kuthoosi gurusamy 263கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள் விழா தமிழ் நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் தோழர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. விற்காத ஓமப் பொடி, சிக்கு நாற்றம் வீசும் காராப்பூந்தி, பழைய பகோடா, அன்று வறுத்த அவல் - இத்தனையும் கலந்து “மிக்ஸ்சர்,” (கலப்பு) என்ற பெயரால் விற்பார்கள், ஆரிய ஹோட்டல்காரர்கள். அது போன்ற வேலைதான் பாரதியாருடையது!

பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சுதந்தரப் பள்ளு, கிருஷ்ணன் துதி, புதுமைப் பெண், புதிய ரஷ்யா, நவராத்திரிப் பாட்டு, தமிழ் மொழி வாழ்த்து, சக்திப் பாட்டு-இத்தனையும் கலந்த கதம்பம்! யார் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்! மூர்மார்க்கெட் பழஞ் சாமான் கடை மாதிரி!

“யான் இதைப் புராணக் கண் கொண்டு பார்க்கின்றேன்; அதைப் புரட்சிக் கண்கொண்டு நோக்குகின்றேன்; இதைக் கலைக் கண்கொண்டு காணுகின்றேன்,” என்று கூறுவார்களே, சில சந்தர்ப்பவாதிகள், அதுபோல பாரதியார் விழாவில் ப. ஜீவானந்தம் முதல் பிரெஞ்சிந்திய கவர்னர் பாரன் வரையில் கலந்து கொண்டிருந்தார்கள்! ஆகாகான் பிறந்த நாளில் ஸ்டாலின் கலந்து கொண்டால் எப்படியோ, அதைப் போல!

“தனி யொருவனுக்கு உணவில்லையெனில்....” என்று ஏதாவது இரண்டொரு வரி, ஹோட்டல் பாயசத்தில் முந்திரிப் பருப்பு அகப்படுவது போல அகப்பட்டால் கூடப் போதுமே! எப்படியோ போகட்டும்!

பாரதியார் இருந்த வரையில் தமிழ் நாட்டார் - குறிப்பாக பார்ப்பனர் - அவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. அந்தக் காலத்து ஜீவானந்தர்கள் கூட அயர்ந்து உறக்கத்தில் தான் இருந்தனர்.

வாழ்க்கையில் கஷ்டப்பட்டு மாண்டு மடிந்துபோன பிறகு, அவர் ‘சரக்கு’ விளம்பரப்படுத்தப் படுகிறது.

பாரதியின் சவப் பரிசோதனை! உயிருள்ளவரையில் ஒரு வாய் சோறும் போடாமல், செத்துப் போன பிறகு அன்னியனை அழைத்து வைத்து திதி கொடுத்து ‘ஆத்ம திருப்தி’ செய்யும் யோக்கியர்கள் உள்ள நாடு தானே இது? பாரதி விழாவும் ‘ஆத்ம திருப்தி’ வேலைதான்.

- குத்தூசி குருசாமி (18-09-1947)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It