sterlite firingசுடுடா சுடு

நிராயுதபாணிகளை
நெஞ்சுக்கு நேராகச் சுடு
குண்டுகள் வீணாக்காமல் சுடு
பத்துக்குண்டுகளுக்குப்
பத்துப்பேர் விழவேண்டும்

முதலில் ஆகாயத்திற்கு நேரே சுடவேண்டியதில்லை
முதலில் மூட்டுக்கு கீழே சுடவேண்டியதில்லை
கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வேண்டியதில்லை
வீண் செலவுகளைத் தவிர்க்கவேண்டும்
துப்பாக்கியை நெஞ்சுக்கு நேரே உயர்த்து
நாங்கள் சாகப்பிறந்தவர்கள்
மக்கள் வாழ்வதற்காகச் சாகப்பிறந்தவர்கள்

சுடுடா மறுபடி சுடு
குருவிகளைச் சுடுவதென்றால்கூட
குறிபார்க்கவேண்டும்
மிருகங்களைச் சுடுவதென்றால்கூட
மறைந்து காத்திருந்து சுடவேண்டும்
மக்களைச்சுட எதுவுமே தேவை இல்லை
எதிர்த்து நிற்பவர்கள் நெஞ்சில்
ஈய ரவைகளைச் செலுத்து
அவர்கள் அதைப் புரிந்துகொள்வதற்குள்
தம் நெஞ்சில் வழியும் குருதியைக்கண்டு
அவர்கள் வியக்கும்படி
அத்தனை விரைவாய் சுடு

மக்கள் நச்சுக்காற்றை எதிர்த்துப்போராடினார்கள்
கேன்ஸரை எதிர்த்துப்போராடினார்கள்
கருவிலிருக்கும் தம் குழந்தைகள்
ஊனமடைவதை எதிர்த்துப்போராடினார்கள்
எளிய மக்கள் தாங்கள் நஞ்சாகக்கப்படுகிறோம்
என்று அறிந்த நாளில் தெருவுக்கு வந்தார்கள்
பின்னர் அவர்கள் வீடு திரும்பவே இல்லை
இப்போது துப்பாக்கிக்குண்டுகளால்
அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது

ஒரு பதினேழு வயதுச் சிறுமி
ஒரு அறுபட்ட புறாவைப்போல
ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள்
இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள்
எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கின்றன

திறந்த கண்களுடன்
ஒரு இளைஞன் கைகளை விரித்தபடி
வீழ்ந்துகிடக்கிறான்
அவன் மனைவி மார்பில் விழுந்து கதறுகிறாள்
அவள் நெற்றியில் துப்பாகிக் குருதி
குங்குமம் போலப் பரவுகிறது
இப்படித்தான் நீதி கேட்கப்படுகிறது

இந்த அந்தியின் வெளிச்சம்
குருதிவண்ணத்தில் இருக்கிறது
இந்த அந்தியின் காற்றில்
குருதியின் உப்புக் கரிக்கிறது

பத்துப்பேர் இறந்துவிட்டார்கள்
இன்றைய இலக்கு நிறைவடைந்ததா?
திரும்பிச்செல்லுங்கள்
உங்கள் முதலாளிகள்
இன்றிரவு நிம்மதியாகக் குடிப்பார்கள்
உங்களுக்கு ஆணை பிறப்பித்தவர்கள்
இன்றிரவு நிம்மதியாகப் புணர்வார்கள்

ஊரில் பத்துவீடுகளில்
சாவின் அதிகாரம் நிரம்பியிருக்கிறது
பத்துச் சவ ஊர்வலங்கள் ஒரே நேரத்தில்
கிளம்புகின்றன
மக்கள் மனம் சிதறி அழுகிறார்கள்
இயலாமையுடன் சாலைகளை மறித்து
லத்தியால் அடிவாங்கி ஓடுகிறார்கள்

மக்களை இன்னும் எப்படி
அச்சுறுத்துவதெனெ
வேட்டை நாய்கள்
ரகசியமாகக் கூடிப்பேசுகின்றன
பத்துப்பேரைக் கொல்லும் அளவு
தனக்கு அதிகாரம் இருப்பதைக் கண்ட தலைவன்
அந்தரங்கக் கிளுகிளுப்புடன்
நீலிக்கண்ணீர் வடிக்கிறான்

நமது காலம் நெருப்பில் நீந்துகிறது
நமது காலம் கண்ணீரில் நீந்துகிறது
நமது காலம் குருதியில் நீந்துகிறது

அடுத்த வெடியோசைக்கு மக்கள்
காத்திருக்கிறார்கள்
தங்களை
ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்

எதற்கு என்று கேட்காதீர்கள்
மக்கள் தங்களை வன்மத்துடன்
ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்

Pin It