இந்தக் கதையைப் பலமுறை சொல்லியாகிவிட்டது. ஆனால் அதற்குள் சொல்லத்தெரியாத ஏதோ ஒன்று எஞ்சி நின்றுவிடுகிறது. முதல் காதலை எப்படி ஒருவரால் சரியாக புரிந்துகொள்ளவோ பின்னர் அதைத் துல்லியமாக நினைவுகூரவோ முடியாமல்போகிறதோ அப்படித்தான் இதுவும் என்று தோன்றுகிறது. எல்லா முதல் காதலையும்போல எனது முதல் புத்தகமும் எனக்கு எதிர்பாராமல் வந்து சேர்ந்தது.

manushyaputhiran_351எழுத்தாளனாவது இளம்பருவத்துக் கனவு என்பதைவிட குழந்தைப்பருவக் கனவு என்று சொல்லலாம். வறட்சியான சுமை மிகுந்த பாடப்புத்தகங்களால் மனம் கசந்து பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியேறிய ஒரு நாளில் கதைகளின் உலகத்திற்கு, சொற்களின் வசீகரத்திற்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தேன். காமிக்ஸ்கள், பேய்க் கதைகள், மாயாஜாலக் கதைகள், வாரப்பத்திரிகைகளின் தொடர்கதைகள் என்று விதிவிலக்கில்லாமல் படித்தேன். ஒரு நாள் ’மூக்குத்தி’ இதழ் எப்படியோ கைக்குக் கிடைத்தது. அது ஏற்படுத்திய பதட்டம் இப்போதும் நினைவில் இருக்கிறது. வாண்டுமாமாவிலிருந்து லஷ்மி என்ற பெயரில் எழுதிய திரிபுர சுந்தரிக்கும் அங்கிருந்து 13 வது வதிலேயே சுஜாதாவுக்கும் நகர்ந்து விட்டேன்.

மு.மேத்தா வெகுசன கவிதை இலக்கியத்தில் கோலோச்சிய காலம் அது. ’கண்ணீர்ப் பூக்கள்’ இளைஞர்களின் கையில் ஒரு அடையாளமாக இருந்தது என்பதை இன்றைய ஒரு இளைஞனால் நம்பவோ புரிந்துகொள்ளவோ முடியுமா? காலம் எவ்வளவு வேகமாக நகர்ந்துவிடுகிறது. அப்போது வைரமுத்து ஒரு புயல்போல உள்ளே நுழைந்தார். அவரது திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசிய கீதம், கவிராஜன் கதை முதலான தொகுப்புகளில் வெளிப்பட்ட அவரது மொழி ஆளுமை எனது இளம் மனதில் பெரும் வசீகரத்தை உருவாக்கியது. அவையே நான் கவிதைகள் எழுதவிரும்பியதன் முதல் முன்மாதிரிகள். இப்படித்தான் இன்னும் எத்தனையோ பேர் அப்போது உள்ளே வந்து காணாமல் போனார்கள் அல்லது அங்கேயே நின்றுவிட்டிருந்தார்கள்.

நான் ஆரம்பத்தில் புனைகதைகள் எழுதவே முயற்சித்தேன். அப்போது ’ அரசி’ என்ற ஒரு தனிச்சுற்று இதழ் எப்படியோ எனக்கு வந்தது. அது பேனா நண்பர்களுக்கான ஒரு பத்திரிகை. அதில் நட்பு நாடும் பலருடைய முகவரிகள் அவர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கும். ஒரு நாள் அதில் என்னுடைய பெயரும் வந்தது. யார் யாரோ பேனா நண்பராக இருக்க விரும்பி கடிதங்கள் எழுதினார்கள். அது எப்படி என்று எனக்குப் புரியவே இல்லை. கட்டுக் கட்டாக எனக்குக் கடிதங்கள் வருவதைப் பார்த்து என் வீட்டில் குழம்ப ஆரம்பித்தார்கள். இப்போதைய இணைய குழுமங்களின் முன்னோடி இத்தகைய பேனா நண்பர்கள் வலைப்பின்னலே என்று தோன்றுகிறது. அந்தப் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் நான் அனுப்பிய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. பரிசுத் தொகை 25 ரூபாய். ஆனால் கதை எழுதுவது எனக்கு ஒத்துவரவில்லை. அதற்குத் தேவையான புற உலக கச்சாப் பொருட்கள் போதுமான அளவில் என்னிடம் இருக்கவில்லை. அப்போதுதான் வைரமுத்து, மு. மேத்தாவின் தாக்கத்தில் கவிதைகள் எழுத முயற்சித்தேன்.

1983 ல் ஒரு நாள் கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘ நீங்கள் எழுதும் வாசகர் கடிதங்கள் மிகவும் கவித்துவமாக இருக்கின்றன. நீங்கள் கவிதைகள் எழுதுவீர்களா? என்று கேட்டு. அப்போது அந்தக் கடிதம் தந்த மனக் கிளர்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் பெயரே இல்லை. முதல் அங்கீகாரம். அப்போது ஒன்றிரண்டு வரிகளைத் தவிர நான் கவிதை என்று குறிப்பிடும்படி எதையும் எழுதியிருக்கவிலை. அதையே அவருக்கும் பதிலாக எழுதினேன். அவர் மீண்டும் எழுதினார். ‘உங்களால் கவிதைகள் எழுத முடியும்..தொடர்ந்து எழுதுங்கள்’ என்று. அந்த வார கல்கண்டில் ஜூனியர் பதில்களில் ‘உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்’ என்ற ஒரு கேள்விக்கு ‘ சுஜாதா , வைரமுத்து என்று பதிலளிப்பேன் என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள்.. இப்போது எனக்குப் பிடித்த எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயர் கொண்ட எஸ். அப்துல் ஹமீது என்ற வாசகர்தான்’ என்று எழுதினார். ஒருவர் அந்தக் காலத்தைய என் வாழ்வின் தனிமை, இயலாமை, ஏக்கங்களின் ஊடாகத்தான் இந்த வார்த்தையின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு நோட்டுப் புத்த்கத்தை எடுத்து என் இளம் மனதை அப்போது ஆக்ரமித்துக்கொண்டிருந்த எண்ணங்களை எழுத ஆரம்பித்தேன்.

ஒரு மாதத்தில் சொற்களின் போதவெளியில் கரைந்து நான் எழுதிய கவிதைகளை அவருக்கு அனுப்பினேன். உடனே அதை மணிமேகலை பிரசுரத்தில் புத்தகமாக்க ஏற்று கடிதம் அனுப்பினார். அடுத்த சில நாட்களில் லேனா தமிழ்வாணன் என்னைத் தேடி துவரங்குறிச்சி வந்தார். அப்போது அவர் ஒரு நட்சத்திர எழுத்தாளர் அல்லவா? வீட்டில் அவரைப் பார்க்க கூட்டம் கூடிவிட்டது. லேனா நான் எப்போதும் அமர்ந்திருக்கும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து எனது முதல் புத்தகத்தின் அட்டைப்படத்தின் டிசைனை எடுத்துக் காட்டினார். நீலக் கடலில் சூரியோதயம் நிகழும் காட்சி. ’மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்’ என அதில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கணம என் வாழ்வில் வேறொரு காலத்தைத் துவக்கி வைத்தது. அப்போது எனக்கு 16 வயது பூர்த்தியாகியிருக்கவில்லை.

முதல் புத்தம் வந்த நாளில் என் அம்மாவின் கண்ணீரைப் பார்த்தேன். அவள் அதைப் புரிந்துகொண்டாள். புத்தகம் வெளிவந்தபிறகு கிட்டத்தட்ட 300 கடிதங்களுக்கு மேல் எனக்கு வந்தன. எத்தனை விதமான மனிதர்கள் கவிதைகள் படிக்கிறார்கள் என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. அதில் சிலர் என் நெருங்கிய நண்பர்களாகவும் அமைந்து நான் இப்போது வந்து சேர்ந்திருக்கும் இடத்திற்கான திறவு கோல்களைத் தந்தார்கள்.

இனி ஒரு முறை எனது முதல் புத்தகத்தை எழுதவே முடியாது; அந்த கனவை, நம்பிக்கையை, பரவசத்தை அடையவே முடியாது என்று தோன்றுகிறது.

 

Pin It