவீன விடுமுறை கேளிக்கைகளிடமிருந்தும் திசை திருப்புதல்களிடமிருந்தும் மீண்டு உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒற்றை அடையாளமாக மேதினத்தைப் பாதுகாத்து தக்கவைத்து அதனை மக்களுக்கான போராட்டங்களுடனும் உக்கிரமான எழுச்சிகளுடனும் அனுசரிப்போம். மேதின வாழ்த்துகள்.