கடற்கரையோரம் ஒரு நடைப்பயணம்

த.வி.வெங்கடேஸ்வரன்

புக்ஃபார்சில்ரன், சென்னை - 18

பக்: 40 | ரூ. 10/-

கடற்கரை என்பது புவியின் திறந்தவெளி ஆய்வுக்கூடமாகும். கிளிஞ்சல்கள், சிப்பிகள் முதல் நண்டுகள் வரை நம்மை கவரும் விஷயம் ஒன்றா இரண்டா. அப்படிப் பட்ட அந்த கடல்வெளியில் ஒரு குழந்தையாக நடந்து தேடி ஒரு விஞ்ஞானியாக பல விஷயங்களைப் பதிவு செய்து இந்தப் புத்ததகத்தை உருவாக்கி தந்துள்ளா£ர்

த.வி. வெங்கடேஸ்வரன்.

நூற்றுக்கணக்கான சிப்பிகள், சங்குகள், கிளிஞ்சல்கள், பர்னிக்கிள்கள், நட்சத்திரமீன்கள், கடல்முள்ளெலி, கூம்பு ஓடுகள், சோழிகள் ஸ்குய்டுகள், நண்டுகள் என ஓரு பிரம்மாண்ட உலகை வெறும் நாற்பது பக்கத்தில் அடைக்க முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கணவாய் மீன்கள் என்று விரியும் ஆராய்ச்சி நாம் அதிகம் பார்திருத்திராத முள்ளம்பன்றி மீன் வரை விரிந்து ஒரு புதிய உலகையே நம்முன் நிறுத்தும் இந்த நூலை வாசிக்கும் இளம் விஞ்ஞானிகள் மறுமுறை கடற்கரைக்கு போகும் போது கட்டாயம் புதியதேடலை தொடங்கி வாழ்வின் புதிய சகாப்தத்திற்கு வழிகோலுவார்கள். விஞ்ஞானி ஃபிரட் பென் தந்து உதவியுள்ள படங்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவசியம் மாணவ மாணவியர்கள் வாசித்து மகிழ வேண்டிய நூல் இது.

வேதியியல் கதைகள்

பேரா. மோகனா

வெளியீடு புக்ஸ் ஃபார் சில்ரன்,

சென்னை-18 | பக்: 80 | ரூ. 35/-

பேராசிரியை மோகனா அறிவியல் நூல்களை தமிழில் மிக எளிய மொழியில் அனைவரும் வாசிக்கமுடிந்த நேசமிக்க சொற்களால் படிப்பதில் கைதேர்ந்தவர். மிக சிக்கலான அறிவியலின் நெட்டி முறிக்கும் கோட் பாட்டியலைக் கூட மிக சாதாரணமாக நமது அன்றாட வாழ்வின் நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதி நாம் அனைவருமே எளிதில் அவற்றைப் படித்து பயன் பெற எழுதும் தோழமை கொண்ட எழுத்து  அவருடையது.

வேதியியல் என்றால் ஏதோ சமன்பாடுகள் குடுவைகள் தொழிற்சாலைவேலை, என நினைப்பதே இயல்பு ஆனால் வேதியியலையும் கதையாக தரமுடியும் என்பதை பார்க்கிறபோது வியப்பாக இருக்கிறது. களி மண் முதல் இன்றைய கூடங்குளம் வரை வேதியியலின் சுருக்கமான வரலாறு மூலம் தொடங்குகிறது. புத்தகம், வேதியியல் என்பது நாம் நுகரும் மணம், உண்ணும் உணவு சுவாசிக்கும் காற்று உடுத்தும் உடை... முகப்பூச்சு முதல் சோப்பு வரை எல்லாம் தான் அனைத்தின் ரகசியங்களையும் வேதியியல் கதைகள் புட்டுபுட்டு வைக்கின்றன.

நிலக்கரி, பாஸ்பரஸ், மத்தாப்பூ, பட்டாசு முதல் வைரம் வரை எதையுமே இந்தப்புத்தகம் விட்டுவைக்க வில்லை. அடுப்பங்கரையிலிருந்து அணுஉலை வரை 14000 பயன்பாடுகள் கொண்ட உப்பை அறிமுகம் செய்யும் விடுகதை பாணி குழந்தைகளை ஈர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாராசெலஸ் துத்தநாகத்திற்கு ஸிங்க்என பெயரிட்டதிலிருந்து டீத்தண்ணியை நிறமாற்றும் அந்த எளிய சோதனை வரை இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் முக்கிய முயற்சி இந்தப்புத்தகம் வேதியியல் ஆசிரியர்கள் அவசியம் ஒரு பைபிளாக கருதி வாசிக்க வேண்டிய சிறுவர்களை சென்று அடையவேண்டிய பொக்கிஷம் இந்நூல் என்பதை இதை வாசிப்பவர்கள் கட்டாயம் ஒப்புக்கொள்வார்கள்

- புத்தகம் பேசுது ஆசிரியர் குழு

Pin It