இலங்கையின் கடற்படைக்காக இரண்டு புதிய போர்க் கப்பல்களை இந்தியா தயாரித்து வருகிறது.
கடந்த 29.03.2016 அன்று இலங்கையின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ருவன் விஜயரத்ன, பாதுகாப்புத் துறைச் செயலர் கருணசேனா ஹெட்டியராச்சி, இராணுவத் தளபதி கிறிசாந்தா ஆகியோர் கோவாவிற்கு நேரில் வந்து, இலங்கைக் கடற்படைக்காக இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டில் 2 நவீன போர்க் கப்பல்கள் கட்டப்படுவதை நேரில் பார்வையிட்டனர்.
ஏற்கெனவே, 2014ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த இரண்டு போர்க் கப்பல்களும் அணியமாகி வருவதாக அமைச்சர் விஜயரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதலாவது கப்பல் வரும் ஆகத்து மாதத்திலும், இரண்டாவது கப்பல் 2018ஆம் ஆண்டிலும் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
பொதுவாக தெற்காசிய நாடுகள் அவற்றின் போர்க் கப்பல்களை அந்நிய நாடுகளின் பயன்பாட்டுக்காக இதுவரை விற்பனை செய்தது இல்லை என்றும், அந்த வரம்பை மீறி இலங்கையின் “பாதுகாப்பு நல்லுறவை” வலுப்படுத்தும் வகையில் இவ்விரு கப்பல்களும் வழங்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்த இரண்டு போர்க் கப்பல்களையும் வைத்துக் கொண்டு, இலங்கை எந்த நாட்டின் மீது போர் தொடுக்கவுள்ளது? ஐயத்திற்கிடமின்றி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், தமிழீழத் தமிழ் மீனவர்கள் மீதான கண்காணிப்பிற்கும்தான் இந்த புதிய போர்க் கப்பல்கள் பயன்படப் போகின்றன.
முன்னதாக, கடந்த சனவரி 23 - 25 நாட்களில், 25 ஆண்டுகள் கழித்து இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா என்ற விமானந்தாங்கிப் போர்க் கப்பலும், ஐ.என்.எஸ்.எஸ். மைசூர் என்ற போர்க் கப்பலும், இலங்கையுடனான கூட்டுப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களை எப்படி கூட்டாக சேர்ந்து அழிப்பது என்பதற்கான “சிறப்புக் கூட்டுப் பயிற்சி” இது!
இதற்கு முன்பே, கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சியில் இலங்கைக்குப் போர்க் கப்பல்கள் வழங்குவதற்கான முடிவை இந்திய அரசு எடுத்தபோது, அதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
அதன்பின், 2015ஆம் ஆண்டு, ஆகத்து மாதத்தில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டிவரும் ஈடுபாட்டைப் போற்றும் வகையில் “பாராட்டி”, இலங்கைக் கடற்படைக்கு குத்தகை அடிப்படையில் சேவையாற்றி வந்த இந்திய கடலோர காவல்படையின் ”வராகா” கண்காணிப்புக் கப்பலை இலங்கைக்கு இந்தியா அளித்தது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. அப்போது, பா.ச.க. ஆட்சி!
பா.ச.க.வும் காங்கிரசும் தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை எப்போதும் பொருட்படுத்தியதில்லை. தமிழ் நாட்டுடனான நட்பைவிட, இலங்கையுடனான “நட்புறவே” அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
தமிழர்களை அடக்கியும் ஒடுக்கியும் வைக்க, தானே நேரடியாக களத்தில் இறங்காமல், இலங்கையின் மூலம் அதைச் செய்ய துடிக்கிறது இந்தியா. இதன் வெளிப்பாடு தான் இந்தப் போர்க் கப்பல் வழங்கும் நிகழ்வும், இலங்கை - இந்தியக் கடற்படையிடையே “நல்லுறவு” பேணும் நடவடிக்கைகளும் என நாம் உறுதியாக நம்பலாம்.