படைப்பு, பதிப்பு. படிப்பு இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவை ஒவ்வொன்றுக்கும் சமபங்கு உண்டு. இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், படிப்பாளர்கள்; தீவிர வாசகர்கள் பற்றித் தொகுத்துக் கூறுவது அவசியம் என்று கருதி, எங்களால் இயன்றவரை தொகுத்தளிக்கிறோம்.

படைப்பாளர்கள் :

* தேவிபாரதி : காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியர். 1993ஆம் ஆண்டு இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பலி வெளிவந்தது. பரவலான கவனத்தப் பெற்றது. கவிதை, நாடகம், கட்டுரை என படைப்பிலக்கியத்தில் தனது பன்முகப் படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர்.

* மருத்துவர் ஜீவானந்தம் : மருத்துவத்திற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் இவர். இதுவரை 15 நூல்களை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பும் இதில் அடக்கம் காந்தியப் பொருளாதாரம், மதச்சார்பின்மை, சுற்றுச்சூழல், பன்னாட்டு ஏக போக எதிர்ப்பு, சமூக விடுதலைப் போராளிகளை வெளிச்சமிட்டுக் காட்டுதல் என இவரது படைப்புத்தளம் விரிவடைந்து செல்கிறது.

* வா.மு.கோமகன் : வா.மு. கோமு என்ற பெயரில் எழுதி வருகிறார். பல்வேறு சிற்றிதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். 2006 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்புகள் தொகுப்புகளாக வெளிவரத் துவங்கியுள்ளன. உயிர்மை, உயிர் எழுத்து, அகரம் ஆகிய பதிப்பகங்கள் இவரது படைப்புகளை வெளியிட்டுள்ளன.

* பாஸ்கரதாசன் : தீரன் சின்னமலை, மருதநாயகம் கே.பி. சுந்தராம்பாள், மஞ்சள் ரோஜா ஆகியவை இவரது படைப்புகள்.

* சந்திரா மனோகரன் : சிகரம் தன் முனைப்பு காலாண்டிதழின் ஆசிரியர். ஐந்து சிறுகதைத் தொகுதிகள், மூன்று புதினங்கள், ஒரு புதுக்கவிதைத் தொகுப்பு இவரது பங்களிப்பு.

* தி. தங்கவேல் : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலர் இவர். சித்தரின் தத்துவ மரபு இவரது படைப்பு. செம்மலர், புதுவிசை, புத்தகம் பேசுது இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

* செங்கோடன் : தேர்ந்த மொழியாக்க வல்லுநர் மற்றும் படைப்பாளர். திராவிட இயக்கக் கலாசாரம், பாரதிதாசன் ஒரு வரலாற்றுத் தேவை, கீழை மார்க்சியம் என்னும் நூலின் விமர்சனமாக மார்க்சியம் மறைத்தலும் திரித்தலும் என்னும் நூல்கள் இவரது சொந்தப் படைப்புகள். சீனாவும் சோசலிசமும், முதலாளியத்தின் கோர வடிவம், உலகமயமாக்கல், தேசியம் பற்றிய மார்க்சின் கோட்டுபாடுகள், பேகன் முதல் மார்க்ஸ் வரை ஆகிய நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். இவரது பெரும்பாலான படைப்புகள் வசந்தகுமார் என்ற பெயரிலேயே வெளிவந்துள்ளது.

* இராதாகிருஷ்ணன் : இவரும் சிறந்த மொழியாக்க வல்லுநர். சாகித்திய அகாதமிக்காக பஞ்சாபி இலக்கிய வரலாறு, என்.சி.பி.எச். நிறுவனத்திற்காக மார்க்சியத்தின் அடிப்படைகள், அலைகள் வெளியீட்டகத்திற்காக சேகுவேராவும் புதிய மனிதனும், மாவோவின் நெடும்பயணம், விடியல் பதிப்பகத்திற்காக, இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும், மாவோவும் சீனப்புரட்சியும் மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் ஆகிய நூல்களை நிழல்வண்ணன் என்ற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார். செங்கோடனும் இராதாகிருஷ்ணனும் இணைந்து பல மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளனர்.

R. விஜயராகவன் : சிறுகதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து வருகிறார். கதை, கவிதை என தீவிர வாசகர் இவர்.

* ச. பால முருகன்: சோளகர் தொட்டி நாவல் மூலம் தமிழக அறிந்த படைப்பாளியாக மாறியவர். மனித உரிமைகள் பற்றிய நூல்கள், கட்டுரைகள் பலவும் எழுதி வருகிறார்.

கௌதம சித்தார்த்தன் : ‘உன்னதம்‘ எனும் உன்னதமான சிற்றிதழின் ஆசிரியர். ஈரோடு, கவுந்தப்பாடியில் இருந்து வெளிவரும் மாத இதழ்.

கமலக்கண்ணன் : C.N. கல்லூரிப் பேராசிரியர். பெரியாரியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெரியாரின் இலக்கியம், மொழி, கலை குறித்த சிந்தனைகள், பெரியாரும் தமிழும், பெரியாரின் பணியும் தமிழ் வளர்ச்சியும், பகுத்தறிவு வேர்கள் (கவிதைகள்) என்ற படைப்புகளுக்கு சொந்தக்காரர்.

சேலம் பாலன் : ‘துளி’ இலக்கிய மாத இதழின் ஆசிரியர்.

-பதிப்பாளர்கள்

புது மலர் பதிப்பகம்: கண. குறிஞ்சி நடத்தி வரும் பதிப்பகம் இதுவரை 34 முற்போக்கு நூல்களை வெளியிட்டுள்ளது.

இளங்கோ: பாரதி புத்தாகாலய ஈரோடு கிளையின் மேலாளர். பிரபல சைக்கிள் கம்பெனி ஒன்றின் மண்டல மேலாளராக இருந்த இவர், புத்தங்கள் மேல் உள்ள தீராக் காதலால் இக்கிளையைத் தொடங்கியவர். ஈரோடு புத்தகத் திருவிழாவையும் உலகப் புத்தக தினத்தையும் ஒட்டி, இவர் எடுத்து வரும் முயற்சிகள் பள்ளி கல்லூரிகளில் பாரதி புத்தாலயத்தை தெரியாதோர் இல்லை என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. ஆட்சியர், நீதிபதிகள், மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் என தீவிர வாசகர்களுக்கு ஈரோட்டில் இணைப்புப் பாலமாக விளங்கி வருகிறார். ஆன்லைன் புத்தக விற்பனையை கூடியவிரைவில் தொடங்கிட திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் மின் அஞ்சல் அனுப்பினால் போது புத்தங்களை வீடு தேடிச் சென்று வழங்கத் திட்டமிட்டு வருகிறார்.

அறிவரசு பதிப்பகம்

கோபி கலைக் கல்லூரித் தமிழ்த்துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் அரங்கசாமி. அறிவரசு என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார். இப்பதிப்பகம் 26 நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளது. பதிப்பாளரே கவிதை, கதை, நாடகம் புனைவதில் வல்லவர். இவரது தீரன் சின்னமலை நாடகம் தமிழகரசின் முதல் பரிசு பெற்றது.

இலக்கிய ஆர்வலர்கள்:

மே.அ. பாலமுருகன் : ஈரோடு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். படிப்பே இவரது முழு நேரப் பணி. பேராசிரியராக உயர்ந்த போது சங்க இலக்கியத்தில் மூழ்கி, மீண்டும் படைப்பிலக்கியம் நோக்கி வந்து, துறைத் தலைவராக உயர்ந்த போது சிறு பத்திரிகைகள், இனவரைவியல், தத்துவம், மானுடவியல், சமூகவியல், மனோதத்துவம், வரலாற்று நூல்கள் என வாசிப்பும் ஈடுபாடும் மாறியுள்ளது. காலச்சுவடு, புத்தகம் பேசுது, உயிர்மை ஆகிய மாத இதழ்கள் முதல் இதழில் இருந்து தற்போதைய இதழ் வரை அவரது வீட்டில் பாதுகாக்கப்படுகின்றன.

பாபு, சிவா சென்னியப்பா, R. விஜயாராகவன் போன்றோர் ஈரோடு வாசிப்பு இயக்கம் என்கின்ற அமைப்பைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கல்லூரி, பள்ளி மாணவர்களிடையே ஆயிஷா நூலை 2000 பிரதிகள் இதுவரை சொந்தமாக வாங்கிப் பரிசளித்து வருகின்றனர். மாணவ, மாணவியர் இடத்தில் புத்தகம் வாசிப்பதன் நோக்கத்தை எடுத்துச் சொல்லி சிறந்த நூல்களை அவர்களிடத்தில் அறிமுகம் செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

பாரதி புத்தகாலயம் கிளையில் மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய்க்கு மேல் புத்தகங்களை வாங்கிப் படிக்கும வாசகர்கள்:

எம். மகேந்திரன்

பல் மருத்துவர் T.M. சங்கர்

வீரக்குமார்

K. ரவிச்சந்திரன்: இரயில்வே தலைமை எழுத்தர் பணி புரிந்தவர்.

P. ரவிச்சந்திரன்: சுங்கம், மத்திய கலால்துறை ஆய்வாளராகப் பணி புரிபவர்.

C. சண்முகம்: மின்வாரிய செயற்பொறியாளராகப் பணிபுரிபவர்.

Pin It