இனியொரு விதிசெய் வோம் \ அதை

எந்த நாளும் காப்போம்;

தனியொருவனுக்குணவிலை யெனில்

ஜகத்தினை அழித்திடு வோம் \ -சுப்பிரமணிய பாரதி

மீண்டும் நடந்துள்ளது அதே அவல நாடகம். லட்சக்கணக்கான பட்டினிச்சாவுகள்.... அந்தச் சடலங்களின் மேல் ‘அபரிமிதமாக’ உற்பத்தியான உணவு தானிய மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் உணவு உற்பத்தி மற்றும் உணவுப்பங்கீட்டுக் கொள்கை அடிப்படையில் (அப்படி ஏதாவது இருந்தால்) இதை நிரூபித்து உள்ளது. 70களின் இறுதியில் அமெரிக்க ராக்பெல்லர் நிறுவனத்துடனும் உலகவங்கியுடனும் சேர்ந்து விவசாயப் ‘புரட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கம்Õ.... உயிரைப் பணயம் வைத்து உதிரம் சிந்தி உழைத்து இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுத்த பல லட்சம் டன் கோதுமை தானியத்தை தனது உணவு கொடவுன்களில் வெறுமனே போட்டு வைத்து..... பல ஆயிரம் விவசாயக் கூலிகள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து பட்டினிகளைச் சந்தித்ததை (4 1/2 லட்சம் கணக்கிற்கு வந்தது வரை) வேடிக்கை பார்த்து.... பிறகு உணவு தானியம் முழுவதுமாக கெட்டுப்போன பிறகு அரபிக்கடலில் கப்பல்கள் மூலம் கண்காணாத தொலைவிற்கு சென்று வீசி.... ‘புரட்சி’யை முடித்து வைத்தது.

அதே நிகழ்வு 2010ல் திரும்பவும் நிகழ்கிறது. அதே கட்சியை மையமாகக் கொண்ட அரசு இம்முறை உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் தவறவில்லை. வரலாற்றில் ஒரு நிகழ்வு இரண்டுமுறை நடக்கிறது என்றார் ஹெகல். கார்ல்மார்க்ஸ் இதையே சற்றுமாற்றி இரண்டாம்முறை நடக்கும் போது அது அவல நகைப்பாகப் பதிவாகிறது என்றார். ஒருபுறம் பட்டினிச்சாவுகள்... மறுபுறம் அளவிற்கு அதிகமான தானிய உற்பத்தி. இந்த உணவு உற்பத்தி அடிப்படையில் கடன் மற்றும் விவசாயத்தின் மூலம் லாபம் பெற்ற வங்கிகள் அந்த லாபத்தை மீண்டும் விவசாயிகளுக்கே கடனாகத் தந்து உதவியிருக்கலாம். ஆனால் வங்கிகள் அந்த கோடிக்கணக்கான தொகையை பெருநகரங்களில் உள்ள கார்பரேட் முதலாளிகளுக்கு தொழில்முறைக் கடனாகவும்.. நகரத்தில் உள்ள மேல் மத்தியதர வர்க்கத் திற்கு தொழில்முறை கடனாகவும்... வீடுகட்டுவதற்கு கடன் கொடுப்பதற்காகவும் விவசாயிகளுக்கு நாமம் போட்டன. விதர்பா முதல் நமது வாங்கல்பாளையம்வரை விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறி நகர கட்டுமானத் தொழிலாளியாக மாறும் யதார்த்தம் தொடர்வது ஒரு புறம்... உற்பத்தியான உணவுதானியங்களை அடிமாட்டு விலைக்கு ‘போனால் போகிறது’ என வாங்கும் அரசு, அந்த தானியங்களை மிகமோசமாக பேணப்படும் தனது கிடங்குகளில் மழையில் போட்டு நாசமாக்கி நாற்றமெடுக்க வைக்கும். இந்தக் கொடுமை வேறு எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பில்லை. அப்படிக் கிடைக்கும் உபரியாய் உற்பத்தியான தானியத்தை பட்டினி கிடக்கும் ஏழை மக்களுக்குப் பங்கீடு செய்யலாமே என்பது பாமரர் முதல் பகுத்தறிவாளர் வரை யாவருக்கும் தோன்றும் ஒரு யோசனை... அந்த யோசனை அரியணையில் இருப்போர்க்குத் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல. தேவையில்லையென்று அவர்களைச் சொல்ல வைத்துள்ளது என்பதுதான் மனம் கொதிக்க வைக்கும் விஷயம்.

தானியப்பங்கீடு குறித்தும் மிக மோசமான கொடும் பஞ்சத்திற்கும் இடையே தலைவர் லெனின் ‘முதலில் முதியவர்களுக்கும்... குழந்தைகளுக்கும்’ என்று அறிவித்தார். இதன் மூலம் தனது நாட்டையே தன் குடும்பமாக பாவித்தார். இங்கோ ‘கோர்ட் எப்படித் தலையிடலாம்?’ என்று கொதிக்கும் பிரதமரும்.... ‘அது... சரியில்லை... காந்தியே வறுமையை ஒழிக்க வேண்டும் ஆனால் யாரையும் பிச்சைக்காரர் ஆக்கக்கூடாது என்றுதான் கூறியிருக்கிறார்’ என்று மூத்த காந்தியவாதிகளும், ‘அந்த தானியம் கெட்டுவிட்டதா என்பதை பரிசோதிப்போம். அதற்கு நிதி தேவை’ என்று விவசாயப் ‘புரட்சி’ விஞ்ஞானிகளும் ஆடும் நாடகம் மனித நாகரிகம் காணாத புதுவகையான 21ம் நூற்றாண்டு மனிதாபிமானம்.

மத்திய மாநில அரசுகள் அனைத்தும் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அரசுகளாகத் தன்னை அறிவித்துக்கொள்கின்றன. வறுமை ஒழிப்பிற்கு நலத்திட்டங்களை வாரிவழங்கி ஓட்டுவங்கிகளைக் குறிவைத்து இயங்குகின்றன. ஆனால் உணவு ஏராளமாக இருக்கிறது.... மறுபுறம் மக்கள் பசியில் இருக்கிறார்கள்... நாட்டில் பட்டினி தொடர்கிறது.... பட்டினி கிடப்போரிடம் உணவு சென்று சேரவேண்டும்.... அதுவும் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இதைவிட வேறு என்ன கடமை இருக்க முடியும்... என்று யோசிக்கிறபோது பாரதி போல நாமும் முஷ்டி உயர்த்தி அடிவயிற்றிலிருந்து முழங்கத் தோன்றுகிறது:

‘இனியொரு விதி... செய்வோம்!’

ஆசிரியர்குழு

Pin It