வட அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஆன்டனிராய் என்பவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 30 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டு, தற்போது அப்பாவி எனக் கூறி விடுவிக்கப் பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலபாமா (Alabama) மாகாணத்தில் உள்ள பர்மிங்காம் (Birmingham)) நகரில் வாழ்ந்து வந்த ஆன்டனிராய் இன்டனுக்கு (Anthony Ray Hinton) தற்போது, 58 அகவை ஆகிறது. கடந்த 1985ஆம் ஆண்டில், உணவக மேலாளர்கள் இருவரை சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார்.

அவரது வீட்டில் காவல்துறையினரால் கண்டறியப் பட்ட துப்பாக்கியில் இருந்த குண்டுகளை வைத்து அவர்தான் குற்றவாளி என தீர்மானித்த நீதிபதிகள், அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தனர்.

தான் அக்கொலைகளை செய்யவில்லை என ஆன்டனிராய் நீதிமன்றத்தில் வாதாடியபோதும், அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 1998ஆம் ஆண்டு ‘அனைவருக் கும் சமநீதிக்கான முன்னெடுப்பு’ (Equal Justice Initiative) என்ற தன்னார்வ அமைப்பினர், தங்களுக்குரிய சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தி அவரது வழக்கை மீண்டும் விசாரிக்க ஏற்பாடு செய்தனர்.

இதன் பின்னர், சற்றொப்ப 16 ஆண்டுகள் கழித்து, துப்பாக்கிக் குண்டுகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்ததில், மேலாளர்கள் சுடப் பட்டு இறந்த துப்பாக்கிக்கும், இவரது வீட்டில் கண்டு பிடிக்கப்பட்ட துப்பாக்கிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2015 ஏப்ரல் 3 அன்று, ஆன்டனிராய் அப்பாவி என மெய்ப்பிக்கப்பட்டதாகக் கூறி, நீதிபதிகள் அவரை விடுதலை செய்து உத்தர விட்டனர். ஜெபர்சன் கவுன்ட்(Jefferson Count) சிறை வளாகத்தை விட்டு வெளியே வந்த அவரை, அவரது குடும்பத்தினர் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றது ஊடகங்களில் பெரும் செய்தியாக விவாதிக்கப்பட்டது.

இத்தீர்ப்பு குறித்து பேசிய ஆன்டனி ராயின் வழக்கறிஞரான பிரயின் ஸ்டீவன்சன் (Bryan Stevenson), “ஆண்டனிராய் மிகவும் ஏழை, அவரால் திறமையான வழக்கறிஞரை வைத்து வாதாட முடியவில்லை என் பதால்தான், அவர் இவ்வளவு வேகமாக அவ்வழக்கில் தண்டிக்கப்பட்டார்’’ என்றார்.

“நான் அப்பாவி என இந்த நீதிமன்றம் கூறிவிட் டது. ஆனால், எனது இளமைக் காலத்தை இந்த நீதி மன்றம் திருப்பித் தருமா?’’ என ஆன்டனிராய் வேத னையுடன் கேள்வி எழுப்பினார்.

ஆன்டனிராயைப் போல, 1973ஆம் ஆண்டிலிருந்து சற்றொப்ப 152 பேர் தூக்குத் தண்டனையிலிருந்தும், சாகும்வரையிலான சிறைத் தண்டனையிலிருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளதாக மரணதண்டனைத் தகவல் மையம் தெரிவிக்கிறது.

சாட்சியங்கள் சரியாக இல்லாத போது மட்டுமல்ல, அதிகப்பணம் கொடுத்து சரியாக வாதாடத் தெரிந்த வழக்கறிஞர்களை நியமிக்காவிட்டால் கூட, தூக்குத் தண்டனை வழங்கப்படும் அபாயம், இவ்வுலகில் இருந்து கொண்டே இருக்கிறது. அதையே, ஆன்டனி ராய் வழக்கு மெய்ப்பிக்கிறது.

ஒரு ஆன்டனி ராயை காப்பாற்றி விடலாம். ஆனால், தூக்குத் தண்டனையைத் தூக்கிலேற்றாதவரை அப்பாவி ஆன்டனி ராய்கள் தூக்கிலேற்றப்படும் அபாயம் ஒழியாது!

Pin It