அறிஞர் அண்ணா 1948ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி நிலையத்தில் ஆற்றிய முதல் ஆங்கில உரை (1948): PEOPLE'S POET

தமிழாக்கம்: நலங்கிள்ளி

மக்கள் கவிஞன்!

மக்கள் கவிஞன் என்ற இந்தக் கூற்று கவர்ச்சியும் சிறப்பும் வாய்ந்ததுதான். இந்த இனிதான புகழுரைக்கு ஏற்ற கவிஞர்கள் யாரும் இருக்கவில்லை. மக்களுக்கென மன்னர்களும் அமைச்சர்களும் படையாட்களும் மீட்பர்களும் மந்திர தந்திரப் பேர்வழிகளும் பூசாரிகளும் மட்டுமே இருந்தார்கள். காலங்காலமாக ஏராளமான கவிஞர்கள் பாடி வந்துள்ளனர். இறைத்துதிப் பாடல்களை வாரி வழங்கியுள்ளனர் அல்லது கவித் திறத்தால் அரண்மனைகளுக்கு சாமரம் வீசியுள்ளனர். மக்கள் நாவில் தவழும்படி மக்களுக்காகவோ மக்கள் பற்றியோ பாடியோர் அரிதிலும் அரிது. கவிஞனின் குரல் கோயில் மணி ஓசையோ அரண்மனையின் போர் முரசோ ஆற்றும் பணியை மூடி மறைத்தே வந்துள்ளளது.

ஆனால் அரிதாகத்தான் அந்தக் குரல் மக்களின் ஆழ்மனச் சிந்தனைகளின் பக்கம் நின்றது. எப்போதாவது மக்கள் பற்றிப் பேசினாலும், அவர்கள் பற்றி குற்றம் குறை கூறுவதாகவே இருந்தது. இந்த உலகம் எவ்வளவு பேராசை கொண்டது பாருங்கள், பணம் எவ்வளவு பெரிய பாவச் செயல் என உணருங்கள், தங்கம் எவ்வளவு புனிதமற்றது எனப் புரிந்து கொள்ளுங்கள் என்று சுட்டிக்காட்டுவதற்காகவே பேசுவார்கள். இத்தகைய உபதேசங்களே ஆளும் வர்க்கத்தின் செங்கோலுக்கும் கசைக்கும் துணையாயின.

கடைசியில் அவர்கள் அரசர்களின் எடுபிடிகளாகிப் போனார்கள். மண்ணுலகில் வழக்கைப் பதிவு செய்து தீர்ப்பை விண்ணுலகை நோக்கிக் கேட்கும் இன்னுமொரு காவலர் ஆகிப் போனார்கள். இந்தக் கவிஞர்கள் மக்களை விட்டு மொத்தமாக விலகி அவர்களுக்குத் தொடர்பில்லாத மொழியில் பேசினார்கள். எந்த மக்களிடமிருந்து அவர்கள் எழுந்து வந்தார்களோ அந்தக் கூட்டத்தையே இழிவாகக் கருதினர். அவர்களின் கவி மேதைமையை அரச அரண்மையில் இடம் பிடிக்கப் பயன்படுத்திக் கொண்டனர். இடம் கிடைத்ததும் முடிமன்னர்களிடம் சொக்கத் தங்கம் இருப்பது தெரிந்தால் போதும், அவர்களைப் போற்றிச் சொல்மாலைகள் தொடுத்தனர். சங்க காலக் கவிஞர்கள் இந்த சோகச் சூழலுக்கு விதிவிலக்காய் இருந்தனர். ஆனால் அந்தக் கவிஞர்கள் பற்றி இன்றைய தலைமுறையினருக்குப் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.

கவிஞர்கள் செய்யுள் இயற்றும் வல்லமையை விற்றுப் பிழைப்பவர்களானார்கள் அல்லது இன்பத்தின் வணிகர்களானார்கள். மக்கள் கவிஞராவது கடினமான செயல் என்றும், ஆதாயமற்றது என்றும் கருதினார்கள். இந்தக் காரணத்தால்தான் தமிழ்நாட்டில் சங்க காலத்துக்குப் பிறகு மாபெரும் மக்கள் கவிஞர்கள் எவரும் நமக்குக் காணக் கிடைக்கவில்லை. 

பண்டைக் கவிஞர்கள்

வேற்றுலகில் கிடைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நற்பேறுதான் முதலீடு எனக் கருதப்படலாயிற்று. எனவே இந்தத் தவறான, கேடான கோட்பாடு உதிப்பதற்குப் பின்பு தோன்றிய கவிஞர்கள் இந்தக் குறிப்பிட்ட வங்கியில்தான் அருள் கிடைக்கும் என அதனை மெச்சத் தொடங்கினர். நாங்களே அதன் முகவர்கள் என அவர்களாகவே அறிவித்துக் கொண்டனர். புத்திசாலியான வங்கியாளர் போன்று அல்லது துறுதுறுப்பான காப்பீட்டு முகவர் போன்று இந்தக் கவிஞர்கள் அவர்களது வங்கியின் வல்லமை பற்றியும், குதூகலமான ஈவுப் பங்குகள் பற்றியும் வளமான எதிர்காலம் பற்றியும் பக்கம் பக்கமாகப் பாடல்கள் எழுதித் தள்ளத் தொடங்கினர். மகா விஷ்ணுவினுடைய கருடனின் சாகசங்கள் பற்றி ஓர் இனிய பாடலை கவிஞர் ஒருவர் மக்களுக்குத் தந்து விட்டால் போதும், இன்னொரு கவிஞர் கிளம்பி சிவனுடைய கம்பீரமான நந்தி பற்றி, முருகனின் ஒயிலான மயில் பற்றி, ஏன், மாவல்லமை பெற்ற சாவுக் கடவுளான எமனின் எருமை பற்றிக் கூட புனிதப் பாக்களை நமக்கு வழங்கினார்கள்.

கலைஞனின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தோமானால், அந்த எல்லாக் கவிதைகளுமே உயர்தரமானவை, அந்தக் கவிதைகளில் சந்தமும், நடையும், உவமைகளும், உருவகமும், சொலவங்களும் நிறைந்திருந்தன, ஏரணம் ஒன்றுதான் இருக்காது. கவிஞர்கள் நினைத்துக் கொண்டார்கள், கோயில் மணி சரியாக ஒலிக்கவில்லையாம், அதற்கு ஒலி வழங்கத்தான் இவர்கள் தங்களின் கவித் திறத்தைத் தருகிறார்களாம். இது கடமையா, கடமை இல்லையா என்பதெல்லாம் தேவையில்லை, அந்தத் திசையில் விரைந்தோடும் அளவுக்குப் பணம் காய்க்கும் வேலையாக அது இருந்தது. கவிஞர்கள் உயர்வு மனப்பான்மை கொண்டனர். சாமான்ய மக்களின் குழப்பத்தில் இன்பம் துய்த்தனர்.

முரண்பாடுகளுடன் சமரசப் போக்கைக் கடைப்பிடித்தனர். அபத்தங்களைச் சிங்காரித்தனர். உலகிய வாழ்க்கையை ஒதுக்கித் தள்ள வேண்டியதாகக் காட்டினர். மனித வாழ்வே அர்த்தமற்றது, மனித இனமே துச்சமானது எனக் கூறி, மேகங்களுக்கு  மேல் இருக்கும் காணா உலகமான சொர்க்கம் பற்றியும் புவிக்கடியே இருக்கும் நரகம் பற்றியும் கவிதைச் சித்திரம் தீட்டினர். தொலைநோக்கி என்பது அறிவியலின் கருவில் இருந்ததால் சொர்க்கத்தை அவர்களால் காப்பாற்ற முடிந்தது.  இறையியல் உலகுகள் பற்றிய கற்பனை வர்ணனைகளைச் சொல்லி மக்களை மகிழ்வித்தனர்! இதைப் பார்த்த அறிவிலிகள் பரவசமடைந்தனர், அறிவாளிகள் கலையைச்  சுவைத்தனரே தவிர, சிந்தனையை அல்ல.

மக்கள் கவிஞனின் பங்கு

மக்கள் கவிஞன் என்ற பங்கை வகிப்பது எளிய காரியமல்ல. பாரதி இந்த மாபெரும்இலக்குக்கு ஈடுகொடுத்து எழுந்தார். வர்ணனைக் கவிஞன் ஆவது எளிது, நீலக் கடலில் தவழும் நிலா பற்றி சில இனிய செய்யுள்கள், தாரகைகள் மினுமினுப்பு பற்றி சில கவிதைகள், பூ நறுமணம் பற்றி அருமையான கவிதைகள், ஆறுகளின் சலசலப்பு, காதல் பாடல்கள், வீரப்பாக்கள், இவை கவிஞர்களின் அரங்கில் கௌரவ இடம் பிடிப்பதற்குப் போதுமானவை.  ஆனால் மக்கள் கவிஞனின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, வசைபாடல்களைக் கடந்தாக வேண்டும், ஆபத்துகளுக்குள் பல முறை குதித்தெழ வேண்டும். பொற்குவையும் புகழும் பற்றி சிந்திக்கக் கூடாது. குறிப்பிட்ட சில நண்பர்கள் வட்டத்தில் சுப்பிரமணிய பாரதியின் கவிதை மேதைமை பற்றி அறிந்து பேசினார்கள் என்றாலும், ஒட்டுமொத்த மக்கள் அவர் பற்றி அறிந்து வைத்திருக்கவில்லை, அவர் பற்றி அவர்களுக்குப் பிற்காலத்தில்தான் தெரிய வந்தது. அப்போதும் கூட மக்கள் பார்வைக்கு வந்தவை அரசியல் வண்ணம் தோய்ந்த பாடல்களே தவிர, மக்கள் கவிஞனால் மட்டுமே உள்வாங்கி வெளிப்படுத்தக் கூடிய பாடல்கள் அல்ல. நம்மிடம் மிதமிஞ்சிய கவிஞர்கள் இருந்தனர்.

இல்லத்தையும் தொழிலையும் மறந்து கோயிலுக்குள் இடையன் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான், இரவுக் கண்காணிப்பை முடித்து விட்டுத் திரும்பும் இறைவி அந்த அப்பாவியைக் கண்டதும் புன்முறுவல் பூக்கிறாள், அவளுக்கு அவனைக் கவிஞனாக்க வேண்டும் என்ற பரிவான எண்ணம் உதிக்கிறது, அவனை ஒரு தட்டு தட்டி தெய்வக் கோலால் தொடுகிறாள், இதனால் ஏற்பட்ட அற்புத விளைவுகளை மக்கள் அறிந்து வைத்திருந்தனர். தெய்வத்தின் தொடுதலால் ஒருவன் கவிஞனாகிறான். எனவே அவன் கடமை ஒரு குறிப்பிட்ட கடவுளை நோக்கி பக்திப் பாடல்கள் இயற்ற வேண்டும், குறைந்தபட்சம் இந்தக் கருத்துதான் எல்லோரின் மனத்திலும்ஆழ வேர்விட்டு இருந்தது. எந்தளவுக்கு என்றால் ஒரு மக்கள் கவிஞனே வந்து விட்டால் கூட, அவனைச் சந்திக்கும் நிலைக்கு மக்கள் அணியமாகவில்லை. “நான் மக்கள் கவிஞன், நான் அவர்களுக்காகப் பாடுகிறேன், நான் அவர்கள் பற்றிப் பாடுகிறேன், ஏனென்றால் நான் அவர்களில் ஒருவன்”எனத் துணிச்சலாகப் பேசுபவர் பற்றி மக்கள் ஏளனமாகவும், சந்தேகக் கண்கொண்டும் பார்த்தனர். அதற்கு அறிந்தேற்பு கிடைக்காது. அவன் கவிதைகள் எந்தளவு முற்போக்காக இருக்கின்றனவோ அதற்கான எதிர்ப்பு அந்தளவு இன்னும் தீவிரமாக இருக்கும். இந்த ஆபத்தான களத்தில்தான், சுப்பிரமணிய பாரதி தட்டுத்தடுமாறாமல் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கக் காண்கிறோம்.

பாரதியின் ஊழி

பாரதி இரண்டு ஊழிகளின் சந்தியில் பிறந்தார். அதாவது அவர் பிறந்த எட்டயபுரம் மண்ணில் நிலப்பிரபத்துவ முறை முழு வீச்சில் இருந்தது. அங்கு ஓர் அரண்மனை குடிசைகளால் சூழப்பட்டிருந்தது, அங்கே பழம்பெரும் சாதிகள் அப்போதும் அதிகாரத்தில் இருந்தன. அவரே பிறப்பால் பிராமணர். ஒரு பக்கம் சமுதாயத்தின் நிலப்பிரபத்துவ, சனாதன  முறைகள் நடப்பில் இருக்கும் போதே மறுபக்கம் துன்பமும் வெறுப்பும் நிறைந்த கண்களுடன் நவீனத்துவம் புதிதாகத் தலைதூக்கிக் கொண்டிருந்தது, அந்தப் புது ஊழியின் பார்வையில் ஓர் அறைகூவல் இருந்தது. இந்தக் காலக் கட்டத்தில்தான் பாரதி பிறந்தார். பாரதி வசதியான பழைய அமைப்பில் இருந்த காரணத்தால், பழைய அமைப்புக்கும் புதிய அமைப்புக்கும் இடையிலான சண்டையில் அவர் வீரராக இருப்பார் என யாராலும் கற்பனை செய்திருக்க முடியாது.

பாரதியாரின் பெருமைத் தகைமை

அகந்தையும் அடக்கமும், கொடூரமும் இரக்கமும்,  கைகோத்து நடைபோடும் முரண்புதிர்கள் கொண்ட ஒரு நிலத்தில் பாரதி பிறந்தார். இது அளப்பரிய ஆற்றலும் அந்த ஆற்றலை மழுங்கடிக்கும் அபத்தமான சிந்தனைகளும் காணப்படும் மண். கண்பறிக்கும் சிந்தனைகளும் கோடிக்கணக்கான ஊமைச் சனங்களும் நிறைந்திருக்கும் மண். துணிவும் அச்சமும், நம்பிக்கையும் சோர்வும் கொண்ட மண். பைரன், பர்க் இருவரும் இங்கு கால் பதித்ததும், பரதமும் பாகவதமும் கண்டனர். மக்களின் காதுகள் துப்பாக்கி வெடியோசைக்குப் பழகிப் போய் விட்டன. காலங்காலமாய் ஒலித்து வந்த கோயில் முரசுக்கு மட்டும் குறையொன்றுமில்லை. இந்த முரண்புதிர்களும் குழப்பங்களும் நிறைந்த மண்ணில்தான் பாரதி பிறந்தார். இப்படிப்பட்ட மண்ணில் வரலாறு மெதுவாகத்தான் முன்னேறும். உந்துதல் இல்லையென்றால் சிலநேரம் நகரக் கூட நகராது. மக்கள் கவிஞன் என்ற வகையில் பாரதியாரின் பெருமைத் தகைமைஅவர் மக்களுக்குத் தந்த உந்ததுதலின் அடிப்படையில்தான் அமைகிறது.

பாரதியார் வெறும் தேசப்பற்றுக் கவிஞர் மட்டுமல்ல. அவர் மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என உறுதியாகச் சொல்லலாம். காரணம்,  அவர் மக்கள் கவிஞன். அவர் அயலவர்கள் மீது சினங்கொண்டார். தமது நாடு விடுதலை பெற வேண்டுமென விரும்பினார். ஆனால் அது அவர் செயலின் இலக்கல்ல, முடிவும் அல்ல. அது ஒரு தொடக்கமாக இருந்தது. அவர் தன்னாட்டு மக்களை அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுவிக்க விரும்பினார், உலகின் பார்வையில் அவர்கள் மேலோங்கி நிற்க வேண்டும் என விரும்பினார், முற்றிலும் புத்தம்புதிய மனிதமனிதிகள் நிறைந்த புதிய நாட்டைக் காண விரும்பினார். மக்கள் அச்சம் சூழ வாழக் கண்டார். அவர்களின் முகங்களிலிலேயே அச்சம் அப்பிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு எதைப் பார்த்தாலும் கண்டாலும் அச்சம். அவர்கள் அயலவரையும் அவர்களின் துப்பாக்கிகளையும் பார்த்து மட்டுமல்ல, தம் சொந்த சகோதரர்கள் முழக்கங்கள் இடுவது கண்டும் அஞ்சினர். பேய் பிசாசுகள் கண்டு அஞ்சினர்.

விடுதலைக்கான போராட்டம்

அஞ்சிச் சாகும் மக்களால் விடுதலையை முன்னின்று நடத்த முடியாது. இத்தகைய மக்கள் இருக்கும் நாட்டினால் அதன் விதியை உயர்த்தி நிறுத்த முடியாது. அயல் ஆற்றல்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களால் உலகத்தை நேர்படப் பார்த்திருக்க முடியாது. எனவே பாரதி தன்னாட்டு மக்களின் தாழ்வு மனப்பான்மையை உதறித் தள்ள, அவர்களின் உள்ளத்திலிருந்து அச்சத்தை அகற்ற விரும்பினார். அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையும் துணிவும் ஏற்றினார். அவர்களுக்குள் மறைந்துள்ள ஆற்றல்களை அவர்களுக்கே எடுத்துக் காட்டினார். அவர்களின் அந்த உள்ளார்ந்த ஆற்றல் எவ்வாறு வீணடிக்கப்படுகிறது என அவர்களுக்கே சுட்டிக் காட்டினார். மக்கள் கூட்டத்தின் உறக்கத்தை, அவர்களின் மோசமான அறியாமையையும் மூடநம்பிக்கையையும், அவர்களின் தாழ்வு மனைப்பான்மையையும், சாதிக் காழ்ப்பையும் பாரதி நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். இந்தத் தீங்குகளை வேரோடு பிடுங்கி எறிய உறுதியேற்றார். ஒரு மக்கள் கவிஞன் தவிர வேறு யாராலும் இந்தச் சிக்கல்களில் இவ்வளவு தீவிரமாக ஆர்வம் காட்டியிருக்க முடியாது.

இது சாமான்ய மனிதனின் ஊழி, சனநாயகத்தின் ஊழி என்பதை பாரதி நன்றாக அறிந்து வைத்திருந்தார், மக்கள் விடுதலைக்காகப் போராட வேண்டும் என விரும்பினார். தெய்விக ஆற்றல்களை நோக்கி மென்மேலும் பக்திப் பாடல்கள் இயற்றவில்லை. நாட்டின் இளவரசர்களுக்கு கவிதா விண்ணப்பங்கள் எதுவும் அனுப்பவில்லை. அவர்தம் பேச்சு ஏர் பிடிக்கும் உழவர்களுக்கானதாக, தொட்டில் ஆட்டும் தாய்மார்களுக்கானதாக, திடல்களில் விளையாடும் சிறுவர்களுக்கானதாக இருந்தது. அவர் பண்டைக் கவிஞர்கள் போல பழம்பெரும் சாத்திரங்களைக் காட்டி விடுதலைக்கு முட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, உலகின் முக்கிய நடப்புகளை, தூர தேசங்களின் விடுதலை இயக்கங்களை மக்கள் முன் வைத்தார். மாஜினி எனும் தேசப் பற்றாளரின் காரணமாக  இத்தாலியில் நடைபெற்ற வெகுமக்களின் பேரெழுச்சி தந்த விடுதலையின் விடியலை பாரதி தம் மக்களுக்கு அறிவித்தார்.

புரட்சிக்குப் பிறகான பிரான்சின் சித்திரத்தை மிளிரும் வண்ணங்களில் தீட்டிக் காட்டினார். ஜார் மன்னராட்சியின் பிடியிலிருந்து விடுதலை கண்ட ருஷ்யா பற்றி புத்தம் புது ஓவியத்தை வரைந்தளித்தார். விடுதலை பெல்ஜியம், விடுதலை பிரான்சு, விடுதலை பிரான்சு, சிவப்பு ருஷ்யா இவைதாம் அவர் தீட்டிக் காட்டிய ஓவியங்கள். ஃபிஜித் தீவில் வாழ்ந்த தமிழ்ச் சொந்தங்கள் பற்றிய சொல்லோவியத்தையும் தம் மக்கள் முன் படைத்துக் காட்டினார். ஷேக்ஸ்பியர் போன்றே இந்தப் படம் பார், அந்தப் படம் பார் என மக்களிடம் கேட்டுக் கொண்டார். அவர்தான் மக்கள் கவிஞர்! அவர் தம் மக்களின் தற்குறித்தனங்களையும் வலுவீனங்களையும் சுட்டிக் காட்ட அஞ்சாதவர்! மற்ற நாட்டு மக்கள் வாழ்க்கை மேன்மை பொருந்திய செயல் நோக்கி இன்னும் இன்னும் வேகமாகச் சென்று கொண்டிருந்த அதே வேளையில், தம் சொந்த மக்கள் சிந்தனையிலும் செயலிலும் எவ்வளவு மெத்தனமாக இருக்கிறார்கள் எனச் சுட்டிக் காட்ட அஞ்சாதவர்! வாய்ப்பு வசதி பெற்ற வகுப்பார் கண்டு அஞ்சாதவர்! முழு உண்மைகளை மக்கள் முன் வைக்கத் தயங்காதவர்! மக்கள் கவிஞர் என்ற வகையில் போலித்தனத்தை எங்கு கண்டாலும் அதனை அம்பலப்படுத்துவது அவரது கடமையாக இருந்தது. இந்தப் பணியை அவர் குறிப்பிடத்தகுந்த துணிவுடனும் ஆர்வத்துடனும் செய்தார்.

கண்டனத்துக்கு உள்ளாகும் உரையாடல்

தன்னலக் குழுக்கள் பாரதியின் இடத்தை தேசியக் கவிஞன் என ஏற்றி விட முயற்சி செய்தனர். அப்படிப்பட்ட படிமத்தையே முழுக்க விரும்பினார்கள் என்றில்லை. அப்படிப்பட்ட படிமத்தின் பிரம்மாண்டம் பொதுமக்களின் பார்வையிலிருந்து மக்கள் கவிஞன் என்ற அவரது இன்னொரு படிமத்தை மறைத்து விடும் என்று எண்ணினார்கள். பாரதியாரின் கவிதைகள் வெறும் வர்ணனைக் கவிதைகள் அல்ல. மக்கள் கவிஞரான அவர் பழமையான அமைப்புகளிலும் சிந்தனைகளிலும் காணப்படும் அபத்தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு அச்சப்படவில்லை. பழமைகளை நிலைநிறுத்தும் பணியை முன்னின்று செய்தவர்களைப் பார்த்துக் கோபமான தொனியில் மிகக் கடுமையாக் கேட்டார், “மூடர்களே! பழமை என்ற காரணத்துக்காகவே காலம் காலமாக எல்லாவற்றையும் இழுத்துச் செல்ல வேண்டும் என வாதிடுவீர்களா? பழமை என்ற காரணத்துக்காகவே இதனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என வாதிடுவீர்களா?”

”சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்!
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர்,
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பிவரா.”

நிகழ்காலத்தில் வாழுங்கள், வருங்காலத்தைச் செதுக்குங்கள்

பழங்காலங்களில் மூடத்தனமும் ஆழமற்ற சிந்தனையும் இருக்கவில்லை என நினைக்கிறீர்களா? செத்துப் பிணமான சிந்தனைகளைக் கட்டித் தழுவிக் கொள்ளத்தான் வேண்டுமா? நிகழ்காலத்தில் வாழுங்கள், வருங்காலத்தைச் செதுக்குங்கள், தொன்மைக் காலம் நோக்கி ஏங்கிய நோக்கு வேண்டாம். ஏனென்றால் கடந்த காலம் கடந்து விட்டது. என்றென்றைக்கும் திரும்பாது என்று கூறினார் பாரதி. அவர் வெகுமக்களுக்கு அறநெறிகள் வழங்கினார். இவை பழங்காலத்து விதிமுறைகள் போல் வாழ்க்கைக்குத் தொடர்பில்லாதவை அல்ல. அவர் பழங்கால நெறிகளிலிருந்து துணிச்சலுடன் வேறுபட்டார். புத்தம்புதிய பார்வையை மக்களுக்கு வழங்கினார். மாயாவாதச் சிந்தனையின் பிடி மக்கள் மேல் இருப்பதை அவர் விரும்பவில்லை. அந்தக் கோட்பாட்டைக் கடுமையாக எள்ளல் செய்தார். இது சாமியார்களை மிகவும் கோபத்துக்கு ஆளாக்கியது. ஆனால் அதன் விளைவுகள் கண்டு அவர் அஞ்சவில்லை. இப்படிப்பட்ட சிந்தனையில் மூழ்கியவர்கள் செயலற்றவர்களாக, பிற்போக்குவாதிகளாக மாறுவார்கள். இத்தகையோர் பயனற்றவர்கள் ஆவார்கள்.

அவர்தம் சமயம்

அவர் பசி, ஏழ்மை, அறியாமை கண்டு சகித்திலர். செல்வந்தர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராய் வலுவாகக் குரல் எழுப்புகிறார். தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என எச்சரித்தார். மக்கள் முழுமையான வாழ்க்கை நடத்த வேண்டும், தம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், வணிகத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், தமது நாட்டைத் தொழில்மயமாக்க வேண்டும், இவ்வழியில் அவர்கள் புத்தூழியின் ஆதாயங்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என விரும்பினார். புரோகிதத்தனமோ, பஜனை பாடுவதோ அவர்தம் சமயம் இல்லை.அகண்ட நோக்கில் பார்த்தால், அவர்தம் சமயம் மனிதக்குலத்துக்கு, சொந்தச் சகோதரர்களுக்கு சேவை செய்வதாகும்.

முடிக்காத பணி முடிப்போம்

மக்கள் கவிஞனின் முன்னிருக்கும் பணி மிகப் பெரியது. மக்கள் புதிய உண்மைகளை உணரும்படி செய்கிற, புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க வைக்கிற, ஒட்டுமொத்தமாக ஒரு புதிய விழுமிய முறையை அவர்களுக்குப் பெற்றுத் தருகிற பணியிது. மக்களை ஆருடக்காரர்களின் பிடியிலிருந்து விடுவித்து, வானியலரை அவர்கள் முன் நிறுத்துவது அவரது பணி. மக்களின் மனத்திலிருந்து இரசவாதிகளை விரட்டியடித்து அங்கு வேதியலர்களுக்கு இடமளிப்பது அவரது பணி. புரோகிதர்களை அப்புறப்படுத்தி, அங்கு ஆசிரியர்களுக்குரிய இடத்தைப் பிடித்துத் தருவது அவரது பணி. தெய்விக மருத்துவர்களின் செல்வாக்கை விரட்டியடித்து சமுதாயத்தில் மருத்துவத்துவருக்குரிய இடத்தைக் கொடுப்பது அவரது பணி. மூடநம்பிக்கைகள் அழித்தொழிக்கப்பட்டு அவ்விடத்தில் அறிவியல் மலர வேண்டும். ஆக, மக்கள் கவிஞனின் பணி என்பது ஒரு புரட்சியாளனின் பணியாகும். பார்க்கப் போனால், புரட்சியாளனின் பணியை விடவும் கடினமானது.

ஏனென்றால் மக்கள் கொடுங்கோலனை மீட்பனாகவும் மீட்பனைக் கொடுங்கோலனாகவும் தவறுதலாகக் கணித்து விடக் கூடும். அவர் துணிச்சலுடன் போராடினார். போராட்டம் ஓயவில்லை. அவரும் உயிரோடில்லை. சிந்தனைக் கருவிகளை வழங்கிச் சென்றுள்ளார். இவை போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப் போதுமானவை. முழுமையான மேன்மையான பொருளில் பார்த்தோமானால், இதுவே இந்த மக்கள் கவிஞனுக்குச் செலுத்தக் கூடிய ஆகச் சிறந்த, காலத்துக்கும் நீடிக்கக் கூடிய மரியாதை ஆகும். இந்தப் பணியைச் செய்வோர் நம்மிடம் உள்ளனர். இந்தப் பணி முடிக்கப்படும்.

Pin It