நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி
இரவீந்திரநாத் தாகூர்
தமிழில் முனைவர் ப. ஆறுமுகம்,
பூம்புகார் பதிப்பகம்,
சென்னை- 108
பக்: 138 | ரூ. 55
1921-ல் இரவீந்திரநாத் தாகூர் (டாகுர்?) தனது கீதாஞ்சலி எனும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு நோபல் பரிசு பெற்றார். ஒரு வங்காள படைப்பாக இருப்பினும் ஆங்கிலத்தில் W.B.ஈட்ஸ் எனும் கவிஞரின் முன்னுரையோடு ஆங்கில இலக்கியப் பேருலகை அது அடைந்தது. பலரும் நினைப்பதுபோல கீதாஞ்சலி ஒரு கவிதை நூல் அல்ல அது ஒரு இசைப்பாடல்களின் தொகுப்பு.
இப்பாடல்களை தனது தெய்வத்தை நோக்கி தாகூர் பாடி இருக்கிறார் அவற்றை வங்காளிகள் இசையில் பிணைத்து பிசைந்து பாடிமகிழ்ந்தனர்.
பலமுறை இப்பாடல்களை தமிழில் மொழிபெயர்க்க முயற்சி நடந்துள்ளது என்றாலும் நமது மண்ணின் விடுதலைக்கவி... எமக்கு தொழில்கவிதை, நாட்டுக்கு உழைத்தல். இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்று முழங்கிய பாரதியுடனும், இன்னும், தாயுமானவர் மாணிக்கவாசகர் என விரிந்து பரிபாடல் (சங்க இலக்கியம்) வரை ஒப்பிட்டு விரிவாக பொருளுரை யாரும் செய்யவில்லை. அந்த மட்டில் முனைவர் ப. ஆறுமுகம் பல இடங்களில் கச்சிதமாய் நமது தமிழ்மண்ணின் கவிதைகளோடு தாகூரை ஒப்பிட்டு உணர்ந்து நமக்கு சொல்லிச் செல்கிறார். பாடல்கள் வரவர ஆங்காங்கே அடிக்குறிப்புகளில் அந்த ஒப்பீட்டை செய்திருப்பது புதுமைதான்.
மேற்கித்திய நாகரிகத்தின் இயந்திரதனத்தை தாகூர் வன்மையாக தன் பாடல்களில் சாடுகிறார். இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பு W.B.ஈட்ஸ் கீதாஞ்சலிக்கு எழுதிய முன்னுரையை மொழிபெயர்த்துள்ளமை ஆகும். அதில் தாகூரைப் பற்றிய கீ.ஙி. ஈட்ஸ் முழுமையாய் அறிந்து உள் வாங்கி பாராட்டியுள்ளமை பலரை வியப்பில் ஆழ்த்தும். ஆனால்W.B.ஈட்ஸின் என்னுரையை மொழி பெயர்க்கும் நூலாசிரியர் இடையில் தனது சேர்க்கையாக திருவாசகத்தை வைப்பதும், தாகூர் நோபல் பரிசு ஏற்புரையில் ஒரு திருக்குறட்பாவை நுழைப்பதும் மொழிபெயர்ப்பு நியதிகளுக்கே உலைவைப்பதாகும்.
வாசிப்பின் போது நெருடுவதாகவும் உள்ளது. தாகூர் வங்காளத்தின் கவி மட்டுமல்ல. நமது தேசியகவி. மனித வேற்றுமைகளைக் களைந்து, சமதர்மத்தை உலகில் நிலைநாட்ட கிழக்கின் அக்னிவிதைகளை மேற்கே தூவ விழைந்த செங்கனல். நாள் முழுவதும் அவர்கள் எனக்கு வழிகாட்டினர் என்று மக்கள் பெருந்திரளைப் பார்த்து விளிக்கின்ற பாங்கை அவரது கவிதைகளில் பார்க்கிறோம்.