Pandit iyotheeவரலாறைத் தேடிச் செல்லும் போது, பல திடுக்கிடும் செய்திகள், நம்மை நம் எண்ணத்தைத் தூரத்து தேசத்தில் தொலைய வைத்து விடுகின்றன. தெரியாதவைகள் தெரிய வரும்போது எண்ணியிருந்த இருப்புகள் சுக்கு நூறாக வானிலிருந்து விடிந்த புத்துருவமாக மிளிர்வதை வரலாறுகள் மெய்பிக்கின்றன. வான்வெளியில் தெரியவரும் மரம் மண்ணுலகிற்குள் வேறு வடிவம் தாங்கி நிற்கின்றன. சரித்திரம் அறியப்படாத புதையுண்டு கிடக்கும் மர்மங்களைத் தன்னகத்தே கொண்டது. அதையறிய வரலாற்றுக் கண் தேவைப்படுகிறது.

மதங்களின் வரலாறு பல திருப்பு முனைகளைக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் காலங்காலமாய் ஒன்றிலிருந்து ஒன்றை அந்த ஒன்றிலிருந்து வேறோன்றைச், சாயங்களையும் அடித்தளத்தையும் மாற்றி மாற்றி உலவ விட்டுள்ளனர் என்பதை உணர முடிகின்றது. மாயைத் தன்மை கொண்ட உலகப் பொருட்கள் தன்னளவில் மாறும் தன்மை கொண்டதே. அதே போல் மதம் குறித்தான நம்பிக்கையும், வழிபாட்டு முறைகளும் பல மாற்றங்களைப் பெற்று வந்துள்ளதை மத வரலாறுகள் பூரணமாய் விளக்குகின்றன.

இதனை ஒத்து பெளத்தசமய வழிபாட்டுக் கூறு குறித்துப் பண்டிதர் அயோத்திதாசர் தென்னிந்திரர் தேச புத்ததர்ம சாட்சியக்காரர்களில் ஒருவளாகிய அம்பிகையம்மன் வரலாறு பல மாற்றங்களைப் பெற்று வேறு வடிவம் தாங்கி நிற்பதை இந்நூலில் தாங்கொணா துயருடன் விளக்குகிறார்.

பார்த்தன் என்பவர் எழுதிய "அம்பிகா தன்மம்" எனும் மூல நூலைக் கொண்டு, சிலம்பு, மணிமேகலை, குண்டலகேசி, பெருந்திரட்டு, சீவக சிந்தாமணி, வீரசோழியம், பிங்கல நிகண்டு, சூளாமணி, சித்தர் ஞானவெட்டியான் பாட்டு ஆகிய நூல்களிலிருந்து குறிப்புகளைச் சான்று காட்டி இவ்வரலாற்றுத் தர்க்க நூலைப் படைத்துள்ளார் பண்டிதர்.

பண்டிதர் காலச் சொல்லாட்சி கூற விழைந்த கருத்தின் மெய்யுணர்த்தப் பெரிதும் பயன்படுகிறது. அம்பிகையம்மனின் கதை விளித்துக் கூறும் போது சிறந்த ஆய்வாளாராகச் சொல்கிறார். சிறந்த ஆய்வாளராகப் பலயிடங்களில் கொண்டுகூட்டிச் சாட்சிக்கு இலக்கியம் பகர்ந்து தம் கருத்தினைப் பலப்படுத்துகிறார். நூல் இறுதியில் மதப் பிறழ்ச்சிகளைக் கூறும் பொழுது நாளடைவில் அடைந்த மாற்றங்களுக்கான காரணம் இதுவாக இருக்கிறது என்பதை நிரூபிக்கத் தர்க்கவாத அடிப்படையில் பலமாகத் தர்க்கம் செய்து மூதலிக்கிறார்.

உதாரணமாகக் காளிதேவி வரலாறு, கன்னிகாபரமேஸ்வரி வரலாறு போன்றவை. தம் ஆழ்ந்த சித்த வைத்திய அறிவினையும் இக்கதையினூடே பதிவு செய்கின்றார். பிறமதக் காழ்புணர்ச்சியின்றி கூறும் கருத்தை ஆழமாக அதே நேரம் மென்மையாக உரைக்கின்றார். உதாரணமாக, “இன்னம் சிலர் அம்மனை நாட்கள் மெய்யாகத் தொன்றுதொட்டு புஜித்து வருகிறோம் என்பார்கள். ஆனால், அம்மன் புத்த சுவாமியை சிரசிலேந்தியதின் காரணமறிவார்களா? அப்படியறிந்திருந்தால், இவர்கள் அம்மனைப் பூங்கரகமாக ஜோடித்துத் தங்கள் சிரசிலேந்தி தெருவில் திரிவார்களா? இல்லை” என்கிறார்.

புத்தசமய அம்மனின் வெவ்வேறு திருப்பெயர்களைச் சைவ, வைணவ சமயங்கள் தங்கள் சமய அம்மனின் பெயர்களாக எவையவற்றை எடுத்துக் கொண்டன என ஒரு வரிசைப் பெயர்களையும், புத்தசமய அம்மனின் பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அப்பெயர்க் காரணம் ஏன் வந்தது என்பதற்கான விளக்கத்தையும் திறம்பட விவரித்துள்ளார். புத்தமதக் கோட்பாடுகளிக்கு மாறான ஒன்று பலியிடல்.

இது மததின் தன்மைகளை உருக்குலைய மாற்றார் ஏற்படுத்திக் கொடுத்த மாயவலையாகும். இவ்வகையில் இனியும் விழாதீர் என உரக்க முழக்கமிடுகிறார். கடைசியாக, "அம்மன் துறவறத்தில் நின்று போதித்த உண்மையையும்,அம்மன் கைக்கொண்டிருந்த புத்ததருமத்தையும் நாம் கைப்பற்றுவதே அம்மனைத் துதிப்பதாகும்." என்கின்றார்.

இனி, நூல் கருத்திற்கு வருவோம். அம்பிகையம்மன் புத்த சமயம் தமிழகத்தில் வேரூரின்றி அனைவரும் பின்பற்றிக் கொண்டிருக்கும் தருணத்தில் தோன்றிய பெண் தெய்வம், வாழும் காலத்திலேயே தெய்வமாக வாழ்ந்தவள். யாவராலும் போற்றிப் பாரட்டப்பெற்று வணங்கப்பட்டவள். அவள் இறந்த பொழுது அழுது புலம்பி ”என்றும் எங்கள் குடும்பத்தைக் காக்க வேண்டும்”, ”எங்கள் குலதெய்வமாக என்றும் இருக்க வேண்டும்” என வாழ்ந்த போதும் இறந்த பொழுதும் வேண்டப் பட்டவள்.

கண்ணகி, காளி ஆகிய இருவரும் தெய்வமாக்கப்பட்டதன் பின்னணி வேறு. இவர்கள் இறந்த பின்னர் இவர்கள் வாழ்வில் நடந்த சோக நிகழ்வுகளின், வீர நிகழ்வுகளின் அடிப்படையில் தெய்வமாக்கப்பட்டவர்கள். வாழும்போதே தெய்வமாதலும் மக்களால் இறந்த பின் தெய்வமாக்கப்படலும் வேறு வேறாகவே அமையும்.

இதை மக்களாகிய நாம் இந்த வேறுபாட்டை உணர வேண்டும். ஆனால்? நடப்பது. முன்னவளை பின்னவர்களோடு ஒப்புமை கொண்டு வழிபாட்டில் முறையற்றவைகளைச் செய்து பெரும் குழப்பத்தோடு வழிபாடு நிகழ்த்திகின்றனர். இதனைப் பண்டிதர் உணர்த்த விழைகிறார். உண்மை தெரியாதவர். இதை மாறாகப் புரிந்து கொண்டவர் திரும்பட்டும். வாருங்கள் மீண்டும் புத்த மதம் நோக்கி எனக் கூவியழைக்கிறார்.

புத்த மடாலயங்களை எவ்விதம் பிற்காலத்தவர் உருமாற்றினார்கள். புத்த வழிபாட்டு முறைகள் எவ்விதம் உருமாறின. கோயில்களிலுள்ள விக்கிரங்கள் எவ்வாறு மாறின என்ற தகவல்களும் மிகத் தெளிவாக நூல்கள் மூலம் சான்றளிக்கப் பெற்றுள்ளன.

இன்று, உலக நாடுகளிலுள்ள மாரியம்மன் கோயில்களில் நடத்தப்படும் விழாக்கள், வழிபாடுகள் புத்த மத அம்பிகையம்மன் வழிபாட்டின் எச்சமாகவே உள்ளன என்பதைத் தெள்ளத் தெளிவாக இந்தநூல் வழி அறிய முடிகின்றது.

ஆடிமாதம் கூழ்வார்த்தல், சாம்பிராணிப் புகை, வேப்பிலைத் தோரணம், கூட்டு உணவு போன்ற பலவற்றின் ஆதி தோற்றம் புத்தமத அம்பிகையம்மன் வழிபாட்டின் மூலமே ஏற்பட்டது.

ஐம்பது மொழிகளில் ஆயிரம் மில்லியன் பிரதிகள் விற்ற ஜேக்கப் கிரிம் நூல் போல் அம்பிகையம்மன் வரலாறு நூலும் உலகளவில் வெளிவந்திருக்க வேண்டும். சமயப் பூசல்களாலும், சமயப் பொறையாலும் இந்த நூல் மறைக்கப் பெற்றுள்ளன. அம்மன் வழிபாடு திரிக்கப்பட்டுள்ளன. இந்த வழியே பிரதானமாகக் கொள்ளப்படுகின்றன எல்லோராலும். இந்தக் கீழ்மை நிலைகண்டே பண்டிதர் "கேட்டுக்குப் போகும் வாசலைத் திறந்து கொண்டவர்கள்" என மனம் பதைபதைக்கிறார்.

மனிதர்கள் உன்னதமான மதக்கருத்துக்களை மற்றும் இறைவனை ஏற்க வேண்டும். என்பதை இந்த நூல்வழி பண்டிதர் அயோத்திதாசர் உணர்த்துகிறார். அவ்வகையில் புத்தமார்க்கம் தூய்மையும் உண்மையும் நேர்த்தியும் கொண்ட மார்க்கமாக உள்ளது. இந்த மார்க்கத்தையும், இறைவியான அம்மன் போதனைகளையும் பின்பற்ற வேண்டும்.

(பண்டிதர் அயோத்திதாசரின் 'அம்பிகையம்மன் வரலாறு' நூல் புத்தமத வரலாற்றைச் சாட்சிகளுடன் விவரிக்கும் ஒரு நூலாகும். தமிழகம் புத்தமதத்தைப் பின்பற்றிய பொழுதுகளில் வழக்கத்திலிருந்த சடங்கு சம்பிராதாயங்கள் மற்றும் அறிவியல் சார்ந்து நடைமுறையிலிருந்த வழிபாட்டுச் சிந்தனைகள் இன்று அவை மாறி எவ்விதம் வந்துள்ளன என்பதைக் கூறும் வரலாற்றுப் பதிவு இந்நூலாகும்.)

பாரதிசந்திரன்

Pin It