ஸ்பெக்ட்ரம் ஊழல், தேர்தல் கால கூட்டணி குழப்பங்கள், கிரிக்கெட் ஜூரம் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு முன் நிற்கிறது ஜப்பானில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கமும், சுனாமியும். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவற்றின் பாதிப்பு இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பாதிப்பாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இந்த சுனாமி உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது என்பது உண்மையே.
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேஷியா, சிலி, பெரு, மெக்ஸிகோ, பிஜி, ஹவாய், தாய்லாந்து, தைவான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும், முன்னறிவிப்பும் விடப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவிலும், ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவிலும் பதிவாகியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் நான்கு ரயில்கள் காணாமல் போயிருக்கின்றன. சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு சென்ற சுனாமி துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3000 கார்களையும் அடித்துச் சென்றது. பெரும் பொருட்சேதத்தையும் ,உயிர்சேதத்தையும் நிகழ்த்தியிருக்கிறது ஜப்பானின் நிலநடுக்கம்.
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு.1177 இல் நேர்ந்துள்ள ஓர் பூகம்பம் சீன வரலாறுகளில் பதிவாகியுள்ளது! ஐரோப்பாவின் வரலாற்றில் பண்டைய நிலநடுக்கம் ஒன்று கி.மு.580 ஆண்டில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது! 1556 ஆம் ஆண்டில் சைனாவின் ஷான்ஸி மாநிலத்தில் நேர்ந்த மாபெரும் பயங்கரப் பூகம்பத்தில் 830,000 மக்கள் மாண்டதாக அறிய வருகிறது! பசிபிக் பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.
உலகில் 100,000 நபர்களுக்கு மேல் மரணமடைந்த ஒன்பது பூகம்பங்களில் ஆறு நிலநடுக்கம் சைனாவில், இரண்டு ஜப்பானில், ஒன்று இந்தியாவில் நிகழ்ந்தவை! மக்கள் திணிவு மிக்க, மனித எண்ணிக்கை உச்சமான சீன தேசத்தில்தான் அதிகளவில் பூகம்பத்தால் மாண்டு போயுள்ளார்கள். நிலநடுக்கச் சக்தி யூனிட் அளவுக்கு மடிந்த மக்களின் எண்ணிக்கையை ஒப்பு நோக்கின், மத்தியதரைப் பிரதேச நிலப்பரப்புக்கு அடுத்தபடி இடம் பெறுபவை: ஈரான், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இந்தியா, மத்திய ஆசியா, சைனா, டெய்வான், ஜப்பான், தென்னமெரிக்கா ஆகிய நாடுகள்.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் நியுசிலாந்த், சீனா, ஜப்பான், கலிபோர்னியா, இந்தோனிஷியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி சில நிமிடங்கள் வந்து போகிற நிலநடுக்கம் பெருத்த பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் விளைவித்துவிடுகிறது. பூமியின் எங்கோ ஒரு பகுதியில் நிகழும் இயற்கை பேரழிவுகளான நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, கனத்த மழை மற்றும் செயற்கை பேரழிவுகளான இனஒழிப்பு, அணுகுண்டு சோதனை, இராணுவத் தாக்குதல், பொருளாதாரத் தடை ஆகியவை உலகையே மிரட்டுவது மட்டுமின்றி பாதிப்புக்குள்ளாக்கவும் செய்கின்றன.
ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் இயற்கை பேரழிவானது உலக நாடுகளின் பொருளாதரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜப்பானின் பேரழிவு பங்குசந்தைகளில் மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் வளமிக்க நாடுகளான லிபியா, எகிப்து, சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை போதாதென்று, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும் சேர்ந்து கொண்டு ஆசிய பங்குச்சந்தைகளை ஒருகை பார்த்திருக்கின்றன. இதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது.
எட்டு பேர் குழு எனப் பொருள் தரும் ஜி8 (G8 - Group of Eight) என்பது உலகில் அதிக ஆலைத் தொழில் முன்னேற்றம் அடைந்த குடியரசு நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், ஐக்கிய இராச்சியம், (1975 வரை ஜி6), கனடா (1976 வரை ஜி7) மற்றும் ரஷ்யா (எல்லா நடப்புகளிலும் பங்கு கொள்வதில்லை) ஆகியவை இந்தக் குழுவில் உள்ள நாடுகளாகும். ஆண்டு தோறும் இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் அனைத்துலக அதிகாரிகள் பங்கு கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் உச்சி மாநாடுகள் ஜி8-இன் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சப்பானின் பாதி ஆற்றல் தேவை பெட்ரோலியத்தின் மூலமும் ஐந்தில் ஒரு பகுதி நிலக்கரி மூலமும் 14% இயற்கைவளி மூலமும் பெறப்படுகிறது. அணு மின்சாரம் நாட்டின் கால் பங்கு மின்தேவையை ஈடுசெய்கிறது. சப்பானில் சாலைப்போக்குவரத்து நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 1.2 மில்லியன் தொலைவிற்கான நல்ல சாலைகள் இடப்பட்டுள்ளன. சுங்கச்சாலைகளும் பயன்பாட்டில் உள்ளன. 12-க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிறுவனங்கள் உள்ளூர், வெளியூர் தொடர்வண்டி வசதிகளை அளிக்கின்றன. பெருநகரங்களை சின்கான்சென் (புல்லட் ரயில்) ரயில்கள் இணைக்கின்றன. சப்பானிய ரயில்கள் நேரந்தவறாமைக்குப் பெயர்பெற்றவை.
பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பான் சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுகிறது. டோக்கியவை தலைநகராக கொண்ட ஜப்பான் 6800 தீவுகளைக் கொண்டது. இதில் ஹொக்கைடோ, ஹொன்ஷு, ஷிகொக்கு, கியூஷு ஆகியவை நான்கு முக்கிய தீவுகளாகும். சப்பானில் 173 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நகரிடைப் போக்குவரத்திற்கு வானூர்தி விரும்பப்படுகிறது. ஆசியாவின் சந்தடி மிக்க வானூர்தி நிலையமான அனீதா நிலையம் சப்பானிலேயே உள்ளது. யோகோகாமா, நகோயா துறைமுகங்கள் ஆகியன பெரிய துறைமுகங்கள் ஆகும்.
இப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சென்டாய் நகரமே மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜப்பானில் நிலநடுக்கம் வர இருக்கிறது என்பது தெரிந்திருந்தும் இவ்வளவு பெரிய பாதிப்பு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி என்பதால் அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்தான். ஆனால் இந்தமுறை நிலநடுக்கத்துடன் சுனாமியும், தொடர் நில அதிர்வுகளும் சேர்ந்து கொண்டதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 13000 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 8199 ஆகவும் உயர்ந்திருக்கும் வேளையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது.
எப்போது நிலநடுக்கம் வரும் என்று கணித்துச் சொல்வதற்கு என தனியாக இணையதளமும் இருக்கிறது. இது உலக நாடுகளில் எந்தெந்த நாட்களில் எவ்வளவு ரிக்டர் அளவுகோலில் வந்திருக்கிறது? எங்கு வர வாய்ப்பிருக்கிறது என்பதைச் சொல்கிறது. கடந்த வாரத்தில், கடந்த நாட்களில், கடந்த ஒரு மணி நேரத்தில் என்று உலகநாடுகளில் வந்த சிறு நிலஅதிர்வையும் பதிவு செய்கிறது. இந்த இணையதளத்தில் எந்த நாட்டையும் குறிப்பிட்டு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். http://earthquake.usgs.gov/
இந்நிலநடுக்கத்தால் அணுஉலைகள் அதிகமுள்ள ஜப்பானுக்கு மேலும் பல புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன. புகுஷிமா அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் நிலநடுக்கம் மற்றும் சுனாமியிலிருந்து தப்பியவர்களை சிரமத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தொடர்ந்து அணு உலைகள் வெடித்ததில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியிருக்கிறது ஜப்பானிய அரசு. அணு உலைகளை குளிரூட்டும் பணி தொய்வடந்ததை அடுத்து அணு உலைகளை புதைக்கலாம என்ற கோணத்திலும் ஜப்பான் யோசித்து வருகிறது. இந்த கதிர்வீச்சின் தாக்கம் அமெரிக்காவிலும் இருப்பதாக தெரிகிறது. அணுஉலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டிருப்பதால் யுரேனியம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி யுரேனியம் வேண்டுபவர்கள் தங்களிடம் கேட்கலாம் என்று கூறியிருக்கிறது.
இலங்கையை கதிர்வீச்சு தாக்கும் அபாயம் இல்லை என்ற செய்தி நிம்மதி அளித்தாலும் ஆகப் பெரும் கவலை இலங்கைக்கு இருக்கிறது என்பதே உண்மை. ஏனெனில் இலங்கைக்கு உதவும் நாடுகளில் ஜப்பான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இலங்கையிடம் இருந்து ஜப்பான் 8.3 மில்லியன் தேயிலையை சென்ற வருடம் வாங்கியிருந்தது. இந்த வருடம் ஜப்பானின் நிலைமை இறக்குமதியைக் கேள்விக்குள்ளக்கியிருக்கிறது. இந்த ஆண்டு இலங்கை அரசு ஜப்பானிலிருந்து ஒரு லட்சம் சுற்றுலாப்பயணிகளை கொண்டு வர திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
அங்கு இருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பத் தயாராகி வருகின்றனர். ஜப்பான் பிரதமர் நேட்டோகான் மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசி வருகிறார். அவரின் செயல்பாடுகள் அரசு இணையத்தளமான http://www.kantei.go.ஜப் மூலம் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனுக்கதிர்வீச்சின் அபாயம் இருக்கலாம் என்று ஜப்பான் பொருட்களை இறக்குமதி செய்ய மற்ற நாடுகள் யோசித்து வருகின்றன. இதனால் தொடர்ந்து ஜப்பானின் நிலையை உடனடியாக அதன் தாக்கத்திலிருந்து பொருளாதார ரீதியில் மீட்க முடியாத சூழல் ஒருபுறமிருப்பினும் உலக நாடுகள் பொருளாதார ரீதியில் உதவ முன் வந்திருக்கின்றன.
1945க்குப் பிறகு ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களும் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான பின் சில வருடங்களில் பொருளாதாரத்தில் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்ட ஜப்பான் உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆனால் இந்த ஆண்டு நிகழ்ந்த இயற்கைப் பேரழிவானது அவர்களின் ஏற்றுமதியையும், இறக்குமதியையும், உற்பத்தியையும் கடுமையாக பாத்திருக்கின்றது, மக்கள் தொகையில் உலகின் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஜப்பானில் ஒருபகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் மற்ற பகுதி மக்கள் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள். எனவே ஜப்பான் மூலம் சுற்றுலாவில் சம்பாதிக்கும் நாடுகளுக்கும் பொருளாதார நெருக்கடி உண்டாகும். ஜப்பானில் 12 கோடிக்கும் மேலான மக்கள் வசித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து தவித்து வருகின்றனர்.
நில நடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகளவு உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவாக அணு உலைகள் வெடித்தத்தில் பெரு நெருப்பு மூண்டு அடித்துச் செல்லும் தண்ணீரிலும் எரிந்துகொண்டே இருந்தது. அனுக்கதிர்வீச்சின் அபாயத்தை உண்டாக்கியதில் காற்றும் மாசுபட்டிருக்கிறது. அந்த பகுதிகளில் நல்ல குடிநீரும் கிடைப்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இப்படி நிலம், நீர், காற்று, நெருப்பு என பஞ்சபூதங்களால் வஞ்சிக்கப்பட்ட ஜப்பான் விரைவில் மீண்டெழும் என்று நம்புவோமாக.
எதிர்ப்புகளின், சவால்களின் மத்தியில் பிறந்தவர்கள் எத்தகைய தடையையும் எதிர்கொண்டு முன்னேறுவார்கள்.