தீவிரமான கதை சொல்லியாக அடையாளப்பட்டிருக்கும் காமுத்துரை தனது நான்காவது சிறுகதைத் தொகுப்பான ‘நாளைக்குச் செத்துப் போனவன்’ என்ற புத்தகத்தில் அன்றாட மனிதர்களைக் கருப்பொருளாக எடுத்து தன் பார்வைக்கு வெளியே நம்மிடம் ஓர் உரையாடலுக்காக ஒப்படைத்துவிட்டு மௌனமாக விலகி விடுகிறார்.

இக்கதைகளில் வரும் மனிதர்களைச் சந்திக்காதவர்கள் இப்பூவுலகில் இருக்க வாய்ப்பில்லை. இவர்களின் வாழ்வு எத்தனை சமூகக் கற்பிதமான இயங்குவெளியில் பூட்டப்பட்டு ஓலமிடுகிறது என்பதை இவ்வளவு சிறிய நூலில் சம்பவங்களாக அவர் வரித்து வைக்கும் போது நமது வாழ்நிலத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டி விட்டதைப் போன்ற உணர்வு நமது மனதில் நிழலாடுகிறது.  இவர்களுடன்தான் நமது இருப்பும் வாழ்வும் இணைந்து கிடக்கிறது.  அல்லது இவற்றில் ஒருவராகத்தான் நிஜவாழ்வில் நம்முடைய இயக்கம் இருக்கிறது.

அனைத்துக் கதைகளிலும் காணப்படும் உரையாடல் தன்மை காமுத்துரையின் கதைகளுக்கு மிகப் பெரும் நம்பகத்தை உண்டாக்குகின்றன. அத்தோடு நிஜ உலகத்தின் மீதான விமர்சனங்களையும் நமக்குள் எழுப்புகின்றன. பெருந்தொழில்கள், விவசாயசந்தைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், கூலி உழைப்பு எனப் பெருகி வரும் நமது வாழ்விற்கிடையே இவற்றைச் செப்பனிடும் சிறு, சிறு அடிப்படைத் தொழிலாளிகள் மேலும் குறைந்த கூலிகளைப் பெற்று தங்களது ஜீவனத்தை நடத்திவரும் இவர்களின் பொருளாதாரச் சிக்கல் நம்மை ஒரு மன நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.

ஆனாலும் அவற்றுக்கான அவர்களது தவிப்புகள், சகிப்புத் தன்மைகள், நெளிந்து கொடுத்து வாழ்வதற்கான தகவமைப்புகள். அதற்கான மன ஏற்புகள். மீறல்கள் போன்றவை மிக முக்கியமாக இத்தொகுப்பில் எழுப்பப்பட்டிருப்பதை சிறப்பம்சமாக நாம் முன் வைக்கலாம். முறைசாராதொழிலாளர்கள் அல்லது பாட்டாளிகளின் வாழ்வியல் சம்பவங்கள், சலனங்கள் அவர்களது மொழியிலேயே இந்த அளவிற்கு சிறுகதையாய் ஆகி இருப்பது வியப்புத் தருவதோடு இவற்றுடன் சமூகத்தெருக்களில் நாமும் உலாவி ஊடுறுவித் திரிந்து வந்த அனுபவத்தையும் உண்டாக்குகிறது.

கொத்தனார் குருசாமி போல பன்னீர்ப் புகையிலை போட்டுக் கொண்டு சிருங் காரத்துடன் மைனரைப் போல பெண்களை வசக்கி தன் சம்பாத்தியத்தின் ஊடாக அவர்களை பாலியல் உறவுக்கு வசியப் படுத்தி, கைவிட்டு விடும் போக்கையும் கண்டிருக்கிறோம்.

ஆனாலும் அத்தனை அவமானத்திற்கும் வெளியே தனக்கு ‘பொம்பளப்பட்சி’ இருப்பதாகக் கைரேகை காட்டித் திரியும் இத்தகைய கதாப்பாத்திரங் களை காமுத்துரை மிக அருமையாக நமக்குப் பிடித்துக் காட்டுகிறார், இப்படியாக சமையல்காரர், ஜோஸ்யக்காரர், தண்ணீர் வண்டி அடிப்பவர், கொத்தனார், தோட்டம் துரவு காவல் பார்ப்பவர், மனநிலை பிறழ்ந்த ஒரு கிராமத்து பையன், சோப்புடன் திரியும் நிலக்கிழார்கள், தாழ்த்தப் பட்டவரின் மன வறுமை, மனைவியை இழந்த கூலிக் குடும்பத்து தியாகத் தந்தை, மின் தொழிலாளி, சிறு குழந்தைக்கு தகப்பன் என பலரின் நடத்தைகள் யாவும் ஏதாவது ஒரு பெண் உறவில் இரத்தமும் சதையுமான சமூக இருப்பாய் உழல்வதை, ஆண் ஜ் பெண்ணின் அடிப்படைப் போராட்டங்களாக அல்லது மரபுகளை மீறிய மாற்று இயங்கியல் தன்மையாக கண்டுபிடித்திருப்பது இக்கதைகளின் இன்னொரு சிறப்பு எனலாம்.

களரி, ரௌத்திரம்கொல், தெருவோரத்து தேவதைகள், இறங்கிப் போகிறவர்கள், தனிமரத்தோப்பு, ஆகியவன், சுமதியும் அப்பாவும் போன்ற கதைகளில் உள்ளியங்கும் வாழ்வியல் அவதானங்கள் தமிழ் யதார்த்தக் கதைகளில் ஊடுறுவியிருக்கும் புதிய வெளிகளை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. சிறுமி சுமதியின் பிடிவாதமும், நிலைமைக்குத் தகுந்த வாத்சல்யமும், அவளது தந்தையைப் போலவே நம்மையும் உலுக்குகிறது. இஸ்லாமிய இல்லத் திருமண விருந்தில் தன்பிள்ளைகளை நினைத்து கறித்துண்டுகளை பாலீத்தீன் பையில் கொண்டு செல்லும் ஒருவரின் நடத்தை நமது மக்களின் எளிய ஆசைகளையும். அன்பையும் இயலாமையையும். பற்றாக்குறைகளையும் படிப்பவர் மனதை சலனம் கொள்ள வைக்கிறது,

அடிப்படைத் தொழிலாளிகள் மற்றும் கீழ்மத்தியதரக் குடும்பங்கள் இன்றைய நவீன சந்தைப் பொருளாதாரத்தின் கீழ் எப்படி அவதியுறுகின்றன என்பதோடு அவற்றின் சிதைவாக்கமும், மாற்று தகவமைப்புகளும் கதைசொல்லியால் நமக்கு கச்சிதமான வடிவத்தில் கிடைத்து விடுகிறது.  இக்கதைகளைப்  படிக்கும்போது நமக்குள் ஏராளமான கேள்விகளும், பதில்களும், விடுகதைகளும், புதிர்களும், விடைகளும் கிடைத்து ஒருவித நகர்ச்சியும், கடந்து போதலும் (Transformation Pass over )தோன்றுகிறது.

இத்தகைய வாழ்வில் பொருளாதாரம் மட்டுமன்று. கலாசாரம், காமம், பசி போன்றவை வகிக்கும் இடங்கள் ஒரு மௌனப்புரட்சியாக சலனமுறுவதை அனுமானிக் கிறோம். அத்தனை இலகுவான உரையாடலை கதாப்பாத்திரங்கள் வாயிலாக நம்மிடமே எழுப்பும் காமுத்துரையின் அசலான வாழ்வியல் மொழி யதார்த்தக் கதைகளுக்கு இன்னும் வலிமை சேர்த்து அதன் மூலமான மாற்றங்களையும். நோக்கங்களையும் இலக்கியமாக மேலும் மனிதமையின் சமகாலப் பிரச்சனைக்களுக்கான உரையாடலாகவும் கிடைத்திருப்பது அபூர்வமானது.

எந்த ஒரு கதையாடலும் அதன் கட்டமைப்பை மீறி மொழியில் சிக்கனத்தை கொண்டு புரிதலிலும். உணர்த்துலிலும் ஏராளமான விவரணைகளை நமக்குத் தந்துவிடும் போது. நமக்கு புதுமைப்பித்தனின் ஆளுமைகள் இன்னும் தொடர்வதாக ஒரு வாசிப்புக்கிளர்வு தோன்றுகிறது.  ஓர் எழுத்தாளர் எவற்றை எழுதுகிறார் என்பதை மீறி அரசியல் தளத்தில் எவரின் பிரதிநிதியாக நிற்கிறார் என்பது இன்றைய சமூக யதார்த்தத்தின் நடைமுறைப் பிரச்சனையாக அதுவே கலையாக இருக்க வேண்டியது அவசியம்.  அவ்வகையில் காமுத்துரையின் எழுத்துகள் இன்றைய சமூக இருப்பை முரண்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கிறது.

காமுத்துரையின் அனுபவம் என்பது தனது நிலத்தில் நீண்டகாலம் வாழ்ந்து பார்த்த ஒரு முதியவரின் மூன்றாவது பார்வையாக அவ்வளவு முதிர்ச்சியுடன் நம்மை வசீகரிக்கிறது.  ஒருவகையில் வாழ்க்கையை நம் கரம் பிடித்து ஒப்படைக்கவும் செய்கிறது.  டால்ஸ்டாயின் கதைகளில் வரும் பாத்திரங்களைப் போல அவ்வளவு வாழ்வியல் திருப்பங்கள். சிலசமயம் இவரே நிலக் கிழாராகவும், மைனராகவும், கடன் கேட்டு நிற்கும் சமையல்காரனாகவும் பெண்களுடன் எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் வாயாடியாகவும் இருந்திருப்பாரோ எனவும் நம்மை எண்ண வைக்கும் அளவிற்கு கிராமத்திய, தந்திரங்கள் சாமர்த்தியங்கள் கலந்த கதை தொகுப்பாய் மொழி நடையில் சாதித்திருக்கிறார் ஆசிரியர்.

அடித்தட்டு இருப்பில் அடையாளப்படுத்தப்படும் நாவிதர் கூட சிரைக்க மறுக்கும் ஒரு தாழ்த்தப்பட்டவரின் கதையானது, வாழும் மனிதரையெல்லாம் அவமானத்திற்கும் வெட்கத்திற்கும் உள்ளாக்கும் ஒருபடைப்பு.  அந்த தலித் மனிதனின் கிடைமட்டமான பார்வையில், சமூகத்தின் அத்தனை ஏற்றத்தாழ்வுகளும் சதிராட்டம் போடுகின்றன.  சகமனிதன் மீதான பல நூற்றாண்டுப் பிரச்சனைகளை ஒரு சமூகம் எப்படி சொரணையற்று தன்மயமாக தன்னை பாவித்துக் கொள்கிறது என்பது அம்மனிதனின் வார்த்தைகளிலேயே இறுதியில் வெளிப்படுவது. மனதைப் பிசைவதான நிகழ்வு.  தொகுப்பில் எனக்கு உறுத்தலான மிகவும் பிடித்த கதை இது.

இதுபோன்ற நுட்பமான விவரிப்புகள் இவரது அனைத்துக் கதைகளிலும்  காணப்படுகிறது. போரடிக்காத, புலம்பல்கள் இல்லாத அல்லது கதையின் கட்டுமானத்தை முன் கூட்டியே உணர்ந்து விட முடியாத உரையாடல்கள், தொகுப்பு, குவிமையம் மற்றும் உரையாடலுக்கு இடையே எங்கோ ஒரு புள்ளியில் துவங்கிவிடும் கதை போன்ற அம்சங்கள் மட்டுமன்றி எளிய வாழ்வின் தத்துவார்த்தசாரங்களையும் படைப்பாளி அநாசயமாக முன்வைக்கிறார்.

காமுத்துரையின் மற்ற மூன்று தொகுப்புகளையும் நான் வாசிக்கவில்லை என்றபோதும், இந்நூலின் வழி அவரின் சமூகப்புரிதல், அரசியல் பார்வை அதன் வட்டாரச் சிக்கல்கள் போன்றவற்றின் கதைப் பரப்பை அறிந்து கொள்ள முடிந்தது.  நிலவுடமை மற்றும் சிறு தொழில் வகைச் சமூகத்தில் உழன்று கொண்டிருக்கும் பல கோடி மனிதர்களின் எதிர்காலம் இன்றைய பெரும்  மூலதனச் சமூகத்தில் எவ்வாறு துடித்துப் பதறி, தன் கலாசாரத்தை மனஅழுத்தங்களாக ஏற்று கிடக்கிறது என்பதற்கு இத்தொகுப்பு நல்ல உதாரணம்.

நாளைக்குச் செத்து போனவன் கதைதான் எதிர்காலத்திற்கும், பொதுமனித சந்தர்ப்பவாதங்களுக்கும் இடையே மறைந்திருக்கும் அவல இருப்பு அல்லது இன்றைய நிகழ்காலமும் கூட, குறைசொல்ல ஒன்றுமில்லை! படிக்க வேண்டிய சிறுகதைகள்! அறிய வேண்டிய மக்களின் உரையாடல்கள்! மாற்றிக் கொள்ள வேண்டிய சிந்தனைகள்.! இக்கதைகள் ஒரு சமூகத்தின் உள்விவகாரங்கள்! சித்தாந்தங்களை இவற்றின் மீது அரசியலாக கட்ட வேண்டிய நவீன வெளியை முக்கியமாக நாம் அறிமுகம் செய்து கொள்கிறோம். மிக அழகான அட்டையுடன் வாசிப்பதற்கு எழுத்துப் பிழைகளின்றி , சிந்திப்பவர்களுக்கென வசதியாக வடிவமைத்திருக்கும் பாரதி புத்தகாலயத்திற்கும், இம்மாதிரி படைப்புகளை மேலும் எழுதி சமூகத் தூண்டல்களை தரவேண்டி ஆசிரியருக்கும் நமது வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்ளலாம்.

- ப.தேவேந்திர பூபதி

Pin It